tamilnadu

img

12-வயதில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் அசாம் மாணவர்!

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஐசக் பால் அலுங்மான் எனும் 12 வயது மாணவர், நேரடியாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அம்மாநில மேல்நிலைப்பள்ளி வாரியம் சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

ஏப்ரல் 1-ஆம் தேதியுடன் 15 வயது பூர்த்தி அடைந்த மாணவர்கள் மட்டுமே 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியும் என்று விதி உள்ள நிலையில், அசாம் மாநிலத்தின் சுராசந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஐசக் பால் அலுங்மானுக்கு, ஐ.க்யூ (அறிவாற்றல்) அளவு, அவரது வயதுக்கு உரியதை விட கூடுதலாக இருப்பதாக கூறி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விண்ணப்பித்தார். இதையடுத்து மாணவனுக்கு உளவியல் சோதனை மற்றும் ஐ.க்யூ சோதனை நடத்தப்பட்டது. இதில் ஐசக் பால் அலுங்மான் மனதளவில் வயது 17 வருடங்கள் 5 மாதங்கள் இருப்பதாகவும், அவரின் ஐ.க்யூ அளவு 141 என்ற அளவில் இருப்பதாகவும் சான்றிதழ் அளிக்கப்பட்டது. இந்த சோதனையை இம்பாலில் உள்ள மருத்துவ அறிவியல் இன்ஸ்டிடியூட் நடத்தியது. இதனை அடுத்து, ஐசக் பால் தனது வயதுக்கு மீறிய அறிவாற்றல் கொண்டு இருப்பதால், அவர் நேரடியாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத மேல்நிலைப்பள்ளி வாரியம் அனுமதி அளித்துள்ளது.

ஐசக் பாலின் அறிவாற்றலை கண்ட அவரது பெற்றோர் 10-ஆம் வகுப்பு தேர்வை எழுத முதலில் சி.பி.எஸ்.இ.யிடம் விண்ணப்பித்தனர். ஆனால் அது ஏற்கப்படவில்லை. இதையடுத்து மேல்நிலைப்பள்ளி வாரியத்திடம் விண்ணப்பித்து சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.