திரைக்கலைஞர் மனோஜ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், திரைக்கலைஞருமான மனோஜ், சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த சூழலில், நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரது மறைவுக்கு, திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:
“நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
சு.வெங்கடேசன் எம்.பி இரங்கல்:
“மரியாதைக்குரிய இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகன் திரைக்கலைஞர் மனோஜின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரது மறைவால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.”
சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் இரங்கல்:
“இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி (48) இன்று (25.03.2025) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.
கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ்மகால் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான மனோஜ் பாரதி தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னக்கொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் பணியிலும் முன்னேறி வந்த மனோஜ் திடீரென காலமான செய்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. முதுமை காலத்தில் கலங்கி நிற்கும் பாரதிராஜா ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியாத துயரமாகும்.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பதினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.”