tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

சென்னையில் போதைப்பொருள் வைத்திருந்ததாக 8பேர் கைது  

சென்னை, டிச.6- சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் நடவடிக்கையால் வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களோடு தொடர்பில் இருந்த சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்படி, இதுவரை போதைப்பொருள் வழக்குகளில் 29 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநகர காவல்துறை ஆணையர் அருண் உத்தரவின் பேரில் சென்னை மாநகர காவல்துறையினர் போதை பொருட்கள் புழக்கத்தையும் கடத்தலையும் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

போந்தவாக்கம் ஏரி உபரி நீரால்  சாலையில் வெள்ளம்:  வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர், டிச.6- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை கிராமத்தில் 3நாட்களுக்கு முன்பு பெய்த 9.3 செ.மீ. மழையால் அங்குள்ள ஏரி நிரம்பியது. அந்த உபரி நீர் வயல்கள் வழியாகப் பாய்ந்து அருகில் உள்ள போந்தவாக்கம் ஏரியைச் சென்றடைந்தது. போந்தவாக்கம் ஏரியும் நிரம்பியதால், அதன் உபரி நீர் தற்போது ஊத்துக்கோட்டை முதல் போந்தவாக்கம், பெரிஞ்சேரி வரை ரூ.20 கோடியில் அமைக்கப்பட்ட 4 வழிச் சாலையில், குறிப்பாகப் போந்தவாக்கம் ரவுண்டானாவில், பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏரியின் உபரி நீரால் நெல் பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் போந்தவாக்கம் ஏரிக்கால்வாய் தூர்வாரப்பட்ட போதும், அது சரிவரச் செய்யப்படாததால், உபரி நீர் கால்வாயில் செல்லாமல் சாலையில் செல்கிறது என விவசாயிகள் வேதனையோடு தெரிவித்தனர். எனவே, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போலி மருத்துவர் கைது

சென்னை, டிச.6- பெரம்பூரை சேர்ந்த வெங்கடேசன் (42) அண்ணாநகர் 2வது மெயின் ரோட்டில் கடந்த 2 வருடங்களாக ஆயுர்வேத மருத்துவமனை நடத்தி வந்தார். மருத்துவம் படிக்காமல் சட்ட விரோதமாக மருத்துவமனை நடத்தி வருவதாக புகார் வந்ததை தொடர்ந்து அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை பேராசிரியர் சுகுமாரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீதாராமன், அண்ணாநகர் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விசாரணையில் 10ம் வகுப்புகூட தேர்ச்சி பெறாத வெங்கடேசன் புத்தகங்கள், இதழ்கள், யூடியூப் வீடியோக்களை பார்த்து மருத்துவம் செய்ததும், வண்ணாரப்பேட்டையில் 15 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்ததும் தெரியவந்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

ரஷ்ய சில்லறை முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு

சென்னை, டிச.6- ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்பெர்பேங்க் மற்றும் ஜேஎஸ்சி ஃபர்ஸ்ட் அசெட் மேனேஜ்மென்ட் ஆகிய இரண்டும் இணைந்து புதிய பரஸ்பர நிதியை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த நிதி, தேசியப் பங்குச் சந்தையின்  முதன்மைக் குறியீடான நிஃப்டி 50 குறியீட்டின் செயல்பாட்டைப் பின்பற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரஷ்யாவைச் சேர்ந்த சில்லறை முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இது குறித்து ஸ்பெர்பேங்க்-இன்  தலைமை செயல் அதிகாரி ஹெர்மன் கிரெஃப் கூறுகையில்,இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய மற்றும் திறமையான நிதிசார் பாலத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்,” என்று தெரிவித்தார்.

நவீன கேமராவுடன் செல்போன்

சென்னை, டிச.6- விவோ இந்தியா தனது புதிய ஸ்மார்ட்போன்களான விவோ X300 மற்றும் X300 ப்ரோ-வை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 200MP Zeiss மிக துல்லிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, X300 ப்ரோ மாடல், Zeiss மிரோடார் டெலிபோட்டோ தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது தொலைதூரத்தில் உள்ள பறவைகளையும் துல்லியமாகப் படம்பிடிக்கும் திறன் கொண்டது. இந்த ஃபோன்கள் மீடியா டெக் டைண்ட் சிட்டி 9500 சிப் மற்றும்  ஆர்ஜின் OS 6 மூலம் இயங்குகின்றன.

ராணிப்பேட்டையில் பழங்குடி மக்களுக்கு  நல வாரிய அட்டைகள் விநியோகம்

ராணிப்பேட்டை, டிச.6- ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகள் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வெள்ளியன்று (டிச.5) வழங்கப்பட்டது. பழங்குடி மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட நல வாரிய அடையாள அட்டைகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாலாஜா தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் சங்க மாநில செயலாளர் இரா.சரவணன் பெற்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பழங்குடி மக்களிடம் நேரடியாக வழங்கினார். அடையாள அட்டைகளை பெற்ற பழங்குடி மக்கள் தங்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கு இது உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தனர்.  இந்த நிகழ்வின்போது விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ்.கிட்டு மற்றும் மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.