tamilnadu

img

நெருப்பை சீண்டும் பாசிச சக்திகள்...

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம்  வடகிழக்கு தில்லியில்  நடந்த மதக்கலவரங்களை விசாரிக்கும் தில்லிகாவல்துறை இந்த கலவரங்களுக்கு காரணமானவர்களின் பட்டியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது. மேலும் சுவராஜ் அபியான் தலைவர்  யோகேந்திர யாதவ், ஜவகர்லால் நேருபல்கலைக்கழக பேராசிரியர் ஜெயதி கோஷ், தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த், திரைப்பட இயக்குனர் ராகுல்ராய் ஆகியோரின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கேடுகெட்ட செயலை பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் கண்டித்துள்ளனர். 

விசாரணையின் பொழுது இந்த பெயர்கள் குறிப்பிடப்பட்ட காரணத்தினாலேயே அவர்கள் குற்றவாளி என்று முடிவு செய்வது இல்லை எனவும் கூடுதலான பொருத்தமான ஆதாரங்கள் அடிப்படையில்தான் அது முடிவு செய்யப்படும் எனவும் காவல்துறை இப்பொழுது தெரிவித்துள்ளது. எனினும் காவல்துறையின் சூழ்ச்சி என்ன என்பதை புரிந்து கொள்வதில் எவருக்கும் கடினம் இருக்காது. தனது நீண்ட அரசியல் பயணத்தில் பல அடக்குமுறைகளை எதிர்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைவர்களும் ஊழியர்களும் ஆர்.எஸ்.எஸ். ஏவுகின்ற இன்றைய பாசிச அடக்குமுறைகளையும் தூளாக்கி காட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை. தில்லி காவல்துறையும் அவர்களது எஜமானர்களான அமித்ஷா மற்றும் மோடி அரசாங்கமும் நெருப்போடு விளையாடுகின்றனர்.

தில்லி காவல்துறையின் ஓரவஞ்சனை

மோடி அரசாங்கத்தின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் வலுவான போராட்டங்கள் நடைபெற்றன. சிஏஏ/என்.பி.ஆர்/என்.ஆர்.சி/ ஆகிய மூன்றும் இணையும் பொழுது கோடிக்கணக்கான இந்திய மக்களின் குடியுரிமை கேள்விக்குறியாகிறது. இதனால் பாதிக்கப்படுவது இஸ்லாமிய மக்கள் மட்டுமல்ல; இஸ்லாமியர் அல்லாத பிரிவினருக்கும் ஆபத்து உருவாகும். எனவேதான் இந்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்களும் ஏனைய பிரிவு மக்களும் வலுவாக போராடினர். தேசம் முழுவதும் நடந்த இந்த போராட்டங்கள் மோடி அரசாங்கத்தை பீதி அடைய செய்தது. முஸ்லிம் அல்லாத பிரிவினரும் போராட்டக் களத்தில் பங்கேற்பர் என மோடி அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. எனவே இந்த போராட்டங்களை சீர்குலைக்க பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன.

இத்தகைய சதித்திட்டங்களின் ஒரு பகுதியாக வட கிழக்கு தில்லி ஜாப்ராபாத் எனுமிடத்தில் நடந்த போராட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என கபில் மிஸ்ரா போன்ற பாஜக தலைவர்கள் பகிரங்கமாக மிரட்டினர். மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர் போன்றவர்கள் முஸ்லிம்களை சுட்டுத் தள்ளுங்கள் (கோலி மாரோ) என தூண்டினர். இதன் விளைவாக வடகிழக்கு தில்லியில் மிகப்பெரிய மதக்கலவரங்கள் வெடித்தன. பிப்ரவரி மாதம் 23 முதல் 25வரை நடைபெற்ற இந்த கலவரங்களில் 52 அப்பாவி மக்கள்உயிரிழந்தனர். இதில் 40 பேர் முஸ்லிம்கள். 12 பேர் இந்துக்கள். 13 மசூதிகளும் 6 கோவில்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. ஏராளமான முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளும் வீடுகளும் தீ வைக்கப்பட்டன. இந்துக்களின் வீடுகளும்கடைகளும் தாக்குதலுக்கு உள்ளாகின. இந்த கலவரத்தில்இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருதரப்பும் பாதிக்கப்பட்டுள்ளனர்; மிக அதிகமான பாதிப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. 

