கல்வி என்பது எப்போதுமே அதிகாரத்துடன் உறவு கொண்டிருப்பதாகவே இருந்திருக்கிறது. ஒரு சமூகத்தில் யார் அதிகாரத்தைக் கைக்கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான் கல்வியின் விளைவு களையும், உள்ளடக்கங்களையும் தீர்மானிக்கிறார்கள் என்கிறார் பாவ்லோ ஃபிரெய்ரே.
மத்தியில் ஆளக்கூடிய மோடி அரசாங்கத்தால் தேசிய கல்விக்கொள்கை 2020 வெளியிடப்பட்டுள்ளது. மிகத்தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வரும் தனியார்மயக் கொள்கைகள் தேசிய கல்வி கொள்கையிலும் பிரதிபலிப்பதுஏதோ எதேச்சையாக அல்ல. தாராளமயமாக்கல் கொள்கையின் தீவிரமான அமலாக்க முயற்சி கல்வியிலும் திட்டமிட்டு நடக்கிறது. எந்த ஒரு அரசும் கல்விக் கொள்கையை உருவாக்கும் போது தன்னுடைய வர்க்க நலனை அடிப்படையாகக் கொண்டுதான் தயாரிக்கிறது. இதனையே வரலாறுநெடுகிலும் கல்வி வழங்கப்படுகிற முறை எடுத்தியம்புகிறது. எதிர்கால வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கான மிக முக்கியமான அம்சமாக கல்விக் கொள்கை அமைந்துள் ளது. நாளைய சமூகத்தை கட்டமைக்க சாதனமாக உள்ள கல்வியை வேலைவாய்ப்பு சந்தை, வர்க்க நலன் என்பதோடு ஆளும் வர்க்கம் பின்னிப் பிணைத்துள்ளது.
இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்தியாவின் முதல் கல்வி கொள்கை; வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக அல்ல, “வேலை தருபவர்களை உருவாக்குவதை” நோக்கமாகக் கொண்ட கல்விக் கொள்கை; இந்தியாவை ஒரு புதிய தளத்திற்கு எடுத்துச் செல்லும் கல்விக்கொள்கை என தமது அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.
ஆனால் உண்மை என்ன?
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. நான்காம் கட்ட தொழில் புரட்சி என வர்ணிக்கப்படுகிறது.இதற்கு தேவையான பொருத்தமான பணியாளர் களை உற்பத்தி செய்வதற்கு அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டியுள்ளது. அதைத்தான் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக மோடி அரசும் தற்சமயம் மேற்கொண்டு வருகிறது. அறிவுசார் தளங்களில் உலகம் மிக விரைவான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. அதை முன்னிறுத்தும் புதிய கல்விக் கொள்கை, பெரும் தரவு, இயந்திர வழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அம்சங்களை முன்வைக்கிறது.இக்கொள்கையில் தனித்திறன் தேவையில்லாத பல்வேறு பணிகள் இயந்திரங்களால் செய்யக் கூடியதாக மாறிவிடும் என்று குறிப்பிடுவதுடன், அறிவியல், சமூக அறிவியல், மானுடவியல், கணிதம், கணினி அறிவியல் மற்றும் தரவு அறிவியல் ஆகிய பல்துறை கூட்டு திறன்கொண்ட பணியாளர்களுக்கான தேவை அதிக அளவு ஏற்படும் என்று முன்னுரையிலேயே குறிப்பிட்டுள்ளனர். அதனடிப்படையில் தேசிய அரசு மற்றும் ஏகாதிபத்திய அரசு ஆகிய இரண்டிலும் கொள்கை உருவாக்கத்தில் தனது அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி 2030-2040ஆம் வருடங்களில் வரப்போகும்எதிர்கால உழைப்பு சந்தையின் தேவையை பூர்த்தி செய்வதற்கு ஏற்றவகையில் வடிவமைத்துள்ளனர்.
புதிய சூழலில் வேலைவாய்ப்பு...
