tamilnadu

img

மின்துறையை சீரழித்த பாஜக - அதிமுக அரசுகளை வீழ்த்துவோம்!

இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழில் வளர்ச்சிக்கு, விவசாய அபிவிருத்திக்கு அடிப்படை காரணியாக மின்சாரம் உள்ளது என்றால் மிகையல்ல. நவீன மனிதகுல வளர்ச்சிக்கு எரிசக்தி இன்றியமையாதது என்பதை உணர்ந்து சுதந்திர இந்தியாவில் மின் துறையின் மீது அதிக கவனமும், மின்சார உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த காரணத்தினால் தான் இன்றைக்கு இந்தியாவின் மின் உற்பத்தி 3,44,689 மெகாவாட்டாக உயர்ந்து உள்ளது. இதில் மாநிலங்கள் மூலம் 84627 மெகாவாட்டும் (24.6 சதவீதம்), மத்திய நிறுவனங்கள் மூலம் 1,02,926 மெகாவாட் (29.9 சதவீதம்), தனியார் நிறுவனங்கள் மூலம் 1,57,136 மெகாவாட்டாக (45.6 சதவீதம்) இந்திய மின் உற்பத்தி அமைந்துள்ளது.


விந்தையிலும் விந்தை


இந்திய மின் உற்பத்தி 3,44,689 மெகாவாட்டாக உயர்ந்த பொழுதும் இந்திய மின் நுகர்வோர்களின் உச்சகட்ட தேவை 1,75,560 மெகாவாட் இருந்த போதிலும் இந்தியாவில் மின் பற்றாக்குறை என்பது 8 முதல் 13 சதவீதம் வரை உள்ளது என்பது தான் விந்தையிலும் விந்தையாக உள்ளது.இந்திய மின்உற்பத்தி தேவையை விட அதிகமாக இருந்த போதிலும் மத்தியில் ஆளும் அரசுகளின் சரியான திட்டமிடாத போக்கும், நிர்வாக திறமை இன்மையே இந்திய மின் பற்றாக்குறைக்கு காரணமாக உள்ளது.மாநில மின் தேவைகளுக்கு ஏற்ப மின் உற்பத்தியை இந்திய நாட்டில் பரவலாக திட்டமிடாத போக்கும், ஓர் இடத்தில் உற்பத்தி செய்த மின்சாரத்தை தேவையான இடத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏற்ப மின் தொடரமைக்கு திட்டமிடாத நிலையுமே இன்றைக்கு மின் பற்றாக்குறைக்கு காரணமாக அமைந்துள்ளது. 


பொதுத்துறை சூறை


நவீன தாராள மயக்கொள்கை அமலாக்கம் என்ற பெயரால் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பது, பொதுத்துறையை தனியார் மயமாக்குவது என்பதை மத்தியில் ஆளும் பாஜக அரசு மின்னல் வேகத்தில் அமல்படுத்தி வருகிறது. 1995-ஆம் ஆண்டில் இருந்து 2018-ஆம் ஆண்டு முடிய கடந்த 23ஆண்டுகாலத்தில் 3,62,686 லட்சம் கோடி பொதுத்துறைப் பங்குகள் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 209,896 லட்சம் கோடி பொதுத்துறை பங்குகள் சூறையாடப்பட்டுள்ளது என்பதிலிருந்து பொதுத்துறையை முற்றிலும், தனியாரின் கொள்ளைக் காடாக மாற்ற எடுக்கும் முயற்சி தெற்றன தெரிகிறது.பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது, பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் ஆதிக்கத்தை அதிகப்படுத்துவது என்பது மின்துறையில் முழுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு கூறும் புள்ளி விவரங்களை பார்க்கும் போதே இந்திய நாட்டின் மொத்த உற்பத்தி திறனான 3,44,689 மெகாவாட்டில் 1,57,136 மெகாவாட் தனியார் ஆதிக்கத்தின் கீழ் சென்றதோடு மட்டும் அல்லாமல், இந்த திட்டம் காலம் முடிவடைவதற்குள் தனியார் மூலம் மின் உற்பத்தி திறன் 1,75,200 மெகாவாட்டாக உயரும் நிலையில் இந்திய மக்களின் உச்சகட்ட மின் தேவையை தனியாரின் ஆதிக்கத்திற்கு கொண்டு செல்வதில் மத்திய அரசு வெற்றி கண்டுள்ளது.



