அமெரிக்காவின் ஹவாய் தீவின், சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
அமெரிக்காவின் ஹவாய் தீவின் கவாய் பகுதியில், சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றுலா நிறுவனங்கள் ஹெலிகாப்டர்களை இயக்குகின்றன. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று கடந்த வியாழக்கிழமை மாயமானது. அதில் பைலட் மற்றும் 6 சுற்றுலா பயணிகள் இருந்தனர். மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணியில் கடலோர காவல்படை தீவிரமாக ஈடுபட்டது. இதேபோல் தீவின் தொலைதூரப் பகுதியிலும் தேடும் பணி நடைபெற்றது.
அப்போது, அந்த ஹெலிகாப்டர், தீவில் உள்ள ஒரு மலை உச்சியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் சிதறிக் கிடந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றொருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மோசமான வானிலை காரணமாக 7-வது நபரின் உடலைத் தேடும் பணி நேற்று நிறுத்தப்பட்டது. இன்று தொடர்ந்து தேடும் பணி நடைபெறுகிறது.