சாத்தூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான சூரியபிரபா பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். வாகனத்தில் பட்டாசு ஏற்றும்போது உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையில் உள்ள அனைத்து அறைகளிலும் தீ மளமளவென பரவி பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் தரைமட்டமாயின. தகவலறிந்த சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் சிக்கிய 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தீ விபத்துக்காக காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.