வங்க கவர்னரைச் சுட்ட பினாதாஸ்
மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளம்பெண் பினாதாஸ். கல்கத்தாவில் இயங்கி வந்த ‘சாத்ரி சங்’ எனும் புரட்சிகர அமைப்பில் தம்மை இணைத்துக் கொண்டு ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போர் புரிந்து வந்தார். சாத்ரி சங் என்பது அன்றைய டாக்கா மற்றும் கல்கத்தா கல்லூரி மாணவிகள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக உருவாக்கிய அமைப்பாகும். 1932, பிப்ரவரி 6 அன்று வங்காள கவர்னர் ஸ்டான்லி ஜாக்சனை கல்கத்தா பல்கலைக்கழக பட்டமளிப்பு அரங்கில் 5 முறை சுட்டார். அவர் பயன்படுத்திய துப்பாக்கி கமலாதாஸ் எனும் சுதந்திரப் போராட்ட வீரர் வழங்கியது. கவர்னர் துப்பாக்கிச் சூட்டில் தப்பித்துக் கொண்டார். எனினும் பினாதாசுக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கொடுஞ்சிறையில் வைக்கப்பட்டார். பினாதாஸ் 1939ல் விடுதலையானாலும் தம்மை அவர் காங்கிரசில் இணைத்துக் கொண்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்டு 1942-45களில் சிறையில் அடைக்கப்பட்டார். 1947-51 காலகட்டத்தில் வங்க சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். 1947ல் சதீஷ் சந்திர பௌமிக் எனும் சுதந்திரப் போராட்ட வீரரை மணந்தார். அவரது சமூகப்பணிக்காக 1960ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பெரணமல்லூர் சேகரன்