tamilnadu

வீதி, தெரு பற்றி ஓர் எளிய தேடல்

நாட்டுப்புற கலைஞர்களுக்கான “வீதி விருது” விழா ஜனவரி மாதம் நடைபெறுகிறது . அதை ஒட்டி“மக்கள் வீதி” இதழின் மலர் வெளியிடப்போகிறோம். ஒரு கட்டுரை தாருங்கள் என்று பேராசிரியர் காளீஸ்வரன் கேட்டுக்கொண்டார். அவர்எப்போதும் புதுமையாக யோசிப்பவர். அவர் கேட்டதும் எனக்கும் ஏதாவது புதிதாக யோசிக்க வேண்டும் என்று தோன்றியது - கானமயிலாட கண்டிருந்த வான்கோழிபோல்.‘வீதி விருது’, ‘மக்கள் வீதி’ இதழ்,‘வீதி நாடகம்’ என்று சொல்லப்படுகிறதே.... வீதி என்ற சொல்லாட்சி முற்கால இலக்கியங்களில் இருக்கிறதா? என தேடினேன். இதற்கு உதவி செய்தது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள சங்க இலக்கியச் சொல்லகராதி. வீதி என்ற சொல்லே இந்த அகராதியில் இடம் பெறவில்லை. சரி, தெரு என்ற சொல்லாவது இருக்கிறதா என்று பார்த்தேன். வியப்பாக இருந்தது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனும்பதினெண்மேல்கணக்கு இலக்கியங்களில் 13, தெரு என்ற சொல்லாட்சியைக் கொண்டிருக்கின்றன.குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல் எனஎட்டுத்தொகை நூல்கள் ஏழிலும்சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, மலைபடுகடாஅம் என பத்துப்பாட்டு நூல்கள் ஆறிலும் 46 இடங்களில் தெரு என்று சொல் ஆளப்பட்டிருக்கிறது. வீதி என்ற சொல் சங்க இலக்கியங்களில் இடம் பெறவில்லை என்றாலும் அடுத்து தோன்றிய காப்பியங்களில் நிறையவே பயன்படுத்தப்படுகின்றன. 


“வண்ணமும் சுண்ணமும்   

தண்நறுஞ் சாந்தமும் 

பூவும் புகையும் மேவிய விரையும்

பகர்வனர் திரிதரு நகர வீதியும்”

“கூலம் குவித்த கூல வீதியும்”   

“கோவியன் வீதியும் கொடித்தேர்

           வீதியும்”

“அணிவளை போழுநர் அகன்பெரு

                         வீதியும்” 

“மேவிய கொள்கை வீதியிற்

               செறிந்தாங்கு”


சிலப்பதிகாரம், புகார்க்காண்டம், ‘இந்திரவிழவு ஊர் எடுத்த காதை’ யில்இவ்வளவு வீதிகள் இருக்கின்றன. இவை தவிர மதுரைக் காண்டத்திலும் வீதி என்ற சொல் பயின்று வருகிறது.இப்போதும் கூட மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலைச் சுற்றியுள்ளவற்றை நான்கு திசைகளின் பெயரோடுசேர்த்து மேல, கீழ, வடக்கு, தெற்குமாசி வீதி என்று அழைக்கப்படுவதைக் காணலாம். சில கோயில் நகரங்களிலும் கோயிலைச் சுற்றிலும் உள்ளவற்றை இதேபோல் திசைகளோடு சேர்த்து ரதவீதி அல்லது தேர் சுற்றி வரும் வீதி என்ற பொருளில் அழைக்கப்படுகின்றன.இவற்றைக் காணும் போது பெரும் திரளான மக்கள் கூடுகின்ற அல்லது வணிகம் செய்யப் படுகின்ற இடமே வீதியென அறியப்படுவதாகக் கொள்ளலாம். கோயில் சார்ந்த இடங்களைத் தவிர மற்ற இடங்களில் வீதி என்ற சொல் அதிகம் புழக்கத்தில் இல்லை. கடைவீதி போன்ற சொற்களும்கூட மெல்ல மெல்ல அருகி கடைத்தெரு எனும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இந்நாளில் நிறுவப்படும் பெருநகரங்களில் சொகுசான வீடுகள்அமையும் இடங்கள் ஆங்கிலத்தில் அவென்யூ (ஹஎநரேந) எனப்படுகிறது.இது தமிழில் நிழற்சாலை எனப்படுவதும் உண்டு.இவ்வழக்கு இல்லாத இடங்களில் மெயின்ரோடு என்றுஅகண்ட வீதிகளுக்குப் பெயரிடப்படுகிறது. இது பிரதானசாலை என்றும்முதன்மைச்சாலை என்றும் மொழியாக்கம் செய்யப்படுகிறது.நகரின் உட்புறப் பகுதிகளில் செல்லும் குறுகலான சாலைகள்தான் தெரு என்ற பெயரில் உள்ளன.இவற்றிலும் சிறியவை குறுக்குத்தெரு என்று கூறப்படுகிறது.அதற்கும் குறுகலான அல்லது அடுத்தப் பகுதிக்கு வழியில்லாத பகுதி சந்து என்று அழைக்கப்படுகிறது. தெரு என்பது இக்காலத்தில் புரிந்து கொள்ளப்படுவதுபோல் நகரின் உட்பகுதிக்குள் குறுகலாக இருந்ததா? இல்லை என்பதுதான் சங்கஇலக்கியங்களில் பதிலாகக் கிடைக்கிறது.


