tamilnadu

img

விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதை மாரியப்பன், ரஞ்சித்குமார் பெற்றனர்...

மதுரை:
விளையாட்டுத் துறையில் சிறந்து  விளங்குபவர்களுக்கு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல்ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளைவழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது.இந்த வருடம் இந்த விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

இந்தாண்டு தேசிய விருதுக்கு 74 பேர்தேர்வு செய்யப்பட்டனர், இதில் ஐந்து பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, 27 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 60 பேர் பல்வேறு நகரங்களில் உள்ள 11 விளையாட்டு ஆணையம் (எஸ்ஐஐ) மையங்களில் நடத்தப்பட்ட மெய்நிகர் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்திய கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த உயரம் தாண்டுதல் வீரா் மாரியப்பன் தங்கவேலு, மகளிர் ஹாக்கி அணிகேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனைவினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகிய ஐந்து பேருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளா் இஷாந்த் சா்மா, கிரிக்கெட் வீராங்கனை தீப்திசர்மா உள்ளிட்ட 27 பேருக்கு இந்த ஆண்டுக்கான அா்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வில் வித்தை வீரா் அதானு தாஸ், ஹாக்கி வீராங்கனை தீபிகா தாக்குா், கபடி வீரா் தீபக்ஹூடா, டென்னிஸ் வீரா் திவிஜ் சரண் உள்ளிட்டோர் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன. 

தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் ஜெ.ரஞ்சித் குமாருக்கு தயான்சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குல்தீப் சிங் (தடகளம்), ஜின்சி பிலிப்ஸ் (தடகளம்), என்.உஷா (குத்துச்சண்டை), நந்தன் பி பால் (டென்னிஸ்) உள்ளிட்ட 15 வீரர்களுக்கு தயான் சந்த் விருது வழங்கப்பட்டுள்ளது.துரோணாச்சார்யா விருது இந்த ஆண்டு13 பயிற்சியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மேந்திரா திவாரி (வில்வித்தை), ஷிவ் சிங் (குத்துச்சண்டை), நரேஷ் குமார் (டென்னிஸ்), ஜூட் பெலிக்ஸ் (ஹாக்கி), ஜஸ்பல்ராணா (துப்பாக்கிச் சுடுதல்) போன்ற பயிற்சியாளர்கள் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள்.தேசிய விளையாட்டு தினமான சனிக்கிழமை விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டன. காணொலி மூலம் நடைபெற்ற விழாவில் தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

சு.வெங்கடேசன் பரிந்துரை
காமன்வெல்த் மற்றும் ஏசியன் விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களும், உலக அளவிலான தடகளப் போட்டிகளில்பத்து தங்கப்பதக்கமும் தேசிய அளவிலான போட்டிகளில் 38 தங்கப்பதக்கமும் வென்றுள்ளார் ரஞ்சித்குமார்.சில வாரங்களுக்கு முன்பு தயான் சந்த் விருதுக்கு ரஞ்சித் குமாரை பரிந்துரை செய்துமதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சம்மந்தப்பட்ட துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் ரஞ்சித்குமார் தயான்சந்த் விருது பெற்றுள்ளார்.

பாரா ஒலிம்பிக்கில்  பத்து மாற்றுத்திறனாளிகள்
தயான்சந்த் விருதுபெற்ற மதுரை (தமிழகம்) ராயல்நகரைச் சேர்ந்த ஜெ.ரஞ்சித் குமாருக்கு கண்ணாத்தாள் என்ற மனைவியும் பிரவீன்குமார்(14) என்ற மகனும் மெர்லின் (5) என்ற மகளும் உள்ளனர். தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள பயிற்சியாளராக தமிழ்நாடுமேம்பாட்டு ஆணையத்தால் நியமிக்கப்பட்டு மதுரையில் பணியாற்றி வருகிறார். விருது கிடைத்தது குறித்து அவர் கூறுகையில், “இந்தவிருது ஊக்கத்தையும் மட்டற்ற மகிழ்ச்சியையும் அளிக்கிறது” எனக்காக தொடர்ந்து குரல்கொடுத்த எனது பயிற்சியாளர் பரசுராமன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மக்களவை உறுப்பினரின் பரிந்துரைக் கடிதம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமென்றார்கள். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டேன். மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கொரோனாநிவாரண பணிகளில் இருந்ததால் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை. அவரது உதவியாளர் ரவிராஜா-வை சந்தித்து விபரங்களை தெரிவித்தேன். உரிய உதவிகள் செய்வதாகக் கூறினார் என்றார்.மேலும் அவர் கூறுகையில், நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்திலிருந்து பத்து மாற்றுத்திறனாளி வீரர்களையாவது பங்கேற்கச் செய்யவேண்டுமென்பதே எனது லட்சியம். எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் மாநில-மத்திய அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 13 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய நீண்டகால கனவு நிறைவேறியிருக்கிறது. ஏற்கனவேமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதைப் பெற்றுள்ளேன். 

பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
விருது மகிழ்ச்சியளித்தாலும் எனக்கு சிறுநெருடல் மட்டும் உள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக பயிற்சியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறேன். 5 ஆயிரம் ரூபாயில்பணிக்குச் சேர்ந்த நான் தற்போது ரூ.22 ஆயிரம்பெற்று வருகிறேன். எனது பணியை நிரந்தரப்படுத்தவேண்டுமென தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகிறேன். இந்தத்தருணத்தில் எனது பணியை நிரந்தரப்படுத்த வேண்டுமென தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

====நமது சிறப்பு நிருபர்====

;