tamilnadu

img

நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையம் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்த சுப்பிரமணியன் வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிடுக.... முதலமைச்சர் -காவல்துறை அதிகாரிகளுக்கு சிபிஎம் கடிதம்....

சென்னை:
நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு மரணமடைந்த சுப்பிரமணியன் வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். சுப்பிரமணியன் மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி ரூ. 30லட்சத்து 09 ஆயிரத்து 648 நஷ்ட ஈட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்திமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன், முதலமைச்ச ருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதத்தை ஆகஸ்ட் 16 அன்று சிபிஎம்சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி எம்.எல்.ஏ.,  தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நேரில் வழங்கினார். முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பட்டம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும்  ரேவதி என்பவரது கணவர் சுப்ரமணி கடந்த 2015 ஆம் ஆண்டு காவல்துறையினரால் ஒரு வழக்குவிசாரணைக்கு நெய்வேலி டவுன்சிப் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அப்போது அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ராஜா, மற்றும் காவலர்கள் செந்தில்வேல், சௌமியன் ஆகியோர் கூட்டாகசேர்ந்து மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியதில் அவர் மரணமடைந்தார். சுப்ரமணி மரணம் தொடர்பான வழக்கு (குற்ற எண் 269 / 2015)  சிபிசிஐடிகாவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணையும், கடலூர் மாவட்டம்சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் (S.C. No 95/2019) நடைபெற்று வருகிறது.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசார் மீது கொலை வழக்கு (302) பதிவு செய்வதற்கு மாறாக, 304 A II என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது முறையற்றதாகும்.கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர்கள் செந்தில்வேல், சௌமியன் ஆகியோர் வழக்கு துவங்கியநாள் முதல் இன்று வரை ஒரு நாள் கூட பணியிடை நீக்கம் செய்யப்படாமல் தொடர்ந்து பணியில் நீடித்து வருகின்றனர். வழக்கமாக கொலை குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் கைது செய்யப்படும் நடைமுறை இவர்கள் மீது மேற்கொள்ள ப்படவில்லை. அனைத்திற்கும் மேலாக இந்த குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் குற்றம் நடந்துள்ள அதே கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பணியில் நீடித்து வருகின்றனர்.

சாட்சிகளை மிரட்டும் போலீசார்
இதனால் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ரேவதி மற்றும் அவர்களது குடும்பத்தினர் கள், உறவினர்களையும் மிரட்டி வழக்கை வாபஸ்வாங்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். வழக்கின் விசாரணைக்கும் முறையாகஆஜராகாமலும், வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும் இழுத்தடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், சாட்சிகளையும் மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து ரேவதி கடலூர் மாவட்ட கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையில்லாததால்,  காவல்துறை தலைவருக்கும் (டிஜிபி) புகார் மனு அனுப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்ட ரேவதி தனக்கு நட்ட ஈடு வேண்டுமெனக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் அவருக்கு ரூ. 30,09,648/- நட்ட ஈடு வழங்கிட வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவினையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஆனால் தற்போது வரை அவருக்கு நட்டஈடு வழங்கவில்லை.எனவே தமிழக முதலமைச்சர்  இப்பிரச்சனையில் நேரிடையாக தலையிட்டு, கணவனை இழந்து தனது குழந்தைகளுடன் நிர்க்கதியாக நிற்கும் அபலைப் பெண்  ரேவதிக்கு உரிய நீதி கிடைப்பதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிந்திடுக!
1 .குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜா, செந்தில்வேல், சௌமியன் ஆகியோர் மீதுகொலை வழக்கு பதிவு செய்திட வேண்டும்.

2. வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சிகளை மிரட்டுவது, வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுப்பது போன்ற வகையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் இவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

3. இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தண்டனை பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

4.சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி இழப்பீட்டுத் தொகையான ரூ.30,09,648/-ஐ   ரேவதி அவர்களுக்கு உடன் வழங்கிட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

5.   தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு  திருமதி ரேவதிக்கும், அவரது குழந்தைகளுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பிரச்சனையில் காவல்துறை அதிகாரிகள் தலையிட வலியுறுத்தி காவல்துறை தலைவர் (டிஜிபி), ஏ.டி.ஜி.பி (சிபிசிஐடி), கட லூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.