பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக
கரூர்,செப்.29- பாஜக அரசு கொண்டு வந்துள்ள தேசியக்கல்விக் கொள்கையை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்க நிறைவுப் பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும், மூடப்பட்ட அரசுப்பள்ளிகளை மீண்டும் திறக்கவேண்டும். தமிழ்வழிப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையைச் சீரழிக்கும் அரசாணைகளை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களில் 30 மாவட்டங்களில் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற்றது.
கரூரில் 80 அடி சாலையில் நடைபெற்ற நிறைவுபொதுக்கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் மூ. மணிமேகலை தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ச. மோசஸ் முன்னிலை வகித்தார். துணைப்பொதுச்செயலாளர் தா. கணேசன் வரவேற்றார். பொதுச்செயலாளர் ச. மயில் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் அருணன்,கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் உரையாற்றினர். பல்வேறு சங்கங்களின் மாநில நிர்வாகிகள் கே.பி.ஓ சுரேஷ், எஸ். பக்தவத்சலம், அ. சங்கர், பேட்ரிக் ரெய்மாண்ட், சிவஸ்ரீரமேஷ், மா. ரவிச்சந்திரன், செ. நா. ஜனார்த்தனன் ஆகியோர் பேசினர்.மாநிலப் பொருளாளர் க.ஜோதிபாபு நன்றி கூறினார். கரூர் மாவட்டச் செயலாளர் ஜ. ஜெயராஜ், மாவட்டத்தலைவர் பெ.காளிதாஸ், மாவட்டப் பொருளாளர் வீ. மோகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். (ந.நி.)