tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் பிப்.26ல் பெருந்திரள் மாநாடு

கேரள, புதுவை முதல்வர்கள் பங்கேற்பு

சென்னை, பிப்.11- குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாநில அளவில் மாபெரும் மனிதச் சங்கிலி இயக்கத்தை நடத்திய தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, இதன் அடுத்த கட்டமாக ஒரு பெருந்திரள் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளது. இம்மாதம் 26 ஆம் தேதியன்று சென்னையில் கூடவுள்ள இந்த மாநாட்டில் உரையாற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் அனைத்து சமயத் தலைவர்களும் அறிவுத்தளச் செயல்பாட்டாளர்களும் அழைக்கப்பட உள்ளனர். மக்கள் ஒற்றுமை மேடையின் செயற்பாட்டாளர் குழு கூட்டம் செவ்வாயன்று (பிப்.11) சென்னையில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க.உதயகுமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, கல்வியாளர் தாவூத் மியாகான் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவு ஆகியவற்றை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி ஜனவரி 26 அன்று தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி இயக்கம் எழுச்சியோடு நடைபெற்றது. வரலாறு காணாத வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பெரும் திரளான மக்கள் அதில் பங்கேற்றார்கள். பிப்.11 அன்று சென்னையில் நடைபெற்ற செயற்பாட்டுக் குழு கூட்டத்தில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது”.  இந்த மாநாடு பிப்ரவரி 26 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கேரள, புதுவை முதலமைச்சர்களை அழைக்கவும், அனைத்து சமயத் தலைவர்கள் மற்றும் அறிவுஜீவிகள் பங்கேற்கச் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

கண்டனம்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தலைநகர் தில்லியில் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற ஜமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மதச்சார்பின்மை கோட்பாட்டி ற்கும் மக்கள் ஒற்றுமைக்காகவும் செயல்பட்டு வரும் இயக்கங்கள் தில்லி காவல்துறையின் இந்த அராஜகத்துக்கு ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவிக்க வேண்டுமென மேடை கேட்டுக்கொள்கிறது என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.  செயற்பாட்டுக் குழு கூட்டத்திற்கு பஷீர் முகமது தலைமை தாங்கினார். மத்திய அரசு ஊழியர் சங்கத் தலைவர் எம்.துரைப்பாண்டியன், இந்திய சமூக விஞ்ஞானக் கழகத்தின் ஞானகுரு, பத்திரிகையாளர்கள் பன்னீர்செல்வம், முகமது அமீன், அ.குமரேசன், சென்னை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ராமகிருஷ்ணன், குமார், குழு உறுப்பினர் கள் இரா.தெ. முத்து, மன்சூர் காசிப், உமர் பரூக், யாகூப், உமருல்லா, ஹனீப், இப்னு சவுத் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.