tamilnadu

img

கொரோனா காலத்தில் பெண் தலைமைகள்! - கவிதா கஜேந்திரன்

இனி வரும் உலகில் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான மேலும் பல நோய்கள் தோன்றவிருக்கின்றன. வெறுப்பு அரசியல் பெருந்தொற்றாக பரவ இருக்கிறது. உழைக்கும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் கொடூரமாக கட்டவிழ்க்கப்படவிருக்கிறது. இயற்கை ஈவிரக்கமில்லாமல் அழிக்கப்படவிருக்கிறது. அந்நோய்களுக்கான தீர்வு ஆண் மையக் கலாசாரத்தைப் போற்றி வளர்க்கும் - அதற்கு அடிப்படையாக இருக்கும் நிலபிரபுத்துவ - முதலாளித்துவ அமைப்பு முறையில் இல்லை.

ஏப்ரல் மாத ஊரடங்கின் போது நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா (Jacinda) முகநூலில் ஒரு மனநல ஆலோசகருடன் நேரலையில் உரையாடிக் கொண்டிருந்தார். தனது நாட்டு மக்களும் குழந்தைகளும் ஊரடங்கினால் வீட்டில் அடைபட்டு இருப்பதால் அவர்கள் எதிர்நோக்கும் மனநலப் பிரச்சனைகள் பற்றிய கேள்விகளை மக்கள் சார்பாக கேட்டுக்கொண்டிருந்தார். ஜெசிந்தாவின் கேள்விகளும் மனநல ஆலோசகரின் பதில்களும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு முகநூல் நேரலையாக ஒளிபரப்பாகியது. தொற்றின் மையமான சீனாவின் மிக அருகில் இருக்கும் தைவான் டிசம்பர் மாதத்திலேயே தன் எல்லை களை மூடியது. அதிக அளவில் பரிசோதனை, தடமறிதல் மற்றும் சிகிச்சை என கொரோனா தொற்றின் எண்ணிக்கை யை கட்டுக்கோப்பில் கொண்டு வந்த ஜனாதிபதி சாய் இங்-வென் (Tsai Ing-Wen), ‘உலக நாடுகள் தொற்றில் இருந்து மீண்டால்தான் தைவானும் முழுமையாக மீள முடியும்’ எனக் கூறி ஒரு கோடி முகக் கவசங்களை ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பி உதவிக் கொண்டிருந்தார்.

ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக அளவிலான கொரோனா பரிசோதனையை மேற்கொண்டிருக்கும் ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் , கொரோனா தொற்று பரவும் அளவுகோலையும் கொரோனா பரவலை தடுக்க அரசு முன்னெடுத்திருக்கும் உத்திகளையும் தெளிவாக அறிவியல் கண்ணோட்டத்துடனும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து தெரியப்படுத்திக் கொண்டிருந்தார்.  நியூசிலாந்து, தைவான் மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளுக்கும் முக்கியமான ஒற்றுமைகள் இரண்டு இருக்கின்றன. மூன்றுமே கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியிருக்கின்றன என்பது முதல் ஒற்றுமை. மூன்று நாடுகளின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது பெண்கள் என்பது இரண்டாம் ஒற்றுமை. 

பெண் தலைமைகள் மட்டுமே தொற்றை சரியாக கையாண்டார்கள் என எந்தத் தரவுகளும் நிச்சயமாக இல்லை. வியட்நாம்,  சீனா, தென் கொரியா, நியூயார்க் நகர  கவர்னர் மற்றும் இந்தியாவின் பினராயி விஜயன், நவீன் பட்நாயக் போன்ற பல ஆண் தலைவர்கள் தலைமை யிலான அரசுகள் கொரோனா தொற்றை திறமையாக எதிர்கொண்டிருக்கின்றனர். இருப்பினும் விரல் விட்டு எண்ணும் அளவில் மட்டுமே தலைமைப் பொறுப்புகளில்  இருக்கும் பெண்களிடமிருந்து வரும் வெற்றிகரமான நடவடிக்கைகளை நாம் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். ஆட்சி அதிகாரத்திலேயே இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் ஊடகவெளி என்பது நம் சமூகங்களில் எப்போதும் போல குறைவுதான். வரலாறு முழுக்க ஒடுக்கப்பட்ட பாலினமாக இருந்து வந்து, ஒரு கட்டத்துக்குப் பிறகு மேலெழுகையில் அவர்கள் என்னவாக எழுந்தார்கள் என்பதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படி சொல்வதி லிருந்துதான் அடுத்த கட்டங்களிலிருக்கும் பெண்களுக் கான நம்பிக்கை ஒளி அணையாமல் தொடரும். அந்த கட்டங்களிலிருக்கும் ஆண்களேனும் பெண்களை சமமாக நடத்திடும் வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும்.

