வேளாண்மை, தொழில்துறை, சுற்றுச்சூழல், குடும்பம் யாவற்றையும் காத்திட மிக ஆதரமானது தண்ணீராகும். அவற்றில் உணவும், நீரும் மனிதனின் அடிப்படை தேவைகளாகும். உலக அளவில் நிலத்தடியிலிருந்து எடுக்கும் நீரில் நான்கில் ஒரு பங்கை இந்தியா பயன்படுத்துகிறது. உலகின் நீர் பயன்பாட்டில் 69 சதவீதம் வேளாண்மை பாச னத்திற்கும், தொழில்துறை பொருட்கள் உற்பத்திக்கு 15 சத வீதமும், குடும்பம், குடிநீர், குளியல், சமையல், துப்புரவு, தோட்டப் பராமரிப்பு என அடிப்படையில் வீட்டு தேவைக ளுக்கு 15 சதவீதமும் என பயன்பாடு உள்ளது.
ஜல் ஜீவன் மிஷன்
இந்திய கிராமங்களின் 15 சதவீதம் பயன்பாட்டு குடிநீர்த் தேவையை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலை யில் தான் ‘ஜல் ஜீவன் மிஷன் 2024’ திட்டம் உதயமானது. அனைத்து வீடுகளுக்கும் குழாய் நீரை வழங்கப் போவதாக தம்பட்டம் அடித்து வாணவேடிக்கை நடக்கிறது. கொரோனா காலத்தில் மத்திய அரசு ஏழைகளை தவிக்க விட்டது. மேலும் ஒரு இடி விழுந்தது போல இலவச குடிநீர் பொது விநியோகத்தைப் பறிக்கிறது.
காலநிலை மாற்றத்தினை அறிந்து இயற்கையின் கொடையான மழைப்பொழிவு நீரை சேகரிப்பது, அதனை பாதுகாப்பது மற்றும் நிர்வகித்திட உலகம் முயற்சிக்கிறது. அதிலும் இந்தியா பின் தங்கியுள்ளது. கிராமப்புறத்தில் மொத்தம் 18.5 கோடி வீடுகள் உள்ளன. கடந்த 70-72 ஆண்டுகளில், 3.5 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் வழங்கப்பட்டது என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது என்றே பொருள். அதனை வேகப்படுத்த நீர் தீர்ப்பாயச் சட்டம் 1962 இல் இயற்றி, ஒன்பது தீர்ப்பா யங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. அப்போதும் கிராமப் புறத்திற்கு குடிநீர் விநியோகத்தை சிறப்பாக நிறைவேற்ற முடியவில்லை. தற்போது நதி நீர் தகராறு தீர்ப்பாய திருத்தச் சட்டம் 2019 வந்தது; ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என 73வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நாட்டுக்கு தெரிவித்தார். நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டுமென நீட்டி முழங்கினார். இப்போது பொய்மை வெளிச்சத்திற்கு வருகிறது.
ஜல் ஜீவன் திட்டத்தை (JJM) விரைந்து செயல்படுத்தி அனைத்து வீடுகளுக்கும் 2024 க்குள் குழாய் மூலம் தண்ணீர் வழங்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் படும் துயரத்தை விரட்ட வேண்டும். இதனை தேசிய முன்னு ரிமையாக நிறைவேற்ற வேண்டும் என்று மோடியின் அரசு முதலைக் கண்ணீர் வடித்துள்ளது.
தமிழகத்தில்...
இத்திட்டத்தின் கீழ் மாநிலத்தில் மொத்தமுள்ள 1.27 கோடி கிராமப்புற வீடுகளில், 21.85 லட்சம் வீடுகள் தான் தண்ணீர் இணைப்பு ஏற்கனவே பெற்றுள்ளன. அதனால் 78 சதவீதம் குழாய் இணைப்புகள் உள்ள சிவகங்கை மாவட்டம், 61 சதவீதம் உள்ள வேலூர் மாவட்டம், 58 சதவீதம் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஆகியவற்றில் நடப்பு ஆண்டில் 100 சதவீத இணைப்புகள் வழங்கி டெபாசிட் பெற திட்டமிடப்பட்டுள்ளது. முதல் துவக்கமாக தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராமப்புற பகுதியில் பொது குழாய் மூலம் தண்ணீர் இலவசமாக பெறுவதை தடுத்திட, திடீரென மாவட்ட ஆட்சியர் உத்தரவு என்று பல ஊர்களில் ஊராட்சி மூலம் தங்களது வீட்டு குடிநீர் இணைப்பு முறையற்றதாக உள்ளது. அதனை வரைமுறைப்படுத்திட வேண்டுமென நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். இனி டெபாசிட் தொகை மற்றும் மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் குடிநீர் இணைப்பு பயன்படுத்த முடியாது எனவும் எச்சரிக்கை செய்கிறது. உடனடியாக வைப்புத் தொகை ரூபாய் ஆயிரம், மாதாந்திர கட்டணம் ரூபாய் ஐம்பது என 1.04.2020 முதல் 20.07.2020 வரை பணம் செலுத்திட வேண்டும்; தவறி னால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மிரட்டுகின்றனர். பின்பு ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் குழாய்களில் மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்கும் திட்டம் வரப் போகிறதாம். இலவசமாக வழங்கிய குடிநீருக்கு வந்த ஆபத்தை உடன டியாக தடுக்க வேண்டும்; காவிரிப் படுகை கொண்ட தஞ்சைக் கே இந்தக் கொடுமையா என மக்கள் உமிழ்கிறார்கள்.
