“1946 -செப்டம்பர் 5ஆம் நாள்-காலைநேரம், பிரிட்டிஷ் ரயில்வே நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நடந்து கொண்டிருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, பொன்மலை சங்கத் திடலில் தொழிலாளர்கள் பெரும் திரளாக குழுமியிருந்தனர். போலீஸ் அதிகாரி ஹாரிசன் என்பவன் தலைமையில் மலபார் ஸ்பெஷல் போலீஸ் படை சங்கத் திடலை சுற்றி வளைத்தது. முன்னறிவிப்பு எதுவுமின்றி போலீஸ் படை கண்மூடித்தனமாகச் சுட்டது. கீழே விழுந்தவர்களை துப்பாக்கி முனை கத்திகளால் குத்தியது. சங்கத் திடலின் நடுவில் 60 அடி உயர இரும்புக்கம்பத்தில் RLU (ரயில்வே லேபர் யூனியன்) என்று பொறிக்கப்பட்ட செங்கொடி கம்பீரமாக பறந்து கொண்டிருந்தது. கொடியை கீழே இறக்க போலீஸ் படை முயன்றபோது கிருஷ்ணமூர்த்தி என்ற இளம் தொழிலாளி பாய்ந்து சென்று அதைத் தடுத்தார். அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. கொடி மரத்தின் பீடத்திலேயே தோழர் கிருஷ்ணமூர்த்தி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். துப்பாக்கிச் சூட்டில் கிருஷ்ணமூர்த்தி, ராஜூ, ராமசந்திரன், தியாகராஜன், தங்கவேலு ஆகிய 5 தோழர்கள் பலியானார்கள். நாடே கொந்தளித்தது. தொடர் போராட்டங்களால் ரயில்வே நிர்வாகம் பணிந்தது. என்றென்றும் வழிகாட்டும் பொன்மலை செங்கொடி புதல்வர்களின் தியாகம் வீண் போகாது.
இன்று பொன்மலை தியாகிகள் நினைவு தினம்