சென்னை:
கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உட்பட 10 பேர் சனிக்கிழமையன்று வீடு திரும்பினர்.கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் அச்சப்பட வேண்டாம், மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளிப்பதாக குணமடைந்து வீடு திரும்பிய முதியவர் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக 34 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 13 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் சனிக்கிழமையன்று இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இன்னும் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி இதில் பெரும்பாலானவர்கள் தில்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் ஆவர்.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி கூறும்போது, இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் இவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறும், தொடர்ந்து யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட முதியவர் முகமது முபின் கூறுகையில், மருத்துவமனையில் ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்பட்டன. மருத்துவர்களும் செவிலியர்களும் உரிய முறையில் சிகிச்சை அளித்தனர். கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் அச்சப்பட வேண்டாம். மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளிப்பதாக தெரிவித்தார்.