தனியாருக்கு ஏற்ப மாறும் கொள்கை


தனியார் உற்பத்தி செய்கின்ற மின்சாரத்தை மின்சார சந்தையில் விற்பதற்கு ஏற்ப அரசின் கொள்கைகளும், சட்டங்களும், பார்வைகளும் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. உதாரணத்திற்கு மாநில அரசுகள் தங்களது மின் பற்றாக்குறையை சமாளிக்க மின்சார சந்தையில் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் போது அரசு சார்ந்த மின் உற்பத்தி நிறுவனங்கள் (சூகூஞஊ நிறுவனங்கள்) குறைந்த விலைக்கு மின்சாரத்தை விற்க முன் வந்த போதிலும் அந்நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு பதிலாக குறுகியகால, நீண்டகால ஒப்பந்தங்கள் என்ற பெயரால் தனியாரிடமிருந்து மின்சாரத்தை பெற வேண்டிய கட்டாய நிலையை உருவாக்கி வருகின்றது. இது சூகூஞஊ போன்ற நிறுவனங்களை சவக்குழிக்கு தள்ளி விடுகின்ற ஏற்பாடாக அமைந்துள்ளது. இதனால் தேசிய அனல் மின் உற்பத்தி கழகம் பல மாநிலங்களில் புதிய மின் நிலையங்களை அமைக்க திட்டமிட்டதை இன்றைக்கு ரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தியில் தனியாரின் ஆதிக்கத்தை திட்டமிட்டு அதிகரிக்கச் செய்து அரசு சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களை அழிக்கின்ற செயலை மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்து வருகிறது.


மின் உற்பத்தியில் தனியாரின் ஆதிக்கத்தை திட்டமிட்டு வளர்த்த மத்திய அரசு அதோடு தன் வேட்கையை நிறுத்திக் கொள்ளாமல் மின் விநியோகத்தையும் தனியாரின் மேய்ச்சல் காடாக மாற்றுவதற்குண்டான ஏற்பாடாகத்தான் மின் விநியோக சட்டதிருத்தத்தை நாடாளுமன்றத்தில் அரங்கேற்றுவதற்குண்டான முயற்சியில் ஈடுபட்டது. மின் விநியோக மசோதா சட்டமாக்கப்பட்டால் இலவசம், மானியங்கள் மூலம் மின்சாரம் பெறுவது, என்பது முற்றிலும் அகற்றப்படுவதோடு கிராமப்புற மின்மயமாக்கல் என்பதெல்லாம் கேள்விக்குறியாக மாறும்.மின்உற்பத்தியும் மின் விநியோக கட்டமைப்பும் தனியாரின் ஆதிக்கத்தின் கீழ் சென்று விட்ட பின்னர் நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் கடந்த பின்னரும் 75893 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு மின்சாரத்தை கொண்டு சென்று விடுவேன் என்று மோடி அறிவிக்கும் அறிவிப்புக்கள் எல்லாம் ஏட்டிலே இருக்கும் அறிவிப்புக்களாக இருக்குமே தவிர நடைமுறைக்கு வரும் அறிவிப்புகளாக மாற வாய்ப்பேதும் இல்லை.நவீன தாராள மயக்கொள்கை அமலாக்களின் அடுத்த அம்சமாக அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கையை வெட்டி சுருக்குவது என்பது ஒரு நடவடிக்கையாகும். அது இந்திய மின்சாரத் துறையையும் விட்டு வைக்கவில்லை.


