சென்னை:
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் (வேதாந்தா) நிறுவனம் உச்சநீதிமன்றத்திற்கு சென் றால், நாங்களும் வழக்கிற்கு செல்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் செவ்வாயன்று (ஆக.18) செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார். செய்தியாளர்களின் ஒரு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “கொரோனா ஒழிப்பை பற்றி அரசு கவலைப்படாமல் உள்ளது. மருத்துவர்கள் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற தகவலை கூட வெளியிட மறுக்கிறார்கள். அர்ப்பணிப்போடு பணியாற்றும் மருத்துவர்களுக்கு கூட சம்பளத்தை வழங்காமல் உள்ளனர். பொதுப் போக்குவரத்தை அனுமதிக்காமல் டாஸ்மாக் கடைகளை மட்டும் அவசரமாக திறக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், “கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்ய வேண்டியது. மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றாக இணைந்து போராடி வருகின்றன. அந்த அணி தொடரும். தேர்தல் வரும் போது அணி எப்படி அமைகிறது, எந்தெந்த கட்சிகள் வருகிறது என்பதை அப்போது இறுதியாக முடிவு செய்யலாம். தேர்தலே வராத நிலையில் சொல்வது யூகமாக இருக்கும்.” என்றும் அவர் கூறினார்.இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் உடனிருந்தார்.