1430 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் 750 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். ஆனால் 200 குற்றப்பத்திரிகைகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  குற்றப்பத்திரிகையின் விவரங்கள் ரகசியம் காக்கப்படுகின்றன. பொதுவாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகுறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது எனும் கருத்து வலுவாக உள்ளது. தங்களை தாக்கியதாக முஸ்லிம்கள் சுட்டிக்காட்டிய பாஜகவினர் கைது செய்யப்படவில்லை. மாறாக, பாஜகவினர் சுட்டிக்காட்டிய பல அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடுமை என்னவென்றால் இவ்வாறு கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் தங்களது வீடு அல்லது கடைகளை இழந்தவர்கள். பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். 

சில இடங்களில் காவல்துறையினரும் இந்துத்துவா சக்திகளோடு சேர்ந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு கலவரங்களில் ஈடுபட்ட காவலர்களின் பெயர்களை பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பகிரங்கமாக தமது புகார்களில் சுட்டிக் காட்டிய பிறகும் அந்த காவலர்கள் கைது செய்யப்படவில்லை. கலவரங்களில் ஈடுபட்ட இந்துத்துவ சக்திகளை கைது செய்தால் இந்துக்கள் மனம் புண்படும்; அது மீண்டும் கலவரத்தை உருவாக்கும்; எனவே அவர்களை கைது செய்ய வேண்டாமென காவல்துறை அதிகாரிகள் வாய் மூலம் ஆணைகளை பிறப்பித்துள்ளனர் என்பதும் அம்பலமாகியுள்ளது.

அரசின் சதித்திட்டம்

வடகிழக்கு தில்லி  கலவரத்துக்கு யார் காரணம் என்பதை விசாரித்து தண்டனை தரவேண்டும் எனும் வலுவானகோரிக்கை எழுந்தது. அந்த சமயத்தில்தான் கோவிட்தொற்று பரவத்தொடங்கியது.  ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மோடி அரசாங்கம் ஒருஆழமான சதியை தீட்டியது. இந்த சதித்திட்டத்தின் மையமான அம்சம் என்ன? “சி.ஏ.ஏ./என்.பி.ஆர்./என்.ஆர்.சி. எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியவர்கள்தான் தில்லி கலவரத்தை அரங்கேற்றினார்கள்; இதற்காக ஆழமான சதித்திட்டம் சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்களால் உருவாக்கப்பட்டது” - இத்தகைய கருத்தாக்கத்தை  அமித்ஷா தலைமை தாங்கும்உள்துறை அமைச்சகம் மற்றும் தில்லி காவல்துறை கட்டமைக்க முடிவு செய்தனர்.சி.ஏ.ஏ./என்.பி.ஆர்./என்.ஆர்.சி.எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட ஜாமியா மிலியா, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ-மாணவிகளை  தில்லி  காவல்துறையினர் கைது செய்தனர். தேவாங்கனா கலிட்டா, நட்டாஷா நர்வால், சஃபூரா ஜர்கர்,குல்ஃபிஷா பாத்திமா உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் இந்த வழக்குகள் சுமத்தப்பட்ட முறையும் தில்லி காவல்துறையின் கொடுங்கோன்மை முகத்தை  வெளிப்படுத்துகிறது. ஜாமியா மாணவி சஃபூராஜர்கர் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி தேவாங்கனா கலிட்டாவுக்கு  எதிராக மே மாதம் 23ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.  அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையில்லை என நீதிமன்றம் அவரை அடுத்த நாளேவிடுதலை செய்தது.  விடுதலை செய்யப்பட்ட சில நிமிடங்களில் அவர்மீது இரண்டாவது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். இப்பொழுது அவர் மீது கொலை முயற்சி/  கொலை/ கலகம் செய்தல்/கிரிமினல் சதித்திட்டம் ஆகிய பிரிவுகள் சுமத்தப்பட்டன.