தைவான்
கொரோனா பரவத் தொடங்கிய நாட்களிலிருந்தே பரவலின் வீரியத்தை புரிந்து கொள்வதும் அதை அறிவியல்பூர்வமாக அணுகுவதும் மூவரின் செயல்பாடாக வும் இருந்தது. கொரோனா தொற்றின் ஒவ்வொரு நிலையிலும் அடுத்த கட்டங்களை முன் அனுமானித்து தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். பெரும் எண்ணிக்கையிலான பரிசோதனைகள், தரமான மருத்துவ சிகிச்சை, தொற்றின் தடமறிதல் மற்றும் சமூகக்கூடுகைகள் மீதான கட்டுப்பாடு ஆகியவற்றை செயல்படுத்திக் கொண்டேயிருந்தனர். தொற்று முதலில் அறியப்பட்ட மையமான சீனாவின் அருகில் இருப்பதால், தைவான் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்க வேண்டும். ஆனால் ஆகவில்லை. தைவான் ஜனாதிபதி சை இங்- வென் டிசம்பர் மாதத்திலேயே வுஹானிலிருந்து வரும் விமானங்களை ரத்து செய்கிறார். தொற்றுக் கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்குகிறார். பாது காப்பு உபகரணங்களின் தயாரிப்புகளை உள்நாட்டிலேயே துரிதப்படுத்துகிறார். சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் இருந்து வரும் விமானங்களை ரத்து செய் கிறார். மே மாதம் வரையிலான தைவானின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 438. பலி எண்ணிக்கை ஆறு.

ஜெர்மனி
குவாண்டம் வேதியியல் படிப்பில் முனைவர், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்! அவரின் முப்பது ஆண்டுகால அரசியல் அனுபவம், நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட அறிவியல் மற்றும் சுகாதார கட்டமைப்புகள், மக்களின் நம்பிக்கை போன்றவை ஜெர்மனி நாட்டின் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை களை மேம்படுத்தியது. மெர்கெலின் உணர்ச்சிவசப்படாத நிதானமான செயல்பாடு தெளிவாக தொற்றுப் பரவலை கையாண்டது. 2008ம் ஆண்டின் பொருளாதாரச் சரிவு காலத்தில் அமல்படுத்தியிருந்த “Kurzarbeit” (குர்சார் பெய்ட்)என்ற குறைந்த வேலை நேரத் திட்டத்தை, தொற்றுக் காலத்தில் மீண்டும் கொண்டு வந்தார் மெர்கெல்.

இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு குறைந்த வேலை நேர ஊதியமாக மூன்றில் இரண்டு பங்கு கொடுக்கப்பட்டது. அந்த செலவையும் அரசாங்கமே ஏற்றது. குர்சார்பெய்ட் திட்டம் பெருமளவு வேலை இழப்பை கட்டுப்படுத்தி வேலையின்மை சதவிகி தத்தை மேலும் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்கிறது. ‘ஒரு கட்டத்தில் நாட்டின் 70% மக்கள் தொற்றுக்குள்ளா வோம்!’, ‘இது 1945க்கு பிறகு நாம் சந்திக்கும் பெரும் சவால்’ என்றெல்லாம் மக்களை எச்சரித்துக் கொண்டே இருந்தார் மெர்கெல். தொற்றின் இரண்டாம் மையமான ஐரோப்பிய நாடுகளின் நோய் தொற்று மற்றும் உயிரிழப்பு விகிதத்தில் ஜெர்மனி நாடு கண்ட உயிரிழப்பு விகிதம் பன்மடங்கு குறைவு. அதற்கு மெர்கெல் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம்.

