பாட்னா:
லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் தேர்தல் சின்னம் அரிக்கேன் விளக்கு. இதை முன்வைத்து, ராஷ்ட்ரிய ஜனதாதளத்தை விமர்சித்த, பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ் குமார், விமர்சித்திருந்தார்.
“பீகாரில் மின்சார வசதி மேம்பட்டுள்ளது; எனவே அரிக்கேன் விளக்குகளின் காலம் முடிந்துவிட்டது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் வெற்றி வாய்ப்பும் மங்கி வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.இதற்கு ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத், சிறையில் இருந்தவாறே கடிதம் மூலம் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் லாலு பிரசாத் கூறியிருப்பதாவது:
“தேர்தல் பிரசாரத்தில் என்னையும், எனது கட்சியின் சின்னமான லாந்தர் விளக்கையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள். கொள்கைகள், கோட்பாடுகள் என்று எதையும் பின்பற்றாத நீங்கள் (நிதிஷ்குமார்) ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க குறுக்கு வழியில் பயணித்து வருகிறீர்கள். பீகாரில் உங்கள் ஆட்சியில் ஏழை-எளிய மக்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். உங்கள் தேர்தல் பிரசாரம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
ஏழைகளின் வாழ்க்கையில் இருளை நீக்கி வெளிச்சத்தை அளிக்கும் லாந்தர் விளக்கு சின்னத்தை நாங்கள் பெற்று இருக்கிறோம். அது அன்பையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் சின்னம். அரிக்கேன் விளக்கின் வெளிச்சத்தில் சமத்துவமின்மை, வெறுப்புணர்வு, அட்டூழியம், அநீதி ஆகிய இருள்களை நாங்கள் நீக்கியுள்ளோம். தொடர்ந்து இதை நாங்கள் செய்வோம்.
ஆனால் உங்களின் அம்பு சின்னம் வன்முறை மற்றும் ரத்தப்பெருக்கை அடையாளப்படுத்துகிறது. இது ஏவுகணைகளின் காலம் என்பதால் அம்பு வழக்கொழிந்து விட்டது. உங்கள் அம்பைப் பயன்படுத்தி தாமரையில் (பாஜகவின் சின்னம்) துளையிடுவதா அல்லது அதில் தஞ்சம் அடைவதா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
மற்றபடி இதுவரை 11 கோடி மக்களின் முதுகில் குத்துவதற்கே அம்பை நீங்கள் அதிகம் பயன்படுத்தியதால், எங்களின் அரிக்கேன் விளக்கு முன்பை விட பிரகாசமாகவே எரியும்.”
இவ்வாறு லாலு பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.