மே மாதம் 30ம் தேதி அவருக்கு எதிராக 3வது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தனர். தர்யாகஞ்ச் எனுமிடத்தில் நடந்த வன்முறைக்கு அவர்தான் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் அவர் மீது நான்காவது முதல் தகவல் அறிக்கை சுமத்தப்பட்டது. இந்த முறை அவர் மீது யு.ஏ.பி.ஏ.  (UAPA)எனப்படும் ஆள் தூக்கி சட்டம் பாய்ந்தது. இப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுபவரை எவ்வித விசாரணையும் இல்லாமல் ஓராண்டுக்கு சிறையில்வைப்பதற்கு காவல்துறைக்கு அதிகாரம் உண்டு.  உச்சநீதிமன்றம் கூட பிணை தரமுடியாது.

செப்டம்பர் முதல் தேதி அன்று தில்லி உயர் நீதிமன்றம்முதல் மூன்று வழக்குகளிலும் கலிட்டாவை விடுதலைசெய்தது. ஆனால் அவர் மீது யு.ஏ.பி.ஏ சட்டப்பிரிவு பதிந்துள்ளதால் இன்னும் சிறையிலேயே இருக்கிறார். சி.ஏ.ஏ./என்.பி.ஆர்./என்.ஆர்.சி.எதிர்ப்புப் போராட்டங்களில் அமைதியாக கலந்துகொண்ட இளம் போராளிகளை தில்லி காவல்துறை எப்படி பழி வாங்குகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.  இதே அணுகுமுறையைத் தான் கைது செய்யப்பட்ட அனைத்து மாணவ மாணவிகளிடமும் தில்லி காவல் துறைமேற்கொண்டுள்ளது.  இதன் நோக்கம் என்ன?  எதிர்காலத்தில் சி.ஏ.ஏ./என்.பி.ஆர்./என்.ஆர்.சி.எதிர்ப்புப் போராட்டங்களில்  எவரும் கலந்து கொள்ளக் கூடாது;  அவ்வாறு கலந்து கொண்டால்  இத்தகைய கதிதான்  ஏற்படும் எனும் செய்தியை வலுவாக நிலைநாட்ட மோடி அரசாங்கம் முயல்கிறது.

சீத்தாராம் யெச்சூரியை சதிவலைக்குள் இழுக்க முயற்சி

விசாரணை வளையத்திற்குள் இருக்கும் குல்ஃபிஷா பாத்திமா என்னும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவி, தான் போராட்ட களத்தில் இருந்தபோது சீத்தாராம் யெச்சூரி/ யோகேந்திர யாதவ்/ சந்திரசேகர ஆசாத் ராவண் ஆகியோர் தீப்பொறி பறக்கும் உரைகளை ஆற்றிதங்களை தூண்டி விட்டனர் என  வாக்குமூலம் கொடுத்ததாக தில்லி காவல்துறை பதிவு செய்துள்ளது.  இதன் பொருள் என்ன? தில்லி கலவரங்களை தூண்டியதில் குல்ஃபிஷாபாத்திமாவுக்கு ஆழமான பங்கு உள்ளது என காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டில் சதித் திட்டம் தீட்டப்பட்டது என்பதும் அடங்கும். இந்த சதித்திட்டம் உருவாக சீத்தாராம் யெச்சூரியின்  உரையும் காரணம் என்றும், எனவே சதித்திட்டத்தில் யெச்சூரிக்கும் பங்கு உண்டுஎன்றும் ஒரு வஞ்சகமான கருத்தாக்கத்தை உருவாக்கும் உள்நோக்கம் இதில் அடங்கியுள்ளது.

