கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படு அனைத்து கல்லூரிகளிலும் எம்.ஃபில்., பிஎச்.டி. எழுத்துத்தேர்வு வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கும் எனப் பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்துப் பாரதியார் பல்கலைக்கழகத் தேர்வாணையர் ஆர்.விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டிசம்பர் 15ஆம் தேதி முதல் தாள் தேர்வும், 17ஆம் தேதி இரண்டாம் தாள் தேர்வும், 19ஆம் தேதி மூன்றாம் தாள் தேர்வும் நடைபெறும்.
பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத் துறைகளிலும், தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி மாணவர்களுக்கு உடுமலை கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதகை அரசு கலைக் கல்லூரியிலும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு டாக்டர் என்ஜிபி கலை அறிவியல் கல்லூரியிலும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குத் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியிலும் இதே அட்டவணைப்படி தேர்வு நடைபெறும்.
புதிதாக விண்ணப்பித்த மாணவர்களுக்குப் பதிவு எண் வழங்கப்பட்டுள்ளது. அதைச் சரிபார்த்து உரிய மையத்திற்குச் சென்று தேர்வு எழுத வேண்டும். நுழைவுச்சீட்டு டிச. 11ஆம் தேதி அந்தந்த மையங்களில் வழங்கப்படும். மேலும் வீரங்களுக்கு www.b-u.ac.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.