சிறுமி பாலியல் வன்கொடுமை: பாஜக நிர்வாகி, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 11 பேர் கைது
சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 11 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது 13 வயது சிறுமி உடன் தனியாக வசித்து வருகிறார். தற்போது வியாசர்பாடி சிறுமி சிக்னலில் பேனா, பென்சில் வாய்ப்பாடு, போன்ற பொருட்களை விற்று உடல் நலம் குன்றிய தனது தாயை காப்பாற்றி வருகின்றார். சிறுமியின் தாயின் அக்கா மகளான ஷாகிதா பானு என்பவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில் மதன்குமார் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஷாகிதா பானு தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் அதனால் தனக்கு உதவியாக தங்கையை அனுப்பி வைக்குமாறும் சிறுமியின் தாயாரிடம் கேட்டுள்ளார் இதைத்தொடர்ந்து பெரியம்மாவின் மகளான ஷாகிதா பானுவின் வீட்டுக்கு சிறுமி சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். இரண்டு மாதங்களுக்கு பின்னும் சிறுமி வராததால் அவரது தாய் அங்கு சென்று சிறுமியை கட்டாயப்படுத்தி அழைத்து வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததில் இருந்து சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் தாய் விசாரித்துள்ளார்.
அப்போது சிறுமியின் அக்காவான ஷாகிதா பானுவும், அக்காவின் கணவரான மதன்குமாரும் சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளியது தாய்க்கு தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் கடந்த 10ம் தேதி வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணையில் ஷாகிதா பானு அவரது கணவர் மதன்குமார் மற்றும் மதன் குமாரின் தங்கை சந்தியா ஆகியோர் சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும் மதன் குமாரின் நண்பர்கள் மற்றும் மதன் குமாரின் சகோதரியான சந்தியாவின் நண்பர்கள் என மாறிமாறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதில் பாஜக வடசென்னை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரனும் எண்ணூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளரான புகழேந்தியும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் புகழேந்தியை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய பாஜக நிர்வாகி ராஜேந்திரன், காவல்ஆய்வாளர் புகழேந்தி, ரயில்வே ஊழியர் காமேஸ்வரன் உள்ளிட்ட 11 பேர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.