“யாறு கிடந்தன்ன அகல்

                  நெடுந்தெரு”

“தேர்வழங்கு தெருவில்       

      நீர்திரண்டு ஒழுக ”

என்று முல்லைப்பாட்டு வரிகள் கூறுகின்றன. 


தெரு என்பதை அகல்நெடுந்தெரு என்பதன் மூலம் அகண்டு நீண்டிருப்பது என்று குறிப்பிடுகிறார் புலவர்.அகலம் என்றால் எவ்வளவு? அடிக்கணக்கில் கூறாமல் “யாறு (ஆறு) கிடப்பதுபோல்” என்று உவமைகூறி நமது கற்பனைக்கே விட்டுவிடுகிறார்.தேரோட்டம் நடப்பதை ரதவீதி என்று இப்போது கூறுவதற்கு மாறாக, “தேர்வழங்கு தெரு” என்றே முல்லைப்பாட்டுக்காரர் சொல்கிறார்.“ஏர்தரு தெருவின் .....” (நற்றிணை)“பெருந்தெரு.....” (கலித்தொகை)“கடும்பாம்பு வழங்கும் தெருவில் .....”(குறுந்தொகை) இப்படித் தெரு என்பதைப் பல நிலைகளில் சங்க இலக்கியவாதிகள் வர்ணித்துள்ளனர். அப்படியென்றால் ஆதித் தொல்வழக்கில் வீதி என்பதற்கு மாறாகப் பேசப்பட்ட சொல் தெரு என்பதை நாம் உணர்கிறோம்.வீதி நாடகம் நடக்கும் அதே இடத்தில் கூத்து நடந்தால் யாரும் வீதிக்கூத்து என்று சொல்வதில்லை.தெருக்கூத்து என்றுதான் சொல்வார்கள். அதேபோல் கூட்டம் நடந்தால் அதனையும் வீதிக்கூட்டம் என்பதில்லை. தெருமுனைக்கூட்டம் என்றுதான் சொல்கிறோம் . வீதியும் தெருவும் ஒருபொருளன என்றாலும் இன்றைய வாழ்நிலையில் இவ்விரண்டு பெயர்களும் குறுகலான, போக்குவரத்து வசதி குறைந்த இடங்களுக்கு உரியவை ஆகிவிட்டன. எனினும் வீதி விழாவை தெருவிழா என்றோ மக்கள் வீதி என்பதை மக்கள் தெரு என்றோ கூறுவது பொருத்தமாக இருக்காது. அவை அப்படியேதான் இருக்கும். இருப்பினும் வீதி என்ற சொல்லினைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் ஏன் விட்டுவிட்டன என்பது பற்றி மேலும் ஆராயப்பட வேண்டும். அரசு நிர்வாக முறையில் வீதி என்ற சொல்லாட்சி பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது. நெடுஞ்சாலை, முதன்மைச் சாலை, நெடுஞ்சாலை எனப் பெரும் போக்குவரத்து உள்ள இடங்கள் பெயரிடப்படுகின்றன. இவை நவீனத்தின் வரவுகள் . இவற்றையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் !  


நன்றி : மக்கள் வீதி ஆண்டு மலர் 2019