நிரந்தரத் தொழிலாளர்  எண்ணிக்கை வீழ்ச்சி



இந்திய மின்துறையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். மத்திய அரசின் கொள்கை அமலாக்கம் என்ற பெயரால் மின்சாரத் துறையில் பணியாற்றும் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை திட்டமிட்டு குறைப்பதில் பாஜக அரசு வெற்றி கண்டுள்ளது. 10 லட்சமாக இருந்த நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை இன்றைக்கு ஏழு லட்சமாக குறைக்கும் நடவடிக்கை அரங்கேற்றப்பட்டுள்ளது.நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது அந்த பணி இடங்களில் ஒப்பந்த அவுட் சோர்சிங் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு சட்டத்தில் சொல்லப்பட்ட எந்த சலுகையும் அளிக்காமல் உழைப்புச் சுரண்டலை முழுமையாக அரங்கேற்றி வரும் அரசாக பாஜக அரசு திகழ்கிறது.தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு மத்தியில் ஆளும் பாஜக அரசின் அடிமைகளாக ஆகிவிட்ட நிலையில் மின்சாரத்துறையில் மத்திய அரசு பின்பற்றும் கொள்கைகளை முழுமையாக அமல்படுத்தும் அரசாக செயல்பட்டு வருகிறது. மின்சார உற்பத்தியில், மின் விநியோகத்தில், தனியாரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு செல்ல அத்துணை நடவடிக்கைகளையும் எடுத்து வரும் அரசாக உள்ளது.


மின் மிகை மாநிலமா தமிழகம்?


தமிழகத்தில் மின் உற்பத்திக்கும் தேவைக்கும் ஒரு இடைவெளி இருந்தபோதிலும் தமிழகம் மிகை மின் மாநிலம் என்ற தவறான செய்தியை மின்துறை அமைச்சரும், தமிழக முதலமைச்சரும் தொடர்ந்து பறைசாற்றி வருகின்றார்.தமிழகத்தின் கோடை கால மின் தேவை என்பது 16300 மெகாவாட்டை தொடும் நிலைக்கு சென்றுள்ளது. ஆனால் மின் வாரியத்தின் நேரடி உற்பத்தி என்ற முறையில் 7142 மெகாவாட்டும், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 6312 மெகாவாட், இரண்டும் சேர்ந்து 13455 மெகாவாட் என்பது தான் நிலையான ஆதாரத்தின் மூலம் உற்பத்தி செய்வதாகும்.தமிழகத்தின் தேவையோ 16000 மெகாவாட்டை தொட்டுவிட்ட போது தமிழகத்தில் நிலையாக கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 10500 மெகாவாட்டாகும் இடைவெளியை ஈடு செய்ய சுமார் 5800 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட கால ஒப்பந்தம், குறுகிய கால ஒப்பந்தம், தேவையின் அடிப்படையில் ஒப்பந்தம் ஆகியவைகளின் மூலம் மின்சாரத்தை அநியாய விலை கொடுத்து மின்சார சந்தையில் வாங்கி மின்துறையின் கஜானாவை காலி செய்வதே இன்றைய மின் தேவையை எதிர்கொள்ளும் லட்சணமாகும்.


அரசின் மெத்தனமே வீழ்ச்சிக்கு காரணம்


தமிழகத்தின் மின் தேவைக்கு ஏற்ப மின்சாரத்தை உற்பத்திச் செய்யும் மின் நிலையங்கள் அமைக்க திட்டமிட்ட போதிலும் திட்டமிட்ட எந்த மின் நிலையமும் குறிப்பிட்ட காலத்தில் கட்டுமானப் பணிகளை முடித்து உற்பத்தியைத் துவங்கும் நிலை உருவாகவில்லை. இதற்கு காரணம் தமிழகத்தை ஆளும் அரசின் மெத்தனப் போக்கே ஆகும். திட்டமிட்ட மின் நிலையங்கள் அனைத்தும் 2020க்கு முன்னர் உற்பத்தியை துவங்கக்கூடிய நிலையில் இல்லை. நிலைமை இப்படி இருக்க தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை மூடி மறைக்க மிகை மின் மாநிலம் என்ற பொய்யான வாதத்தை முன்வைத்து மின் வெட்டை திணிக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது.தமிழக மின் வாரியம் ஒரு பக்கத்தில் மின் பற்றாக்குறை மாநிலமாக திகழ்கின்ற அதே நேரத்தில். மின் உற்பத்தி திட்டங்களை அமலாக்குவதில் மெத்தனம் காட்டுவதோடு மின் நிலையங்கள் அமைப்பதில் ஒப்பந்தக்காரர்களுக்கு சலுகைகளை அதற்கு சன்மானமாக வாரி வழங்கி பல கோடி ரூபாய்களைப் பெற்று ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் அரசாகவே உள்ளது.மின்சார சட்டம் 2003க்கு ஒரு பகுதியான திறந்தவெளி மின் பரிமாற்றக் கொள்கை தமிழகத்தில் வேகமாக அமலாகி வருகின்றது. தமிழக மின் வாரியத்தின் வருவாய்க்கு அடிப்படையாக உள்ள உயர் அழுத்த மின் நுகர்வோர்களில் சரிபாதி எண்ணிக்கை மின்வாரியத்திடமிருந்து மின்சாரத்தை பெறுவதை கைவிட்டு தனியாரை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக மின் வாரியத்தின் வருவாய் இழப்பு என்பது ரூ.3000 கோடி அளவிற்கு எட்டியுள்ளது. இந்நிலை தொடரும் போது மின் வாரியத்தின் வருவாய் வெகுவாக குறைந்து மின்வாரியத்தின் செயல்பாடும் ஒட்டு மொத்தமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தனியார் ஆதிக்க முயற்சிகள்