உலகம் முழுவதும் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏராளமான மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இதனால் வேலைவாய்ப்பு என்பது மிகுந்த நெருக்கடி உள்ளதாக மாறியுள்ளது. 2014ஆம் ஆண்டு பில்கேட்ஸ் “தொடர்ந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், தற்போது உள்ளதை விட எதிர்காலத்தில் குறைந்த திறன் கொண்டவர்களாக தொழிலாளர்கள் இருந்தால் போதுமானது” என்று குறிப்பிட்டுள்ளார். முகநூல் அதிபர் மார்க் ஜூகர்பெர்க் “தொழில்நுட்ப வேலையின்மை என்பது 21 ஆம் ஆண்டில் உலகத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்” என்கிறார். இத்துடன் தானியங்கிமயமாக்கம், இயந்திர மனிதர்களுடைய வருகை, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், பெரும் தரவு ஆகியவற்றின் காரணமாக வேலைவாய்ப்பு மேலும் மேலும் சுருங்கக் கூடிய நிலை ஏற்படும். இப்போது உள்ள வேலையில் 75 சதவீதத்தை வெட்டி குறைப்பதாக எதிர்காலம் அமையும் என மதிப்பிடப்படுகிறது. தற்சமயம் உள்ள வேலைகளில் 47% எதிர்காலத்தில் காணாமல் போய்விடும். தொடர்ந்து செய்யக்கூடிய ஒரே மாதிரியான வேலையை செய்வது எனில் அவ்வேலை எதிர்காலத்தில் இருக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள்.
உலகமயம் உருவாக்கிய தகவல் தொழில்நுட்ப யுகம் பயன்பாடு என்பதையும் தாண்டி புலம்பெயர்ந்த தொழில்நுட்ப தொழிலாளர்களை உருவாக்கும். இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் பணியாற்றக்கூடியவர்களின் எண்ணிக்கை (tele migration) அதிகரிக்கும். இத்துடன் தொழில்நுட்ப வளர்ச்சியால் வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், மருத்துவர்கள், விற்பனை பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பணிகளை செயற்கை நுண்ணறிவு, தானியங்கி இயந்திர மனிதர்களின் துணையோடு செய்வதற்கான முறையில் அனைத்து முயற்சிகளும் வேகமாக நடந்து வருகின்றன. தொழில்நுட்பம் என்பது வேலைவாய்ப்பை விட வேகமாக வளர்ந்து வருகிறது.
இயந்திர மனிதர்களின் வருகை
இயந்திர மனிதர்களின் வருகை மற்றும் தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகள் இல்லாத எதிர்காலத்திற்கான சவாலாக மாறியுள்ளது. 1858ஆம் ஆண்டு காரல்மார்க்ஸ் தன்னுடைய “அரசியல் பொருளாதாரத்திற்கான ஒரு கருத்துரை” எனும் நூலில் “இயந்திர பொறியமைவிற்கு தொழிலாளி உயிருள்ள ஒரு உதிரி இணைப்பாக மாறி விடுகிறார்” என்று கூறியது எத்தனை பொருத்தமானது என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளலாம். இந்நிலையில் அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களின் வளர்ச்சியில், எதிர்கால வேலைவாய்ப்பு சந்தைக்கு எத்தகைய திறன் வாய்ந்த மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்? அதனை எப்படி உருவாக்கு வது? என்பதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கை முன்வைக்கப்படுகிறது. ஒருபுறம் பல்வேறு திறன் களை கொண்ட வல்லுனர்களையும், மறுபக்கம்குறைந்த திறன்களை மட்டும் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களையும் உருவாக்குவதற்கு ஏற்ப கல்விக் கொள்கை என்பது சந்தையின் தேவையை ஒட்டி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு சுகாதார பணியாளர்கள், தரவு ஆய்வாளர்கள், தகவல் பொறியாளர்கள் மற்றும் நிரலாளர்கள், இணைய பாதுகாப்பு படையினர், விற்பனை ஆலோசகர்கள், இயந்திர மனிதர்களை பராமரிக்க மற்றும் நிரலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாற்று ஆற்றல்துறை வல்லுனர்கள், ஓவியர்கள், பொருட்களை வடிவமைப்பவர்கள், உருவாக்குவது மற்றும் விற்பனை செய்பவர்கள், ஆன்மீக ஆற்றுபடுத்துநர்கள் ஆகியோர் சந்தைக்கு தேவைப்படுகின்ற பன்முகத் திறன் வாய்ந்த பிரிவினர்கள் ஆவார்.
சுதந்திரம் பெற்ற போது ஐடிஐ, அதன்பின்னர் பாலிடெக்னிக்,தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளையும் அரசு உருவாக்கியது. தற்சமயம் ஆளும் அரசு பல்துறை கூட்டுத் திறன் கொண்ட பணியாளர்களை பயிற்றுவிக்க கூடிய ஐஐடியை கட்டுவதற்குத் தான் முக்கியத்துவம் தருகிறது. இதிலிருந்து கல்விக்கொள்கையின் அடிப்படையானது, எதை நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பளிச்சென அறிய முடியும்.
கற்பித்தல் முறை...
