சென்னை:
பாலியல் சீண்டல்களிலிருந்து மாணவிகளைப் பாதுகாப்பது தொடர்பாகவும் தமிழகம் முழுவதும் இத்தகைய புகார்கள் மீது அழுத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் குழந்தை உளவியல் நிபுணர்கள், குழந்தைகள் உரிமைகள் செயல்பாட்டாளர்கள், மாதர் அமைப்புகள், பெற்றோர் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:
சென்னை, பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஒரு குறிப்பிட்ட ஆசிரியர். மாணவிகளை தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்ததாக விவரங்கள் வெளிவந்து, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் அவ்வாறு நடந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.பொதுவாக, பெண்கள் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கும், துன்புறுத்தலுக்கும், வல்லுறவுக்கும் ஆளாக்கப்படுகிற கொடுமைகள் நடக்கின்றன. இச்சூழ்நிலையில் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடைபெற்ற பாலியல் சீண்டல் தொடர்பான புகார்கள் வந்த போது உடனடியாக தமிழக அரசு தலையிட்டு சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டிருப்பதும், மாநில அளவில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
ஆனால், கடந்த காலங்களில் இத்தகைய புகார்கள் எழுப்பிய போது அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல்பல கட்டப் போராட்டங்களுக்கு பிறகே குற்றமிழைத்தவர் களுக்கு தண்டனை பெறும் நிலைமை ஏற்பட்டது.உதாரணமாக, மதுரை பொதும்பு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் இத்தகைய பாலியல் சீண்டல் குற்றங்களில் ஈடுபட்ட பின்னணியில் களத்திலும் நீதிமன்றத்தின் மூலமாகவும் போராடி அவருக்கு 55 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதுபோல எண்ணற்ற உதாரணங்களை தர முடியும். சிவகங்கையில் ஒரு பள்ளியில் இதை தட்டிக் கேட்ட ஒரு பெண் ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு மாவட்ட கல்வித்துறை அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. ஆனால் குற்றவாளி பாதுகாக்கப்பட்டார். இப்படிப்பட்ட பலவழக்குகளில் தலையிட்டு நீதி கிடைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும்கடந்த காலத்தில் பலகட்டப் போராட்டங்களைநடத்தியுள்ளன.
பள்ளியின் பாதுகாப்பில் இருக்கக்கூடிய மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் நடைபெற்றால் அது கஸ்டடியில் நடந்த குற்றமாகவே கருதப்பட வேண்டும். இது தீவிரமான குற்றம் (aggravated sexual assault) என போக்சோ சட்டம் சொல்லுவதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள் பல ஆண்டுகளுக்கு உளவியல் ரீதியாக மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படும் நிலைமைகளை கவனத்தில் கொண்டு, அரசே இச்சம்பவங்களை தடுத்து நிறுத்திட வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம். புதிதாக பொறுப்பேற்றுள்ள தாங்கள் குறிப்பிட்ட சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல, தொடர்ந்து நடக்கும் இந்த அநீதியை தடுத்து நிறுத்தவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
# பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் குற்றம் செய்த ராஜகோபாலன் மீதான வழக்கை குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடித்திட வேண்டும்.
# புகார் கொடுக்க முன்வரும் மாணவிகளின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை பொது வெளியில் கசிய விடாமல் பாதுகாக்க வேண்டும்.
# பள்ளிக்கல்வித்துறைக்கு மாநில அளவிலும், மாவட்டங்களிலும் விசாகா தீர்ப்பு மற்றும் 2013 சட்டத் திருத்தங்களின்படி பாலியல் புகார் கமிட்டி அமைத்திட வேண்டும். மாணவர்-ஆசிரியர் பிரதிநிதிகளோடு இத்தகைய வழக்குகளில் தலையிட்டு போராடி இருக்கக்கூடிய பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், குழந்தைகள் உளவியல் நிபுணர்கள், குழந்தை உரிமைகள் செயல்பாட்டாளர்கள் ஆகியோரை இடம்பெறச் செய்ய வேண்டும். புகார் கமிட்டிஅமைத்த பிறகு அதில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மொபைல் எண், மெயில் ஐ.டி. விவரங்களை மாணவ-மாணவியர் மத்தியில் சுற்றுக்கு விட வேண்டும்.
# பாலியல் சீண்டல் குற்றங்களை தடுப்பதற்கு அல்லது நடந்த பிறகு முறையான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வராத நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
# ஆசிரியர்கள் மற்றும் இதர பள்ளி ஊழியர்கள் மத்தியில் பாலின நிகர்நிலை பயிற்சிகளை நடத்த வேண்டும். போக்சோ சட்டப் பிரிவுகள் குறித்தும் அவர்களுக்கு போதிக்க வேண்டும். பள்ளி நிர்வாகத் தரப்பினரும் அத்தகைய பயிற்சிகளில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
# ஒவ்வொரு பள்ளியிலும், போக்சோ சட்டத்தில் உள்ள முக்கியமான பிரிவுகள் பெரிய எழுத்துக்களில் இடம்பெற்றுள்ள போர்டுகள் வைக்கப்பட வேண்டும்.
# அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகள் ஜனநாயக இயக்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட கூட்டம் நடத்தி இப்படிப்பட்ட குற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கான கூடுதல் ஆலோசனைகளை உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.