ஈரான் மீது ரகசியமாக சைபர் தாக்குதல் நடத்தியதாக இரு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சவுதியின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது டிரோன் தாக்குதல் கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்தி குழு பொறுப்பேற்ற நிலையிலும் சவுதி மற்றும் அமெரிக்கா, ஈரான் மீது குற்றம் சாட்டி வந்தது. இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சவுதியின் இரு எண்ணெய் நிலையங்கள் தாக்குதலுக்கு பிறகு, ஈரான் மீது ரகசியமாக சைபர் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்கா அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர். ஈரான் தனது சித்தாந்தத்தை பரப்புவதற்கான திறனை கண்டறிவதை இலக்காகக் கொண்ட இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், உயிரிழப்புகளுக்கு ஆபத்தை விளைவிக்காமல் பதிலடி கொடுப்பதற்கான வழியாக கருதப்படுகிறது என்று அமெரிக்கா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், ஈரான் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் சைபர் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்காவின் பென்டகன் மறுத்துள்ளது.