தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த நிறைவேற்றிய சட்டத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்குத் தடை விதிக்க கோரி நவம்பர் 1 ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தமிழக சட்டத்துறை, தமிழ்நாடு உயர்கல்வித் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணையை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு 4 நாட்களாக நடத்தி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தள்ளிவைத்தது. இந்நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு ரத்து தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வராவ், பி.ஆர்.கவாய் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில், வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும். உள் இட ஒதுக்கீடு வழங்கும் போது அதற்கான சரியான நியாயமான காரணங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும். உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரமிருந்தாலும் சரியான காரணங்களைக் கூற வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.