25 மாற்றுத்திறனாளி உட்பட நூறு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை
சென்னை, ஏப்.23 - தமிழ்நாட்டில் 25 மாற்றுத்திற னாளிகள் உட்பட 100 விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஆண்டு அரசு வேலை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏப்.22 அன்று நடந்த கேள்வி நேரத்தின் போது, “சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கான மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங் களில் இந்த ஆண்டும் பணி நியமன ஆணைகள் வழங்க அரசு முன் வருமா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ம.சிந்தனை செல்வன் கேள்வி எழுப்பினார். துணை முதலமைச்சராக பொறுப் பேற்ற பிறகு, முதல் முறையாக கேள்வி நேரத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாற்றுத் திறனாளி வீரர்கள் உட்பட 100 விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவித்தோம். அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களிலும், அரசுத் துறைகளி லும் 104 வீரர்களுக்கு சென்ற ஆண்டு மட்டும் வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகள் வழங்கினோம். அதே போல் இந்த ஆண்டு மேலும் 100 விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் அரசு மற்றும் பொதுத் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்” என்றார். இதைத் தொடர்ந்து சிந்தனை செல்வன் எழுப்பிய துணைகளுக்கு பதிலளித்த துணை முதலமைச்சர், “அதே போல், 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் காவல்துறையில் பணியாற்று கின்ற 11 விளையாட்டு வீரர்களுக்கு கடந்த ஆண்டு காவல்துறையில் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 32 உதவி ஆய்வாளர்கள் பணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர் களுக்கு காவல்துறையில் பணி கிடை க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றும் கூறினார். விளையாட்டுத் துறையில் மாற்றுத் திறனாளிகள் சாதிக்க நமது அரசு தொடர்ந்து துணை நிற்கும். அவர்கள் போட்டியில் பங்கேற்பதற்காக முன்பே பயிற்சிக் கட்டணம், பயண கட்டணம் ஆகியவை நம்முடைய தமிழ்நாடு அறக்கட்டளை (சாம்பியன் பவுண்டேஷன்) மூலம் தொடர்ந்து நிதி உதவிகளை அளித்து வருகிறோம். இதுவரை 198 பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு பயணச் செலவு மற்றும் பயிற்சிக்கு ரூ.4 கோடி 55 லட்சம் வழங்கியிருக்கிறோம். மேலும் 196 பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு ரூ. 27 கோடி ஊக்கத்தொகை நிதி வழங்கப்பட்டுள்ளது. 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் இந்த ஆண்டு நிர்ணயம் செய்துள்ள 100 வீரர்களில், மாற்றுத்திறனாளிகள் 25 பேருக்கு வேலை வழங்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் தெரிவித்தார்.