புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அகிலஇந்திய மருத்துவ அறிவியல் கழகமான ‘எய்ம்ஸ்’ (AIIMS) நிறுவனத்தில், ஊழியர்கள் அனைவரும், இந்தியில்தான் கையெழுத்திட வேண்டும் என்று அந்த மருத்துவமனையின் துணை இயக்குநர் பி.கே. ராய் உத்தரவு போட் டுள்ளார்.அதுமட்டுமன்றி, அலுவலக உத்தரவுகளை இந்தியிலேயே பிறப்பிக்க வேண்டும்; இந்தி மொழியிலேயே பதில்களை அளிக்க வேண் டும்; பதிவேடுகளையும் இந்தியிலேயே தயாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை இந்திபேசாத மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்களே அதிகம் பணியாற்றி வரும் நிலையில், பி.கே.ராயின் இந்த உத்தரவுக்கு ஒடிசா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தி தெரிந்தவர்களை மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஊழியர்களாகப் பணி அமர்த்துவதற்கான சதித் திட்டத்தின் முன்னோட் டமே இந்த நடவடிக்கை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.“மொழியியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் ஒடிசாவாகும். எங்கள் தாய்மொழியை ஓரங்கட்டும் எவரையும், எந்தவொரு நிறுவனத்தையும் அனுமதிக்க மாட்டோம்” என்று, பிஜூ ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த பூரி தொகுதி எம்.பி. பினாக்கி மிஸ்ராவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.