tamilnadu

img

பொன்மலை ரயில்வே பணிமனையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து

சிஐடியு, டிஆர்இயு ஆட்சியரிடம் மனு

திருச்சிராப்பள்ளி,மே,2- திருச்சி சிஐடியு மற்றும் டிஆர்இயு சங்கங்கள் சார்பில்  மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் அளித்த மனுவில் தெரிவித்திருந்ததாவது: பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்சாலை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், அதிகாரிகள் உட்பட சுமார் 4900 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து பணிமனை தொழிலாளர்களின் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுகின்ற மக்களின் மருத்துவ வசதிக்காக, ரயில் பெட்டிகளை மாற்றம் செய்யப்பட்டு பணிமனையிலிருந்து அனுப்பப்பட்டு விட்டது. இந்த சிறப்பு வேலைக்காக ஒரு சில பணியாளர்கள் மட்டுமே, பணிமனைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது வருகிற 4.5.2020ம் தேதி முதல் பணிமனை திறக்கப்பட உள்ளது எனவும், 33 சதவீதம் தொழிலாளர்கள் வேலை செய்ய சில கட்டுப்பாடுகளோடு அனுமதிக்க உள்ளனர் எனவும் அறிகிறோம். அவ்வாறு அனுமதிக்கப்படுகின்ற பட்சத்தில்  தற்போதுள்ள சூழ்நிலையினால் தொழிலாளர்கள் சந்திக்க இருக்கின்ற கண்ணுக்குத் தெரியாத கொரோனா எதிரியோடு போராட இருக்கின்ற சிரமங்களை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளோம்.

குறைந்தது 1600 தொழிலாளர்களை கொரோனா  பரிசோதனை செய்து பணிமனைக்குள் செல்ல அனுமதித்தாலும், 4 அல்லது 6 தொழிலாளர்கள் சேர்ந்து பணி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே சமூக இடைவெளியை கடைப்பிடித்து வேலை செய்வது என்பது இயலாத காரியம். ஒரு தொழிலாளி பயன்படுத்திய  டூல்சை, மற்றொரு தொழிலாளியும் பயன்படுத்தும் நிலை உள்ளதால், கொரோனா வைரசை கண்டுபிடிப்பது என்பது இயலாத காரியம். ரயில்வே குடியிருப்பில் உள்ள தொழிலாளர்கள் தற்போது பொன்மலையில் சுமார் 300 பேர் உள்ளனர். மற்ற தொழிலாளர்கள் திருச்சியில் பல்வேறு இடங்களிலிருந்து பொன்மலை பணிமனைக்கு வரவேண்டும். அதற்கான வாகன போக்குவரத்து ஏற்பாடு தற்போது கிடையாது. எனவே குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு வருவது என்பது இயலாத காரியம்.

1800 தொழிலாளர்கள் 4 வாயில்களில் செல்லும் போது ஒருவருக்கு ஒருவர் உரசி செல்லக்கூடிய நிலை ஏற்படும். இதனால் சமூக தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கைக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே போத்தனூர், ரயில்வே பணிமனையை திறக்க வேண்டாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்தது போன்று, திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை பணிமனையை, பசுமை மண்டலமாக வந்த பிறகே திறக்க அனுமதி வழங்க வேண்டும் என சிஐடியு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.