tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

கந்தர்வகோட்டை அருகே  இன்று இளைஞர் திறன் திருவிழா

புதுக்கோட்டை, ஜூலை 18-  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்த புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், சனிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல், மாலை 3 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இம்முகாமில், 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். இலவச திறன் பயிற்சிக்கு பிறகு தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படவுள்ளது.  மகளிர் திட்டம் சார்பாக நடைபெறவுள்ள தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு  சிறப்பு முகாம்கள்

பெரம்பலூர். ஜூலை 18-  பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது செவ்வாய்க் கிழமைகளில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்று வந்தது.  இந்த முகாம் ஆகஸ்ட் மாதம் முதல், அனைத்து செவ்வாய்க் கிழமைகளிலும் (அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து) மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.  அடையாள அட்டை பெற, விண்ணப்பிப்பவர்கள் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -04, ஏற்கனவே சிகிச்சை மேற்கொண்டு வந்தால் சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

கமுதி அருகே  வாலிபர் கொலையில்  ஒருவர் கைது

இராமநாதபுரம் ஜூலை.18  கமுதி அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில், ஒரு வரை போலீசார் கைது செய்தனர்.  விருதுநகர் மாவட்டம், அம்மன்பட்டியை சேர்ந்த நல்ல மருது மகன் நல்லுக்குமார்(23). கமுதி கோட்டைமேட்டில் வசித்து வந்த இவரை காணவில்லை என்று கடந்த 14 ஆம் தேதி கமுதி காவல் நிலையத்தில் அவரது தாயார் காளீஸ்வரி புகார் அளித்தார்.  இந்நிலையில் மண்டல மாணிக்கம் காவல் எல்லையான கமுதி - திருச்சுழி சாலையில் உள்ள மரக்குளம் கருமேனியம்மன் கோயில் அருகே நல்லுக்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மண்டல மாணிக்கம் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளைத் தேடி வந்தனர். இதில் மரக்குளத்தை சேர்ந்த குருவி ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூரில்   காவல் சார்பு ஆய்வாளர்  மரணம்

சாத்தூர், ஜூலை 18- சாத்தூரில் மாரடைப்பால் சிறப்பு சார்பு ஆய்வாளர் மரணமடைந்தார். விருதுநகர் மாவட்டம்,  சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(49).  இவர் இருக்கன்குடி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.  இந்நிலையில், வெள்ளியன்று  காலை வழக்கம் போல விளையாட்டு மைதானத்திற்கு சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாம்.  இதையடுத்து சிறிது நேரத்தில் அவர்  மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

நாகர்கோவில் இந்து கல்லூரி  மாணவர் சங்க கிளை மாநாடு

நாகர்கோவில், ஜூலை 18- நாகர்கோவில் இந்து கல்லூரியில் இந்திய மாணவர் சங்க கிளை மாநாடு நடந்தது.  மாநாட்டிற்கு  ஏ.ஜனனி தலைமை தாங்கி னார்.  அனீஷ் வரவேற்றார். அமலா அஞ்சலி  தீர்மானம் முன்மொழிந்தார். மாவட்ட செய லாளர் எஸ்.சந்துரு துவக்க உரையாற்றினார். மாநில துணைத் தலைவர் எம்.காவ்யா நிறைவுரையாற்றினார். கிளை மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளை தலைவராக அனீஷ், கிளை செயலாளராக அமலா, துணை தலைவராக ராகேஷ், துணை செயலாளராக சபரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் பயோனியர் குமாரசாமி கல்லூரி கிளை பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் எஸ்.சந்துரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  கிளை தலைவராக  ஜி.வி.ஹரிஹரன், கிளை செயலாளராக ஐ.கார்த்திக், துணை தலைவராக நவீன், துணை செயலாளராக தோழர் என்.கே. சரண் , ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அனுமதியின்றி வெடிவைத்து கல் உடைத்த 2 பேர் கைது

பெரம்பலூர், ஜூலை 18-  பெரம்பலூர் அருகே, அனுமதியின்றி வெடிவைத்து பாறை கல் உடைத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  பெரம்பலூர் அருகே, செங்குணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பட்டா நிலத்தில் கனிம வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அனுமதியின்றி நூறு அடி அகலத்தில் 20 அடி ஆழமாக பள்ளம் பறித்து, அதனுள் வெடி வைத்து பாறை கற்களை உடைத்துள்ளனர்.  தகவலறிந்த பெரம்பலூர் தாசில்தார் பாலசுப்பிரமணியம் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டபோது, அனுமதியின்றி 3 இடங்களில் பெரிய பள்ளங்களை தோண்டி அதில் வெடி வைத்து கற்கள் உடைத்து வெட்டி எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பாறை உடைக்க பயன்படுத்திய கம்பரசர், கிட்டாச்சி, வெடி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்ட புதுக்குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன், ஊட்டத்தூரை சேர்ந்த தேவராஜன் ஆகிய இருவரையும் பிடித்து மருவத்தூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  இதுகுறித்து, விஏஓ செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நிலம் மதுரையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவருடையது என்பதும், கவுள்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூறியதன்பேரில், அந்த இடத்தில் சுப்ரமணியன், தேவராஜன் ஆகியோர் உபகரணங்களை கொண்டு கற்பாறைகளை உடைத்தது தெரியவந்தது.  இதுகுறித்து, மருவத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து அரசு அனுமதியின்றி கல் குவாரிக்காக கற்களை உடைத்து வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்ட சுப்ரமணியன், தேவராஜன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.