வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் மோடி அரசு.... ஜி.ராமகிருஷ்ணன் சாடல்

வேலூர்:
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய இடஒதுக்கீட்டிற்கு மத்திய பாஜக அரசால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

வேலூரில் சனிக்கிழமை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தற்போது தடுப்பூசி போடப் படுகிறது. இதன் தாக்கம், விளைவுகள் குறித்து மத்திய அரசு வெளிப்படைத் தன்மையோடு அறிவித்து மக்களின் சந்தேகங்களை தீர்க்க வேண்டும். அனைத்து மாநில மக்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசியை இலவசமாக போட வேண்டும்.

நெருக்கடியை சமாளிக்க...
கொரோனா வைரஸ் பாதிப்பால் வேலை இழந்து, வாழ்விழந்த மக்களை பாதுகாக்க மாதம் ரூ. 7,500 மற்றும் ஒரு வருடம் இலவச ரேசன் பொருட்களை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. ஆனால், ஆட்சியாளர்கள் இதுவரைக்கும் வழங்காமல் இருப்பதால் பொருளாதார நெருக்கடிஅதிகரித்து வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

வாய்ச்சொல் வீரர்கள்
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்கிறார். 2014 ஆம் ஆண்டு 1 பேரல் கச்சா எண்ணெய் 109 டாலராக இருந்த போதுபெட்ரோல் விலை ரூ.71 ஆக இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் 53 டாலராககுறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. 

இடஒதுக்கீடு
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கல்வி உரிமைகள் பறிக்கப்பட்டநிலையில், அரசுப் பள்ளி மாணவர் களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீதம் வழங்கியது. இதேபோன்று புதுச்சேரி அரசு, 10 விழுக்காடு உள் இடஒதுக்கீடு அளித்துள்ளது. இதுகுறித்த வழக்கில் பதில் அளித்த மத்திய பாஜக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு பாதிக்கப்படும். எனவே, தமிழக அரசு இதில் தலையிட்டு இட ஒதுக்கீட்டில் பாதிப்பில்லாத நிலையை உருவாக்க  மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 26 ஆம் தேதி நடத்தும் டிராக்டர் பேரணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. உடனடியாக கால தாமதம் செய்யாமல் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த சந்திப்பின்போது மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராஜன், மாவட்டச்செயலாளர் எஸ்.தயாநிதி,  மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன், என்.காசிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

;