tamilnadu

img

‘வேலுமணி பேசுவது வேடிக்கையாக உள்ளது’

தூத்துக்குடி, ஜுன் 18- தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையே இல்லை என்பது போல அமைச்சர் வேலுமணி பேசி வருவது வேடிக்கையாக உள்ளது என சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார். தூத்துக்குடியில் செவ்வாயன்று கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.பேச்சிமுத்து, ராகவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் புவிராஜ்,எம்.எஸ்.முத்து  ஆகியோருடன் செய்தியாளர்களை சந்தித்த வாசுகி கூறியதிலிருந்து...

தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை மிக பெரிய பிரச்சனையாக உருவாகி உள்ளது. ஆனால் அதை மறுக்கும் விதமாக அமைச்சர் வேலுமணி பேசி வருவது வேடிக்கையாக உள்ளது. 

சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கக் கூடிய  4 நீர்நிலை தேக்கங்களிலும் சேர்த்து மொத்தம் 23சதவீதம் தான் குடிநீர் உள்ளது. காசு கொடுத்தால் கூட குடிநீர் இல்லை என்ற நிலை தான் தற்போது நிலவுகிறது.

பாஜக அரசின் நிதி ஆயோக் கூட்டத்தின்  ஆய்வு அறிக்கைப் படி இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கிறது என கூறப்பட்டுள்ளது.

நாட்டில் 60 சதவீதம்  பேர் கடுமையான குடிநீர் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் 2030-ஆம் ஆண்டுக்குள் தேவைக்கும் குறைவாக தான் குடிநீர் கிடைக்கும் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் ஒவ்வொரு வருடமும் இரண்டு லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்கிற அந்த அறிக்கை, சென்னை உட்பட 21 நகரங்களில் 2020  ஆம் ஆண்டில் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் வேலுமணி கூறுவது நெருப்புக்கோழி தனது தலையை பூமிக்குள் புதைத்து கொண்டு எல்லாம் நன்றாக உள்ளது என சொல்வது போல் உள்ளது.