அரியலூர், செப்.18- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சிபிஎம் கிளைச் செயலாளர் குமார் தலைமை வகித்தார். மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா கண்டன உரையாற்றினார். மீன்சுருட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. தெருவிற்கு சமுதாயக் கூடம் உடனடியாக தேவை. இந்தப் பகுதியில் வீடு இல்லாத அனைவருக்கும் இலவசமாக வீட்டுடன் கூடிய மனை வழங்க வேண்டும். அறுபது வயது நிரம்பியவர்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி ஓய்வூதியம் ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். நூறுநாள் வேலையை 150 நாளாக மாற்றி 450 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. மாவட்டச் செயலாளர் பத்மாவதி, மாவட்ட துணைச் செயலாளர் மீனா, ஒன்றியத் தலைவர் மணியம்மாள் உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.