இன்றைய புதிய சூழலில் என்ன கற்பது? எப்படி கற்பது? யாருக்காக கற்பது? என்ற அம்சங்கள் முன்னுக்கு வந்துள்ளன. இதனை மையமாகக் கொண்டு பார்த்தால் “எங்கிருந்தாலும் மூலதனத்தின் தேவைகளுக்கு அந்த நபரை தயார்ப்படுத்துவதற்கான உரிய கல்வியை அரசு வடிவமைக்கும்” என்று பேரா.பிரபாத் பட்நாயக் கூறுவது பொருத்தமாக அமைகிறது.எனவேதான் இக்கொள்கையை அமலாக்குவதற்கு அதிகாரம் கூடுதலாக தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் கருத்து கேட்க மறுத்த அரசாங்கம் வலுவான நிர்ப்பந்தங்களும், போராட்டங்களும் எழுந்த பின் கருத்து கேட்க வந்தது.ஆனால் கேட்ட ஒட்டுமொத்த கருத்துக்களையும் புறக்கணித்துவிட்டு நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்காமல் அமல்படுத்துகிறது. இந்த தேசிய கல்விக் கொள்கை யில் பிரதானமான குறைபாடு என்பது எல்லாரையும் உள்ளடங்கிய கல்விக் கொள்கையாக இல்லாமல் பல்வேறுபிரிவினரையும் வெளியே தள்ளுவதாக அமைந்துள்ளது. இதனால் இடைநிற்றல் அதிகரிக்கும் என்ற குரல் வலுவாக எதிரொலிக்கிறது.
குருகுல கல்வி முறையைப் போல தொழில் கல்வியை கொண்டு வரவும் இக்கொள்கை தீவிரமாக அமலாக்கப்படுகிறது. எதிர்கால வேலை வாய்ப்பு சந்தைக்குதேவையான குறைந்த தொழிலாளர்களை வழங்குவதற்கான முறையிலேயே ஏராளமான தேர்வுகளை கொண்ட வடிகட்டி முறை உருவாக்கப்பட்டுள்ளது. தேர்வு என்பது மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கே என்பதற்கு மாறாக, கல்வியில் இருந்து வெளியேற்ற கருவியாக மாறுகிறது.
கற்றல் என்பது எப்படி?
கற்றல் என்று வரும்போது இரண்டு வழிகளை முன்மொழிகிறது. ஒன்று ஆசிரியர் மூலமாகவும், மற்றொன்று மெய்நிகர் வழியாகவும் (ஆன்லைன்) வழி காட்டுகிறது. முதல் வழிமுறைதான் கல்வி சமூக பகிர்வை எதிர்கால தலைமுறைக்கு வழங்கும்.ஏற்றத்தாழ்வு மிக்க இந்திய சமூக அமைப்பில் நவீன தொழில்நுட்ப முறையில் கற்கும் மெய்நிகர் வகுப்பறை (virtual classroom) என்பது பாரபட்சமானதாகவும், பாகுபாடு நிறைந்ததாகவும் அமைந்திருக்கும். எனவே இதில் புறக்கணிப்பு தான் மிகுந்திருக்கும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எதிர்கால வேலைவாய்ப்புக்கு ஏற்ற முறையில் கல்விக் கொள்கையை உருவாக்குவது, கல்விக் கொள்கைகள் மூலம் கல்வித்துறையில் உருவாகும் வேலைவாய்ப்புகளை பரிசீலிப்பதும் முக்கியமான இரண்டாவது அம்சமாகும்.
கல்வியில் வேலைவாய்ப்பு
உலகம் முழுவதும் வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய துறையில் கல்வித்துறையும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கல்விக் கொள்கையின் வாயிலாக 6 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நிதி ஒதுக்கீடு இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகளில் இதுவரை சரி பாதி அளவு கூட ஒதுக்க வில்லை என்பதுதான் நிதர்சனமாகும். நிதி ஒதுக்கீடு இல்லாமல் இக்கொள்கை அமல்படுத்தமுடியாது. எனவே அரசு, தனியார்- கூட்டு பற்றி பேசுகிறார்கள். இதனால் பெரும் பகுதி மக்களுக்கு எவ்விதமான பலனும் ஏற்படப்போவதில்லை. தனியார்கள் பங்களிப்பு என்று வரும்போது இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி பறிக்கப்படும் என்பதுதான் எதார்த்தமான நிலை ஆகும்.
இக்கல்விக் கொள்கையின் மூலமாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் என்பது ஒன்று “தன்னார்வலர்கள்”. இது, காவல்துறையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மூலமாக சேவாபாரதி அமைப்பைச் சார்ந்தவர்கள் செயல்பட்டதை போல தான் இருக்கும். கல்வி வழங்க தன்னார்வலர்கள் இந்த பணிகளில் ஈடுபடுவார்கள்.
