புதுதில்லி:
நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், நடப்புக் கணக்கு பற்றாக்குறையானது, அதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வரம்பை, ஏற்கெனவே தாண்டிச் சென்று விட்டது.இந்நிலையில் 2019-20 நிதியாண்டிற்கான வரி வசூல் இலக்கில் 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக, மத்திய முன்னாள் நிதித்துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் எச்சரிக்கை செய்துள்ளார்.
நடப்பு நிதியாண்டும் ஒரு செயலற்ற ஆண்டாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது என்று அவர் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.நடப்பு நிதியாண்டிற்கான வரி வசூல் 24 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதில் 8 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் பங்களிப்பு மாநில அரசுகளுடையது. மத்திய அரசின் பங்களிப்பு நிகர அளவில் மத்திய அரசின் வரி வருவாய் 16 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கார்ப்பரேட் வரி 8 சதவிகித அளவுக்கும், உற்பத்தி வரி 5 சதவிகித அளவுக்கும், சுங்க வரியானது 10 சதவிகித அளவுக்கும் குறையலாம் என்பதால், ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பற்றாக்குறை இருக்கலாம் என்று கார்க் தெரிவித்துள்ளார்.