தமிழகத்தில் மின்சார உற்பத்தியில் தனியாரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு செல்வதில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் பெரும் வெற்றி காண முடியாத நிலையில் மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகள் மேற்கொள்கின்ற வகையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் மின் விநியோகம் செய்ய தனியாருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மின் விநியோகத்தில் தனியாரின் ஆதிக்கம் மேலோங்குகின்ற நிலையில் மின்வாரிய வருவாயும் செயல்பாடும் வெகுவாக பாதிப்பு ஏற்படும் நிலை எழுந்துள்ளது. உயர் அழுத்த மின் நுகர்வோர்கள், வணிக மின் நுகர்வோர்கள் தனியாரை நோக்கி செல்லும் நிலையில் மானிய விலையில் மின்சாரமும் இலவச மின்சாரம் பெறும் மின் நுகர்வோர்களுக்கு மட்டும் மின் விநியோகம் செய்யும் நிறுவனமாக மின்வாரியம் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.


சீரழிவை நோக்கி


மின் துறையில் மின்சார சட்டம் 2003, மின்சார கொள்கை 2005, மின்விநியோக சட்டதிருத்தம் போன்றவைகளை மேற்கொள்ளும் போது மின் விநியோகத்தில் போட்டி ஏற்படும். நிர்வாக திறமை அதிகரிக்கும். மின் கட்டணத்தின் விலை வெகுவாக குறையும் என்று மத்திய, மாநில அரசுகள் வெகுவாக பறைசாற்றி வந்தது.மேற்கூறிய கொள்கைகளை அமலாக்கத்தை பரிசீலிக்கின்ற போது நிர்வாக திறமையோ போட்டியோ மின் கட்டண குறைவோ ஏற்படவில்லை என்பதுதான் கண் கூடாக நிகழ்ந்துள்ளது. அதனால் மின் நுகர்வோர்களும், மின்வாரிய தொழிற்சங்கங்களும் பிரித்த மின்வாரியங்களை ஒன்றாக இணையுங்கள் என்ற முழக்கம் அழுத்தமாக ஓங்கி எழும் நிலை ஏற்பட்டுள்ளது.மத்தியில் ஆளும் பாஜக அரசோ,அதன் கட்டளைக்கு இணங்க தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுக அரசோ மேற்கூறிய கொள்கைகளை அமலாக்குவதில் வெறித்தனமாக செயலாற்றி வருவதனால் மின்துறை சீரழியும் திசையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டுள்ளது.


தூக்கி எறிவோம் வாரீர்


மின்துறை சீரழிகின்ற போது தொழில் வளர்ச்சியோ, பொருளாதார முன்னேற்றமோ, விவசாய அபிவிருத்தியோ கேள்விக்குறியாக மாறும் மாற்றத்தை உருவாக்க வேண்டுமானால் மத்தியில் ஆளும் பாஜக அரசும், மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசும் அகற்றப்பட வேண்டியவைகளாகும். அதற்கான முயற்சியை இந்திய நாடு முழுவதும் லட்சக்கணக்கான மின்வாரிய ஊழியர்களும் அதன் ஒரு பகுதியாக உள்ள ஆயிரக்கணக்கான தமிழக மின்வாரிய ஊழியர்கள், மத்தியில், மாநிலத்தில் அரசுகளை தூக்கி எறிவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் வாரீர்.


கட்டுரையாளர் : தலைவர்/தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு