tamilnadu

img

இதைவிட புனிதமான கடமை வேறில்லை...

அக்டோபர் திங்கள் பதினேழாம் நாள் 1919ஆம் ஆண்டு பிறந்தவர் நம் எல்லோராலும் ‘ஏ.பி’ என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம். தேசபக்த குடும்பத்தை சேர்ந்தவர். தஞ்சை மாவட்டம் தான் பூர்வீகம் என்றாலும் மதுரை, திண்டுக்கல்தான் அவர் வாழ்ந்த இடம்.

1937-38ல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனது இறுதி ஆண்டு படிப்பு படித்துக்கொண்டிருந்த போது அங்கு நடந்த வீரஞ்செறிந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை கண்டு உத்வேகமடைந்த தோழர் ஏ.பி., அதே உணர்வுடன், திண்டுக்கல்லில் 1940இல் வழக்கறிஞராக தமது பணியை துவங்கிய போது, தமது தொழிற்சங்க பணியை திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு இடையே துவக்கினார். பின்தங்கிய நிலையில் இருந்த தோல் பதனிடும் தொழிலாளர்களை ஒன்று சேர்த்து தாழ்த்தப்பட்ட அந்த தொழிலாளர்களின் வாழ்க்கையோடு தன்னை இரண்டறப் பிணைத்துக் கொண்டார். காந்தி, நேரு போன்ற தலைவர்கள் தலைமையில் இருந்த காங்கிரஸின் தமிழக பிரிவுக்கு ராஜாஜி,காமராஜர் தலைமை தாங்கினர். இதனை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடிக் கொண்டிருந்தபோதுதான் தோழர் ஏ.பி., கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

அந்த காலத்தில் திண்டுக்கல் சவேரியார் பாளையம்,பின்னாளைய ஏபி நகர், மேரி தெரு போன்ற இடங்களில்இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் ஏ.பி. தலைமையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அணி திரண்டுள்ளனர். முக்கியமான பிரச்சனைகளை மக்களிடம் எடுத்துச்சென்று கட்சியின்நிலைப்பாட்டை விளக்குவதில் தோழர்ஏ.பி. முன்னுதாரணமாக திகழ்ந்தார். கடவுள் உண்டா இல்லையா; இந்தியாவா, திராவிடமா, தமிழகமா; காவேரி நம்ம காவேரி போன்ற பிரசுரங்கள் குழப்பத்திற்கு இடமின்றி கட்சியின் நிலைப்பாட்டை தக்க விபரங்களோடு தெளிவுபடுத்தியவை.

தொழிலாளர் வர்க்க ஒற்றுமை
15.6.1969-இல் தீக்கதிரில் எழுதிய கட்டுரையில் “வேலை இல்லா திண்டாட்டத்தை எதிர்த்து தொழிற்சங்க இயக்கம் நடத்தும் கிளர்ச்சி, முதலாளி வர்க்கம் முழுவதையும் அதன் அரசையும் எதிர்த்து நடத்தும் கிளர்ச்சி ஆகும்; தொழிலாளிவர்க்கம் முழுவதும் பிரம்மாண்டமான மாநில ரீதியான கிளர்ச்சிகள், அகில இந்திய போராட்டங்கள் மூலமே தனது இலக்கை சாதிக்க இயலும்; இதற்கு தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான ஒற்றுமை அவசியம். இன்று நடக்கும் மூர்க்கத்தனமான தாக்குதலை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் முழுவதும் ஒரே அணியில் திரண்டு நின்று போராடி ஆகவேண்டும். தேவையான இந்த ஒற்றுமையை வளர்ப்பது இன்றைய அவசர அவசியக் கடமையாகும். இந்த ஒற்றுமைக்கு உதவாதவர்கள், குறுக்கே நிற்பவர்கள் முதலாளி வர்க்கத்திற்கு துணை நிற்கின்றனர் என்றே பொருள். தொழிற்சங்க இயக்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள், சிறிதளவேனும் வர்க்க உணர்வு பெற்றுள்ள தொழிலாளர்களை சமூக வேறுபாடுகளையும் கட்சி வேறுபாடுகளையும் மறந்து வேலை செய்யும் இடங்களில் கிடைக்கும்ஒவ்வொரு வினாடி நேரத்தில்கூட இந்த ஒற்றுமையை கட்டுவதற்கு அயராது பாடுபட வேண்டும். இதை விட புனிதமான கடமை வேறு எதுவும் இல்லை; இருக்கவும் முடியாது”என தோழர் ஏ.பி, குறிப்பிட்டுள்ளார். 1954 - 64 கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் தொழிற்சங்க இயக்கத்தையும் வர்க்க சமரசம் செய்து கொள்ளாத வகையில் சரியான பாதைக்கு கொண்டு வந்த  முக்கியமான தலைவர்களில் ஒருவர் ஏபி என்று, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மறைந்த மகத்தான தலைவர் ஏ.நல்லசிவன் குறிப்பிடுகிறார்.

மதச்சார்பற்ற அரசு
மதச்சார்பற்ற அரசு என்றால் என்ன என்பதை, ஒரு உரையில் தோழர் ஏ.பி. எளிமையாக விளக்குகிறார் ‘மதச்சார்பற்ற’ என்றால், ‘சர்வ மத பிரச்சாரம்’ என்று தான் மக்கள்புரிந்து இருக்கிறார்கள்.  இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசைப் பொறுத்தமட்டில் அதற்கு மதம் இல்லை;அரசு அலுவலகத்திலோ அல்லது அரசுத் துறையில் எங்கேயோ கடவுள்படம் இருப்பதற்கு இடமளிக்கக்கூடாது; சர்க்கார் சிப்பந்திகள் விரும்பினால் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்வது சரியல்ல. அவர்கள் விரும்பினால் கூட வைத்துக் கொள்ளக் கூடாது என்று கொள்கை ரீதியாக,கோட்பாடாக சொல்லிவிடவேண்டும்.அகில இந்திய ரேடியோவில் ஆத்திகர்களுக்கு பாதி, நாத்திகத்திற்கு பாதி என்று நேரம் கொடுப்பார்களா? படங்களை அகற்ற வேண்டும் என்று சொன்னால் எதிர்ப்பு உண்டாக்கப்படும் .ஆனால் அந்த எதிர்ப்பை கண்டு அஞ்சத்தேவையில்லை அந்த எதிர்ப்பை சமாளிக்க வேண்டும்” என்று 1968ல் சட்டமன்றத்தில் பேசியவர் தோழர் ஏபி.