கிராமப்புறங்களின் துயரம்
கிராமப் பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை கள் ஏராளம், பலருக்கு நிலம், வீடு கிடையாது, குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இல்லை, முதியோர் உதவித் தொகை பெற முடியவில்லை, குழந்தைகளின் கல்வி பகல் கனவாகவே போயுள்ளது, கிஞ்சிற்றும் சுகாதாரமில்லை, கொடிய நோய் தாக்குதல் ஒரு புறம், பசி நோய் மறுபுறம் என அவதிப்படு கின்றனர். ஏழை மக்கள் உயிர் வாழ்வதற்கு கொண்டு வந்த நூறு நாள் வேலை திட்ட சட்டத்தின் அடிப்படையில் ஜாப்கார்டு வைத்துள்ள அனைவருக்கும் நூறு நாள் வேலை கொடுப்பதில்லை, சட்டக்கூலி ரூ.256 ஒரு ஊராட்சி யில் கூட வழங்கவில்லை. ஊழல் தலைவிரித்தாடுகிறது, உணவுக்கே வருவாயின்றி இலவச ரேசன் அரிசி பெற்று உயிர் வாழும் நாட்டில் இலவசமாக வழங்கிய தண்ணீரை யும் பறிக்கிறார்கள் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட நாற்காலியில் அசையாமல் இருப்பதே அடியேன் லட்சியம் என தமிழக முதல்வர் காட்சியளிக்கிறார்.
தமிழகத்தில் நீர் வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வள ஆதாரத்தை பாதுகாத்திட தீவிரப் பிரச்சா ரத்தை மேற்கொள்வோம், ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர்களை கொண்டு தமிழக அளவில் ஆய்வு செய்வோம் என்று 2019 ல் பேசிய முதல்வர் ஏன் இப்போது வாயை மூடிக்கொண்டுள்ளார் என்பது புலப்படவில்லை.
தண்ணீர் வியாபாரம் தழைக்காது
‘தண்ணீர், தண்ணீர் எங்கும் தண்ணீர்... ஆனால் குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் இல்லை’ என்ற ஆங்கிலக் கவி கோலரிட்ஜின் புகழ் பெற்ற வரிகள் உயிர்ப்புடன் இப்போது நெஞ்சை நெகிழ வைக்கின்றன.காலநிலை மாற்ற சுழற்சி யால் திடீரென்று கனமழை, வறட்சி, வெள்ளம், புயல் என பலவழிகளில் நாடு பாதிப்புக்குள்ளாகிறது. ரசாயன கழிவுகள், குப்பைகள், சாக்கடை சகதிகளால் தண்ணீர் மாசு படுதல் அதிகரித்து எவ்வளவு தான் சுத்திகரிப்பு செய்தாலும் பிரச்சனைகளே ஏற்படுகிறது. ஒரு சமூகம் தாகத்துடன் தவிக்கும் போது தண்ணீர் வியாபாரம் தழைக்காது என்பது ஆட்சியாளர்களுக்கு புரியவில்லை என்றால் மக்களின் எழுச்சி மிக்க போராட்டங்களே அதற்கு பதிலாக அமையும்.அத்தகைய போராட்டத்தை கையில் எடுக்கிறது அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம்.
- குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண வல்லுநர்கள், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கவேண்டும்.
- அதுவரை டெபாசிட் கட்டாய வசூலை நிறுத்த வேண்டும். தொடர்ந்து இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும்.
- நூறு நாள் வேலை, ஜாப் கார்டுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும். சட்டக்கூலி ரூ.256 யை குறைக்காமல் வழங்க வேண்டும்.
- நூறு நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஆண்டு பட்ஜெட்டில் 2% தொகை - அதாவது சுமார் ரூ.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் நூறு நாள் வேலையை 200 நாள் ஆக உயர்த்தி, தினக்கூலி ஒரு நபருக்கு 600 ரூபாய் வழங்க வேண்டும்.
- பேரூராட்சி பகுதிக்கு நூறு நாள் வேலையை விரிவுபடுத்த வேண்டும்.
- முதியோர் உதவித் தொகை ரூ.3000 வழங்க வேண்டும்.
- ஏழைகளை மிரட்டும் நுண்நிதி கடன் வசூலை உடன் நிறுத்தவேண்டும்.
- கொரோனா கால நிவாரண நிதியாக குடும்பம் ஒன்றுக்கு மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும்
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 50 கிலோ அரிசி உள்ளிட்ட 21 வகையான உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கவேண்டும்.
- சத்துணவு கூடங்களில் குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நூறு நாள் வேலை தொழிலாளர்கள் அனைவருக்கும் விலையில்லா மதிய உணவு வழங்க வேண்டும்.
- விவசாய கூலித்தொழிலாளிகள் விபத்தில் மரணமடைந்தால் நிவாரண உதவித் தொகையாக ரூபாய் 3 லட்சம் வழங்க வேண்டும்.
- கிராமங்களிலும் வீடுவீடாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். நோய் எதிர்ப்பு மருந்துகள், கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் வீடுவீடாக வழங்க வேண்டும்.
- பொதுசுகாதாரம் பாதுகாத்திட உள்நாட்டு உற்பத்தியில் மத்திய அரசு 3 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 2020 ஜூலை 28-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாய கூலித் தொழிலாளிகள் சங்கமிக்கும் எழுச்சி மிக்க போராட்டம் நடைபெறவுள்ளது. கோரிக்கை வெற்றி பெற அனைவரும் ஆதரிப்பீர்.
கட்டுரையாளர் : மாநிலச் செயலாளர்,
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்.