tamilnadu

img

நெருக்கடியிலும் மின்னும் வியட்நாம் - கணேஷ்

கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டு காலம் சீன அரசர்க ளின் ஆட்சி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுக ளின் சுமார் நூறு ஆண்டுகள் ஆக்கிரமிப்பு மற்றும் அமெரிக்காவின் கொடூரமான 20 ஆண்டுகால போர்வெறித் தாக்குதல் ஆகியவற்றி லிருந்து மீண்ட வியட்நாம் தற்போது பெரும் முன்னேற்றத் தைக் கண்டிருக்கிறது. ஏகாதிபத்திய அமெரிக்காவின் தாக்குதலில் 30 லட்சம் பேரை இழந்த வியட்நாமா இது என்று வியக்கச் செய்கிறது கம்யூனிஸ்ட் வியட்நாம். உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் தள்ளாடிக் கொண்டி ருக்கின்றன. முதலாளித்துவப் பொருளாதாரங்கள் அனைத்துமே சரிவைச் சந்தித்துள்ளன. அமெரிக்கா வுடன் ஏற்பட்ட வர்த்தகப் போரினால் சீனாவும் சரிவைக் கண்டது. ஆனால், சோவியத் யூனியன் பின்னடைவிற்குப் பிறகு தாக்குப் பிடிக்காது என்று கருதப்பட்ட வியட்நாமில் மட்டும் நல்ல பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு அல்ல. கடந்த பத்து ஆண்டுகளாக வியட்நாமின் பொருளாதார முன்னேற்றம் சராசரியாக 6.7 சதவிகிதமாக இருந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் உலகில் அதிக பொருளாதார முன்னேற் றத்தைக் கண்ட நாடாக வியட்நாம் உள்ளது.

அமெரிக்காவின் போர்வெறித் தாக்குதலால் 20 ஆண்டுகாலம் வியட்நாம் சந்தித்த இழப்புகளோடு பிரச்சனை முடிந்துவிடவில்லை. அந்தப் போரில் பாதிக்கப் பட்ட குடும்பங்கள், அதில் போரிட்ட முன்னாள் ராணுவத்தி னர் ஆகியோருக்கான நலத்திட்டங்கள் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பிலிருந்து மீளுதலுக்கான ஒதுக்கீடு ஆகிய வற்றிற்கான செலவு தேசிய பட்ஜெட்டில் 25 சதவிகிதமாக உள்ளது. இருந்தும், அந்த நடவடிக்கைகள் வியட்நாமின் பொருளாதாரத்தைப் பாதிக்கவில்லை. இத்தனைக்கும், அமெரிக்காவின் தாக்குதலின்போது இருந்த மக்கள் தொகை தற்போது இரட்டிப்பாகி இருக்கிறது. பொருளா தார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதிப்பையும் சேர்த்தே கொண்டு வந்துள்ளது.

வறுமை ஒழிப்பு

முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார வளர்ச்சி யைப் போலல்லாமல்,  வியட்நாம் மக்கள் பலன் கண்டி ருக்கிறார்கள்.  பத்தாண்டுகளுக்கு முன்பாக வியட்நாம் மக்களில் 63 சதவிகிதம் பேர் வறுமைக் கோட்டிற்குக்கீழ் உழன்று கொண்டிருந்தனர். பெரும் பாய்ச்சல் முன்னேற் றத்தினால் இது ஏழு சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. பொருளாதார செயல்பாடுகளில் அரசுத்துறையின் பங்கு பெரும்பான்மையாக இருப்பதும், பொதுத்துறைகளில் அரசு முதலீடு அதிகரிப்பும், மனித வளத்தை மேம்படுத்து வதும் வியட்நாம் அரசின் முக்கிய செயல்பாடாக இருந்தது. ஒட்டுமொத்த தேசத்தின் வளங்களும், அனைத்து நிலங்களும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இவையனைத்தும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் நூற்றாண்டு வளர்ச்சிக் கான இலக்கு அமைப்பின் ஆய்வின்படி, வளர்ச்சி குறைந்த நாடுகளின் பட்டியலில் இருந்து, நடுத்தர வளர்ச்சி அடையும் நாடுகளின் பட்டியலுக்கு வியட்நாம் மாறியிருக்கிறது. வறு மையிலிருந்து மக்களை விடுவிக்கும் பணி பெரும் வெற்றியை ஈட்டியிருப்பதோடு, வேலையின்மையின் விகிதம் பெரும் அளவில் குறைந்திருக்கிறது. அரசுத் துறை, தனியார் மற்றும் கூட்டு என்று அனைத்துத்துறை களின் தொழிலாளர்களுக்கும் கடந்த இருபது ஆண்டுக ளாகத் தொடர்ந்து ஊதியம் அதிகரித்தே வந்துள்ளது. 

சொந்தக் காலில் உணவுத்துறை

உணவுப் பொருட்கள் உற்பத்தியில் வியட்நாம் மிகவும் பின்தங்கியிருந்தது. சுமார் இருபது அல்லது முப்பது லட்சம் டன் உணவு தானியங்கள் இறக்குமதி ஆகி வந்தன. உணவு தானிய உற்பத்தியில் பெரும் கவனத்தை வியட்நாம் அரசு செலுத்தியதால் தற்போது அறுபது முதல் எழுபது லட்சம் டன் வரையில் உணவு தானியங்கள் ஏற்றுமதி ஆகி வருகின்றன. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. நெல் உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. முதலீடு மற்றும் மானியங்கள்தான் இதை சாத்தியமாக்கியிருக்கின்றன. சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நோக்கிய பாதை யில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது என்ற முனைப்பில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான அரசு உள்ளது. அதே வேளையில், தனது நீண்ட இலக்கு  “வளர்ச்சியடைந்த சோசலிசம்” என்பதையும் அவர்கள் மறக்கவில்லை. அதை அடைவதில் தீவிரமாக உள்ளனர். வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்புகள் உருவாக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை அதை உறுதிப்படுத்துகின்றன.