tamilnadu

img

இந்நாள் ஜுன் 27 இதற்கு முன்னால்

1652 - உலகின் முதல் வேக வரம்பு(ஸ்பீட் லிமிட்), நியூ ஆம்ஸ்ட்ர்டாம்(தற்போதைய நியூயார்க்!) நகரில் நடைமுறைப்படுத்தப்பட்டது! ஆம்! மோட்டார் வாகனங்களுக்கு முன்பே வேக வரம்பு உருவாகிவிட்டது. நியூ ஆம்ஸ்டர்டாம் என்பது, வட அமெரிக்காவிலிருந்த டச்சுக் குடியேற்றமான, நியூ நெதர்லாந்தின் தலைநகரமாகும். 1664இல் டச்சுக் குடியேற்றத்தைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், இங்கிலாந்திலுள்ள யார்க் பகுதியின் (ட்யூக்)சிற்றரசரை (இவர்தான் பின்னாளில் இங்கிலாந்தின் இரண்டாம் ஜேம்ஸ் அரசரானார்) கவுரவிக்கும்வகையில், நியூயார்க் என்று பெயரிட்டனர். வேக வரம்பு என்பது அப்போது எண்களால் நிர்ணயிக்கப்படவில்லை. மாறாக, நகரத்திற்குள் வாகனங்களை(குதிரைகளால் இழுக்கப்படுபவை என்பதால்) ‘நாலுகால் பாய்ச்சலில்’ ஓட்டக்கூடாது என்றும், மீறுபவர்களுக்கு இரண்டு ‘ஃப்ளெமிஷ் பவுண்டுகள்(அக்காலத்திய ஐரோப்பிய தங்க நாணயம்)’ (தற்போது சுமார் 50-150 டாலர்கள்!) அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டது. ‘மூர்க்கத்தனமாக’ வண்டியோட்டி பயணிகளுக்கோ, மற்றவர்களுக்கோ ஆபத்து விளைவிப்பதைத் தடுக்க 1832இல் இங்கிலாந்தில் சட்டமியற்றப்பட்டது. இயந்திரத்தால் இழுக்கப்படும் வண்டிகள் நகருக்குள் 10 மைல் வேகத்திற்குமேல் செல்லக்கூடாது என்று 1861இல் இங்கிலாந்தில் இயற்றப்பட்டதே, முதலில் எண்களில் வேக வரம்பை நிர்ணயித்த சட்டமாகும். 1865இல் இந்த வேக வரம்பு நகருக்குள் 2 மைலாகவும், கிராமப்பகுதிகளில் 4 மைலாகவும் குறைக்கப்பட்டது. இங்கிலாந்தின் கிழக்கு பெக்கம் நகரில், 8 மைல் வேகத்தில் சென்ற வால்ட்டர் அர்னால்ட் என்பவருக்கு 1896 ஜனவரி 28இல் ஒரு ஷில்லிங் அபராதம் விதிக்கப்பட்டதே, வேக வரம்பை மீறியதற்கான முதல் அபராதமாகும். 1896இல் இங்கிலாந்தில் இயற்றப்பட்ட ‘நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கான சட்டம்’, வேக வரம்பை 14 மைலாக உயர்த்தியது. வழக்கமான சாலைகளில் 60இலிருந்து 100 கி.மீ. வரையும், விரைவுச் சாலைகளில் 60இலிருந்து 120 கி.மீ. வரையும், மோட்டார்வே சாலைகளில் 80இலிருந்து 140 கி.மீ. வரையும் வேக வரம்புகளாகத் தற்போது பன்னாட்டு அமைப்புகளால் பரிந்துரைக்கப்படுகின்றன. முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் ஒவ்வொரு சாலைக்குமான குறைந்தபட்ச வேக வரம்பும் நிர்ணயிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.