கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிநாடு களில் பொதுமுடக்கம் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் உற்பத்தி ஆலைகளுக்கு ஏற்றுமதிக்கான உத்தரவு கள் கிடைக்கவில்லை என மாங்கூழ் உற் பத்தியாளர்கள் வேதனை தெரி வித்துள்ளனர். மாங்கனி உற்பத்தியில் கிருஷ்ண கிரி மாவட்டம் தமிழகத்தில் முதலி டத்தில் உள்ளது. இங்கு விளைவிக்கப் படும் மாங்காய்கள் கூழாக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை கள் உள்ளன. இதில் 25 தொழிற்சாலை கள் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன.
இங்கு தயாரிக்கப்படும் மாங்கூழ் வளைகுடா நாடுகள், மலேசியா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படு கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் மாங்கூழ் தயாரிப்பு சீசன் தொடங்குவது வழக்கம். தற்போது, கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போதிய ஏற்றுமதி உத்தரவு கிடைக்காமல் கிருஷ்ணகிரியில் உள்ள மாங்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் தவித்து வருகின்றன.
இதுகுறித்து, கிருஷ்ணகிரியில் உள்ள மாங்கூழ் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு 4 லட்சம் டன் மாங்காய் கொள்முதல் செய்யப்பட்டு, இரண்டரை லட்சம் டன் மாங்கூழ் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்டது. மீதமுள்ள மாங்கூழ் இருப்பு உள்ளது. தற்போது மாங்கூழ் தயாரிப்பு சீசன் நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ஏற்றுமதிக்காக உத்தரவுகள் இன்னும் வரவில்லை” என்றார். சில நாட்களாகவே மாங்காய்களை விவசாயிக ளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறோம். அண்டை மாநிலங்களில் மாங்காய்களுக்கு அரசே ஆதார விலையை நிர்ணயம் செய்கிறது. மாங்கூழ் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் விலையில், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டால், மீத பணத்தை அரசே விவசாயிகளுக்கு வழங்கிவிடுகிறது. இதனால் மாங்கூழ் நிறுவனமும், விவசாயிகளும் பாதிப்ப தில்லை. எனவே, அதே நடைமுறையை தமிழக அரசும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.