வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

img

மருத்துவப் படிப்புக்கான தனியார் கல்லூரி கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு மவுனம்

விருதுநகர்:
தமிழக அரசானது, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் செல்லும் மாணவ, மாணவிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தை இன்னும் அறிவிக்காத நிலை உள்ளது. இதனால், தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்றோரிடம் பல லட்சம் ரூபாய் கூடுதலாக வசூலிக்கும் நிலை உருவாகி உள்ளது. 

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளும், பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் 3 மருத்துவக் கல்லூரிகளும், 13 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம்39 மருத்துவக் கல்லூரிகள்  உள்ளன. இதில் மொத்தம் 5400 இடங்கள் உள்ளன. இதில் அரசு கல்லூரியில் மட்டும் 3650 இடங்கள் உள்ளன. அதில் சேர்ந்து படிக்க விரும்பும், மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பின்பு, மாணவ, மாணவிகள்  கலந்தாய்வின் மூலம் தாங்கள் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்து மருத்துவப் படிப்பை துவக்குவது வழக்கம். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்துள்ளது. இதில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் செல்லும் மாணவர்கள் ஏராளம். ஆனால், அம்மாணவர்கள் எவ்வளவு கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை தற்போது வரை அறிவிக்காமல் தமிழக அரசு மௌனம் காத்து வருகிறது. இதனால், ஏழை, நடுத்தர மாணவர்களின் பெற்றோர்களிடம் தனியார் கல்லூரி நிர்வாகம், அதிக அளவில் பணம் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து விருதுநகரைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் சுகாதாரத்துறை அமைச்ச ருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர்  கூறியதாவது,தனியார் கல்லூரிகள் அரசின் ஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்கு, அரசு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு என்பதை, கலந்தாய்வின் போது முறையாக தெரியப் படுத்துவதில்லை. கல்லூரிகளும் தெரிவிப்ப தில்லை. பல கல்லூரிகளில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைவிட இரண்டு, மூன்று மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.  இதனால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த  பெற்றோர்கள் பெரும் பாதிப்படைகின்றனர். எனவே, கலந்தாய்வின்போது அரசு நிர்ணயித்த கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு என்பதை மாணவர்களுக்கு அரசு தெரிவிக்கும் வகையில்  உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.  

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் கூறியதாவது : ஒவ்வொரு ஆண்டும், மருத்துவக்கல்லூரி கட்டணத்தை தமிழக அரசு அறிவிப்பதுவழக்கம். ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாகவே லட்சக்கணக்கில் பெற்றோர்களிடம் வசூலிக்கின்றனர். இது தமிழக அரசுக்கும்  நன்கு தெரியும். இது அரசும், தனியார் மருத்துவக் கல்லூரிநிர்வாகமும் இணைந்து கூட்டுக் கொள்ளை யடிக்கும் செயலாகும். இதனால், ஏழை எளியமாணவர்களின் பெற்றோர்கள் மேலும் மேலும்கடன் சுமையில் வீழ்வார்கள். ஏராளமான மாணவர்களின் மருத்துவக் கனவு பாழாகி விடும். எனவே, தமிழக அரசானது, நிர்ணயம் செய்த தொகையை  மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரிகள்  வசூலித்திட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;