நியூசிலாந்து
39 வயதே ஆகும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டென் கொரோனா காலத்தில் தனது நேரலைகள் மூலம்  மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிக் கொண்டிருந்தார். நியூசி லாந்து நாடு தொற்றின் ஆரம்ப நிலையில் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போதே, நான்கு வார கால ஊரடங்கை  ஜெசிந்தா அறிவித்தார். ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்னரே வேலைக்காக சென்று வேறு நகரங்களில் சிக்கியிருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிட அவகாசம் கொடுத்தார். பின்பு ஒவ்வொரு கட்ட மாக ஊரடங்கை விரிவாக்கி, நான்காம் நிலை ஊரடங்கை முழுமையாக அறிவித்தார். ஒவ்வொரு நிலையிலும் ‘Eliminate Strategy’ என்னும் ‘கொரோனாவை நீக்கும் உத்தி’யை அமல்படுத்தினார்.  மார்ச் மாத ஆரம்பத்திலேயே, மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோரின் ஆலோசனைப்படி, நியூ சிலாந்து நாட்டின் மொத்த மக்கள்தொகையும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எல்லைகளும் விமான நிலையங்களும் மூடப்பட்டது.

தொற்று பரவிய தடம் கண்டறியப்பட்டது. பெரு மளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மே மாதம் தொடங்கியபோது, புதிய கொரோனா பாதிப்பு ஏதும் இல்லா மல் இருபது என்கிற பலி எண்ணிக்கையுடன் நியூசிலாந்து நாட்டில் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. ஜெசிந்தாவின் தெளி வான பேச்சும் அனுதினமும் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புகளும் மக்கள் மத்தியில் ‘தாங்கள் நம்பகமான தலைமையின் கீழ் உள்ளோம்’ என்ற உணர்வை ஏற்படுத்தியது. உலகத் தலைவர்களில் பெண்கள் வெறும் 7% தான் என்றிருக்கையில் மூன்று நாட்டு பெண்  தலைவர்களும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் எட்டியிருக்கும் வெற்றி கவனத்திற்குரியது.  இவர்கள் தங்கள் நாடுகளில் கொரோனா தொற்றை வெளிப்படையாகவும் வெற்றிகர மாகவும் கையாண்டதன் விளைவாக பெண்கள் மத்தியில் பெருநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இம்மூவரைப் போலவே, ஸ்காண்டிநேவிய நாடு களான ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே போன்ற வற்றின் பெண் பிரதமர்களும் கொரோனா பரவலை தெளி வான அறிவியல் கண்ணோட்டத்துடன் எதிர்கொண்டு கட்டுப் படுத்தியிருக்கிறார்கள். கேரளாவின் சுகாதார செயலாளர் சைலஜா டீச்சரைப் போலவே தென்கொரியாவின் நோய் தடுப்பு மையத் தலைவர் ஜியோங் இயூன்-கியோங் (Jeong Eun-Kyeong), கொரோனா தொற்றுப் பரவலை கண்கா ணித்தார். கொரோனா பரவல் உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையிலும் கூட கடந்த ஏப்ரல் மாதத்தில் பாதுகாப்பான முறையில் தென்கொரிய தேர்தல்  நடக்க முடிந்ததெனில் அதற்குப் பின்னால்  ஜியோங்கின் உழைப்பு உள்ளது.