இதேபோல ஜே.என்.யூ.  மாணவிகள் நட்டாஷா நர்வாலும்  கலிட்டாவும் தங்கள் சதித் திட்டத்துக்கு ஜெயதி கோஷ்/ அபூர்வானந்த்/ராகுல் ராய் ஆகியோர் துணை நின்றனர் அல்லது தூண்டினர் என கூறியதாக காவல்துறை பதிவு செய்துள்ளது. மாணவிகள் அவ்வாறு கூறினார்களா என்பதிலேயே மிகப்பெரிய ஐயப்பாடு எழுகிறது. ஏனெனில் வாக்குமூலத்தின் பல பக்கங்களில் நட்டாஷா நர்வாலும்  கலிட்டாவும் “நாங்கள் கையெழுத்துப் போட மறுக்கிறோம்” என பதிவு செய்துள்ளனர். அப்படியானால் அந்த வாக்குமூலம் உண்மையானது அல்ல என்பது தெளிவாகிறது. 

மேலும் மாணவிகளின் வாக்குமூலங்கள் எழுத்து மாறாமல் ஒரே மாதிரியாக உள்ளன. உதாரணத்திற்கு இரண்டு வாக்குமூலங்களிலும் ‘message’ என்ற வார்த்தை‘massage’  என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த இரண்டு வாக்குமூலங்களையும் ஒரே அதிபுத்திசாலி எழுதி உள்ளது என்பது தெளிவாகிறது. எனவே மாணவிகளின் வாக்குமூலங்கள்  காவல்துறையினரால் பொய்யாக உருவாக்கப்பட்டது என்பதை அறியலாம். தில்லி கலவரத்தை தூண்டிய பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா/அனுராக் தாக்கூர் ஆகியோர் வெளியே சுதந்திரமாக உலா வருகின்றனர். ஆனால் அமைதியாக சி.ஏ.ஏ  எதிர்ப்புப் போராட்டங்களில்பங்கேற்ற இளம் போராளிகள் சிறைகளில் வாடுகின்றனர்.
சி.ஏ.ஏ./என்.பி.ஆர்./என்.ஆர்.சி.எதிர்ப்புப் போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலுவாக பங்கேற்றது. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பழிவாங்க மோடி அரசாங்கம் முயல்கிறது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இடதுசாரிகள் மிகத் தீவிரமாக எதிர்ப்பு இயக்கங்களை உருவாக்கி அவற்றை வெற்றி பெறச் செய்தனர். மேலும் கட்சியின் பொது செயலாளர் என்ற முறையில் யெச்சூரி அவர்களின் டுவிட்டர் பதிவுகள் மோடி அரசாங்கத்தின் மீது மிகக்கூர்மையான அரசியல் அம்புகளாக பாய்கின்றன. எனவேதில்லி கலவரங்களில்  தோழர் யெச்சூரி அவர்களுக்கும் பங்கு உள்ளது என பதிவு செய்வதன் மூலம் மோடி அரசாங்கம் அச்சுறுத்த முனைகிறது.  ஆனால் இந்த அற்பமான சலசலப்புகளுக்கெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறிதும் அஞ்சாது என்பது மோடி அரசாங்கத்திற்கு தெரியாது போலும். மன்னிப்புக் கடிதங்களை எழுதும் பாரம்பரியம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிடையாது. அடக்குமுறைகளை துணிவுடன் சந்திக்கும் பாரம்பரியம் கொண்டது மார்க்சிஸ்ட்கட்சி! 

ஆர். எஸ். எஸ் அமைப்பின் பாசிச நிகழ்ச்சி நிரலை நிலைநாட்ட மோடி அரசாங்கம் வெறிகொண்டு செயல்படுகிறது. ஆனால் பாசிச எதிர்ப்பு சக்திகள் இதனை அனுமதிக்க மாட்டார்கள் என்பது உறுதி.

===அ.அன்வர் உசேன்==