4.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புக!
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு அழைப்பு
தஞ்சாவூர், அக்.1- தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு, தமிழக அரசுத் துறைகளில் காலி யாக உள்ள 4.5 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி நவம்பர் 18 அன்று கோட்டை நோக்கி பேரணி நடத்திட முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் மு.சுப்ர மணியன், முன்னாள் மாநிலத்துணைத் தலைவர் கரூர் மு.சுப்ரமணியன் உள்ளிட்ட 5பேர் தற்காலிக பணிநீக்கம், கோவை மாவட்ட அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் உள்ளிட்ட 4பேர் மாவட்ட மாறுதல் என அரசின் பழி வாங்கும் நடவடிக்கையை கண்டித்து முதல்வரின் கவனம் ஈர்க்கும் வகையில் அக்டோபர் 11 அன்று மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரில் ஆர்ப்பாட்டம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெருந்திரள் முறையீடு செய்வது என இம்மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
மேலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் கைவிடக்கோரியும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அர சாணை 56ன் மூலம் அரசுத்துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடக்கோரியும், சத்துணவு, அங்கன் வாடி, வருவாய் கிராம உதவியாளர் கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களை கால முறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி யும், தமிழக அரசுத்துறைகளில் காலி யாக உள்ள நாலரை லட்சம் பணி யிடங்களை உடனே நிரப்பிட கோரியும் - வருகின்ற நவம்பர் 11முதல் 15வரை களியக்காவிளை, இராமேஸ்வரம், வேதாரணியம் மற்றும் ஓசூர் ஆகிய நான்கு முனைகளிலிருந்து ஊழியர் மற்றும் பொதுமக்களை சந்திக்கும் பிரச்சார இயக்கம் நடத்தி நவம்பர்18 அன்று கோட்டை நோக்கி பேரணி நடத்து வதெனவும் மாநாடு முடிவு செய்தது. மேலும் இம்மாநாட்டில், காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்; மத்தியரசின் புதிய சுகாதார கொள்கையை கைவிட வேண்டும்; தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் தொழிலாளர் நலச்சட்டங்களை மத்தியஅரசு திரும்பப் பெற வேண்டும்; மீத்தேன், ஹைட்ரோஹார்பன் திட்டங்களை கைவிட வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; தேசிய கல்விக்கொள்கையை திரும்பப் பெற வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர வேண்டும்; 21மாத நிலுவையை உடன் வழங்க வேண்டும்; ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் மீதான அரசின் பழி வாங்கும் நடவடிக்கை, 17பி, பணிமாறு தல் நடவடிக்கையை உடன் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
பேரணி - பொதுக்கூட்டம்
பின்னர் தஞ்சை - புதுக்கோட்டை சாலையாகப்பா நகரில் இருந்து பல்லா யிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணியின் நிறைவாக தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில், மாநகராட்சி திடல், தோழர் ஏ.ராமசாமி நினைவுத் திடலில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பொது மாநாடு நடைபெற்றது. மாநாட்டி ற்கு பொதுச்செயலாளர் ஆ.செல்வம் தலைமை வகித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் வழக்கறிஞர் இரா.தமிழ்மணி வரவேற்றுப் பேசினார். மாநிலத் தலைவர் மு.அன்பரசு தீர்மானங்களை விளக்கிப் பேசினார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார்.நிறைவாக வரவேற்புக்குழு செயலாள ரும், மாவட்டச் செயலாளருமான ஆ.ரெங்கசாமி நன்றி கூறினார்.