பெண் தலைமைகளின் வெற்றிக்கு காரணம் என்ன?
அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற பல நாடுகளின் ஆண் தலைமைகள் அறிவியல் தன்மையற்ற வலதுசாரி தலைமைகளாகவும் முதலாளித் துவ அரசு இயந்திரத்தின் கடுமையான ஒடுக்குமுறைகளை இந்த கொரோனா காலத்திலும் மக்களிடையே கட்ட விழ்த்துவிடும் நிலையிலும், வெறும் 7 சதவிகிதத்தில் இருக்கும் பெண் தலைமைகளின் பெரும்பான்மை கொரோ னா தடுப்பில் அடைந்திருக்கும் வெற்றிக்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.  அடிப்படையில் பெண்ணை சமூகத்தின் முக்கிய மான பங்காக கொள்ளும் கலாச்சாரங்களும் வாழ்க்கை முறைகளும் இருக்கும் நாடுகளில் பெண் தலைமை களுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அச்சமூகமும் அதனளவில் பரிவுணர்வும் கூட்டுத்தன்மையும் பொதுநல அக்கறையும் இன்னபிற சமூகங்களை விட கூடுதலாகவே பெற்றிருக்கும்.

கொரோனா போன்ற நோய்களை சிறப்பாக கையாள்வதில் கூட்டுச் சமூகத்தின் அடிப்படைக் கூறுகளாகிய அக்கறையும் பரிவும் அதிகாரத்துக்கு அவசியத் தேவைகள். கடுமையான, கலக்கம் கொள்ள மறுக்கிற, வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டி ருக்கிற, ஆண்மை என போற்றப்படுகிற விஷயங்கள் பெருநோய்ச் சூழலை இன்னும் அவதியாக்கும் வாய்ப்பு களே அதிகம். ஆகவே கொரோனா போன்ற ஒரு தொற்று நோயை எந்த பாலினம் சரியாகக் கையாளும் என விவாதிப்பதற்கு பதிலாக எந்த மாதிரியான உளவியல் சரியாகக் கையாளும் என ஆராய்ந்தாலே விடை கிடைத்துவிடும். சாதி, மத, இன எல்லைகள் கடந்து வரலாறு நெடுக ஒடுக்கப்பட்ட பாலினம் பெண். தாய் வழிச் சமூகம், பெண் தலைமை கொண்ட இனக்குழுக்கள் போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டும் நம் சமூகம், பெண்ணை ஆணின் கட்டளைக்கு அடி பணிபவளாகவே கட்டமைக்கிறது. காலங்காலமாய் பெண்மை, தாய்மை, தூய்மை என பாசாங்கு மகுடங்கள் சூட்டப்பட்டு சுரண்டப்பட்டுக் கொண்டிருந்த பெண், கடந்த இரண்டு தலைமுறைகளில் அரசியல் போராட்டங்களின் துணை கொண்டு கல்வியை வென்றெடுத்து அறிவியல் பார்வைக்கு மிக நெருக்கமாகி, தன்னை இதுநாள்வரை மறைத்திருந்த பொய்த்திரைகளை விலக்க துவங்கியிருக்கிறாள்.

கூட்டுச் செயல்பாட்டின் அடையாளம்
தென்னாப்பிரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராக பணிபுரியும் ஆலிஸ் ஈக்ளி (Alice Eagly), பாலின வேறுபாட்டால் மாறும் தலைமைப் பண்பு பற்றிய கேள்விக்கு, “முக்கியமான விஷயங்களாக நான் கவனித்தது அனைவரையும் பங்கு பெறச் செய்து முடிவெடுக்கும் பெண்ணின் இயல்பும்” ஆணிடமிருக்கும் ஒற்றை உத்தரவு சர்வாதிகார இயல்பும்’ என பதிலளிக்கிறார். ஜனநாயகப்பூர்வமாக பலருடன் கலந்துரையாடி தீர்வுகளை ஆலோசிக்கும் தன்மை அதிகமாக பெண் தலைமைகளிடம் இருப்பதாக சொல் கிறார். மேலும் பெண்களின் தலைமைகள் செயல்படுகை யில் கூட்டாக செயல்படும் தன்மையும் அக்கறையும் செயல்பாட்டின் அடிநாதமாக இருப்பதாகவும் குறிப்பிடு கிறார். அப்படியெனில் பெண் தலைமைகளில் பிரச்சனைக்குரியவர்களே இருப்பதில்லையா?

இருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உண்டு. ஆணாதிக்க அரச அராஜகங்களுக்கு ஒரு படி மேலோங்கியே அத்தகைய பெண்களின் அரசுகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.  ஆண் கட்டமைத்திருக்கும் பண்பாடு மற்றும் சம்பிரதாயக் கூறுகளையும், ஆணாதிக்க வரைமுறைகளையும் அறுத்து, வெளிவரும்போது, பெண்களுக்கு கையகப்படுவது ஆண் கட்டியெழுப்பி வைத்திருக்கும் கட்டமைப்புதான். அவன் உருவாக்கிய ஒடுக்குமுறை அரசியல் அதிகாரம்தான். தங்கள் இருப்பை காத்துக்கொள்ளவும், மேம்படுத்தவும் அதே கட்டமைப்பை உபயோகப்படுத்துகையில் அப்பெண்கள் வெளிப்படுத்தும் அதிகாரம் அவர்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நீட்சியாகவே அமைந்தும் விடுகிறது.  ஆண் மையக் கலாசாரம் கொண்ட நாடுகளில் இருந்தா லும் கல்வி, சமத்துவம், அறிவியல் கொண்ட சிந்தனை புலத்தில் இருந்து மேலெழும் வாய்ப்பை பெண்கள் பெறுகையில், ஆணின் ஒடுக்குமுறைகளையும் கட்டமைப்பையும் உடைத்து வெளியேற முடிகிறது.

ஒவ்வொரு அடியிலும் அடிப்படை மனிதத்தோடு பரிண மிக்க முடிகிறது. ஆண் மைய எதேச்சதிகார பாணிக்கு பலியா காமல் கூட்டுத்தன்மை செயல்முறைகளின் ஊடாக ஜனநாயகப்பூர்வமாக ஒவ்வொரு தளத்திலும் செயல்படுவதால், சொற்பமான எண்ணிக்கையில் அதிகாரங்களில் இருந்தாலும் பெண்களால் பொதுநல நோக்குடன் சிந்திக்க முடிகிறது. சிறப்பாக நிர்வகிக்க முடிகிறது. மக்கள் மனதில் நிலைத்து நிற்க முடிகிறது. கொரோனா தொற்றை வெற்றியுடன் கையாளும் பெண் தலைமைகளோ, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தை வழி நடத்திய இந்தியப் பெண்களோ, அனைவருமே தாங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளில் புதைந்திருக்கும் மனிதத்துக்கான நெருக்கடிகளை தாமத மின்றி அடையாளம் கண்டு, தீர்வை முன்வைக்கிறார்கள். அதில் வெளிப்படையாகவும் உண்மையாகவும் இருப்பது அவர்களை வெற்றி வாகை சூடவும் வைத்துவிடுகிறது.

இனி வரும் உலகில் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான மேலும் பல நோய்கள் தோன்றவிருக்கின்றன. வெறுப்பு அரசியல் பெருந்தொற்றாக பரவ இருக்கிறது. உழைக்கும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் கொடூரமாக கட்டவிழ்க்கப்படவிருக்கிறது. இயற்கை ஈவிரக்கமில்லாமல் அழிக்கப்படவிருக்கிறது. அந்நோய்களுக்கான தீர்வு ஆண் மையக் கலாசாரத்தைப் போற்றி வளர்க்கும் - அதற்கு அடிப்படையாக இருக்கும் நிலபிரபுத்துவ - முதலாளித்துவ அமைப்பு முறையில் இல்லை. ஆண்மையச் சிந்தனையை வரித்தெடுத்து பிரநிதித்துவப்படுத்தும் பெண்களிடமும் இல்லை. 

சுதந்திரமான பெண் சிந்தனைக்குள்ளேயே - அதற்கு அடித்தளமிடும் புரட்சிகர சமூக மாற்றத்திலேயே -  மெய்யான மக்கள் விடுதலை இருக்கிறது.
கட்டுரையாளர்:  பெண்ணுரிமை செயற்பாட்டாளர்