நாம் புரட்சியாளர்கள்
“தேர்தல் வரும்; மாறுதல் வரும் என்று காத்திருந்து அதுவரை செத்து சுண்ணாம்பாகிறார்கள் மக்கள். புதிதாக ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து சில அற்ப சொற்ப சலுகைகளை அளிக்கலாம்; புதிய சட்டங்கள் சிலவற்றை இயற்றலாம். அவை இன்று நிலவும் சமூக அமைப்புக்கு முலாம் பூசஉதவலாம், அவ்வளவே! .அந்த புதிய சட்டங்கள் நல்லவையாக இருந்தால் சுரண்டலின் கொடுமையை ஓரளவு கட்டுப்படுத்த உதவலாம். சுரண்டலை ஒழிக்க உதவாது. அவ்வாறு மக்கள் போராடிப் பெறும் வாய்ப்புகளை நாம் வரவேற்போம். ஆனால் அவற்றையே சொர்க்கம் என்று வர்ணித்து மக்களை ஏமாற்ற மாட்டோம். உங்களது போராட்டங்களால் கிடைத்த சலுகைகள் உங்களுக்கு தெம்பூட்டும் நம்பிக்கை ஊட்டும். அந்த தெம்புடனும் நம்பிக்கையுடனும் சுரண்டல் அமைப்புக்கே முற்றுப்புள்ளி வைக்கும் புரட்சிப்போருக்கு தயாராகுங்கள் என்று மக்களுக்கு சொல்லுவோம்; எங்களது அடிப்படைக் கண்ணோட்டம். இந்த சமூகஅமைப்பில் அமலில் இருக்கும் சட்டத்துக்கு தெய்வீகத் தன்மையை அளித்து அதன் படிதான் ஒழுக வேண்டும் என்பவர்கள் எவ்வளவு பெரியவர்கள் ஆயினும் புரட்சியாளர்கள் அல்ல” என்று “நாம் புரட்சிக்கு வக்காலத்து வாங்குபவர்கள்” என்ற பிரசுரத்தில் பளிச் பளிச் என எழுதுகிறார் தோழர் ஏ.பி. இப்படி எண்ணற்ற விஷயங்களை தொழிலாளர் வர்க்கத்தின் சிந்தனையில் விதைத்த ஏ.பி. அவர்களின் தன்னடக்கம் அலாதியானது. மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் பணிபுரிந்த தோழர் ஏ.பி. அவர்கள், கட்சியின்மாநிலச் செயலாளராக, மத்தியக்குழு உறுப்பினராக, அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக உயர்ந்தார். தன்னுடைய இறுதிக் காலம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக அவர்களுடைய அடிப்படைத் தேவைக்காக ஸ்தாபனத்தை வலுவாக அமைப்பதற்காக தொடர்ந்து பாடுபட்டார்.

 தோழர் ஏபி கட்சிக்காகவே வாழ்ந்தார், கட்சிக்காகவே உயிர்நீத்தார். இத்தனை மகத்தான தலைவர் தோழர் ஏபி அவர்கள் மறைவதற்கு முன்பு கடைசியாக  1981 ஆகஸ்ட் 26ஆம் தேதி திண்டுக்கல் நகரில் நடந்த கூட்டத்தில் சில நிமிடங்கள் பேசினார். இந்திய நாட்டின் சுதந்திரம் காக்க, இந்திய நாட்டின் ஒற்றுமை காக்க, நாட்டின் ஜனநாயகத்தை காக்க நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முதலாளி வர்க்கத்தின் கையில் ஆட்சி இருக்கக்கூடாது; பாட்டாளி மக்களின் கைக்கு ஆட்சி மாறியாக வேண்டும் அதற்கு பாட்டாளி மக்கள் ஒன்றுபட்டு நாட்டில் உள்ள உண்மையான தேச பக்தர்களை தங்களோடு இணைத்துக் கொண்டு ஒரு இடதுசாரி போக்கில் உள்ள ஜனநாயக அணியை நிறுவ வேண்டும்; இந்த பெரிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நம்மைப் போன்ற பல்வேறு இடதுசாரி சக்திகள் இணைந்து செயலாற்ற வேண்டிய காலம்வந்துவிட்டது; இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்என்று தன்னுடைய இறுதி உரையில் பேசினார். இதுவேஅவர்  பேசிய கடைசி பொதுக்கூட்டம் ஆகும். மகத்தான தலைவர் ஏ.பி 5.9.1981ல் மறைந்தார். அவரது தன்னலமற்ற வாழ்க்கையையும் போராட்ட உணர்வு நிறைந்தஇடைவிடாத உழைப்பையும் முன்னுதாரணமாக கொண்டு அவர் விட்டுச் சென்ற பணிகளை நாம் அனைவரும் நிறைவேற்றுவதற்கு நாம் உறுதி கொள்வோமாக!

கட்டுரையாளர்  : ஜி.ராணி, சிபிஐ(எம்) மாவட்ட செயற்குழு ,உறுப்பினர், திண்டுக்கல்