தனியார் லாபம் பெற உத்தி...
அரசு கல்வி நிலையங்களில் உள்ள வளங்களை தனியார் பள்ளிகளிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு மாற்றாக, தனியார் பள்ளி ஆசிரியர்கள், அரசுப் பள்ளிகளில் ஒரு குறைந்த நேரம் பணியாற்றுவார்கள் என்பது போன்ற அம்சங்கள் புதிய பணியிடங்களை மறுப்பதாகும். மறுபுறம் அரசின் வளங்களை பயன்படுத்தி கொண்டு தனியார் நிறுவனங்கள் தன்னுடைய லாபத்தை பெருக்கிக் கொள்வதற்கான ஏற்பாடாகும்.இதற்கு மாறாக அரசு நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பள்ளி கல்வி முறையை பலப் படுத்துவதன் மூலமாக ஏராளமான ஆசிரியர் பணியிடங்களை கல்வித் துறையிலே உருவாக்க முடியும். பள்ளிக்கல்வி 1:20, கல்லூரி கல்வி 1:12 என்று வரையறை செய்து பணியிடங்களை உருவாக்கினால் கல்வியின் அடித்தளம் வலுவாகவும், ஆழமான கற்றல் நடவடிக்கையும், திறன் வளர்ப்பையும் மேற்கொள்ள முடியும். தற்சமயம் உள்ள நிதி ஒதுக்கீட்டில் ஒரு சதவீதம் உயர்த்தினாலே 50 லட்சம் வேலைவாய்ப்புகளை கல்வித்துறையில் உருவாக்க முடியும். கடந்த சில ஆண்டுகளின் முயற்சியில் கேரளாவில் 5 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
இத்துடன் கல்விமுறையை 10 +2 +3 என்று இருப்பதை 5+3+3+4 முற்றிலும் மாற்றியமைப்பது, கல்வி வளாகம் அமைப்பது போன்றவை ஆசிரியர் பணியிடங்களை உருவாக்குவதை தவிர்ப்பதற்கான அம்சங்களே ஆகும். இந்த அம்சம் கல்வி வளர்ச்சியிலும், கல்வித் துறையிலுள்ள வேலைவாய்ப்பிலும் மிகப்பெரிய பின்னடைவாக அமையும். புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக சமஸ்கிருத ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலான எண்ணிக்கையில் உருவாக்கப்படும். இதனால் யாருக்கு பலன் என்பதை வெட்டவெளிச்சமாக அறியமுடியும். அதேபோல இக்கல்வி கொள்கை முன்வைக்கக்கூடிய மெய்நிகர் வகுப்பறை என்பது தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சந்தைப்படுத்தும் வாய்ப்பினை உருவாக்கும். கடந்தகாலங்களில் கல்வியின் வாயிலாககிடைக்கப்பெற்ற வேலைவாய்ப்புகளும், இக் கொள்கையினால் மறுக்கப்பட்டு பின்னோக்கி இழுத்து செல்லும் நிலைமை உருவாகும்.
இன்றைய தேவை
ஒரு நாட்டின் எதிர்காலத்தை வகுப்பறை தீர்மானிக்கும் என்பார்கள். எல்லோருக்கும் கல்வி கற்பதற்கான சமமானவாய்ப்பை உருவாக்குவதற்கும், அதன்மூலம் சிந்தனைரீதியாகவும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு மான முயற்சிகளை செய்ய வேண்டும். எல்லோருக்கும் விஞ்ஞானப்பூர்வமான, இலவசமான கல்வி கிடைப்பதற்கு முழு முயற்சியும் தேவையாகிறது. மனிதவளம் செழிப்புள்ள நமது நாட்டில் அதனை கல்வி மற்றும் அறிவியல்தொழில்நுட்ப ரீதியாக வளர்த்தெடுத்து, சமூகத்தின் சகல பகுதியினரும் வளமான வாழ்க்கை வாழ்வதற்கான கல்விக் கொள்கையே இன்றைய தேவையாகும். ஆனால் சுதந்திர போராட்ட காலத்தில் உருவான விடுதலை வீரர்களின் கனவு நனவாக இந்த புதிய தேசிய கல்வி கொள்கை 2020 ஒருபோதும் உதவாது.எனவே தான், மத்திய மோடி அரசாங்கம் உருவாக்கி யுள்ள இக்கல்வி கொள்கை என்பது ஆலகால விஷம் தோய்ந்த கொடும் அறிக்கையாகும்.
கட்டுரையாளர்: எஸ்.பாலா - மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்