tamilnadu

img

ஸ்விக்கி எனும் சிலந்தி வலையில் சிக்கும் தொழிலாளர்கள்

உலகமயமாக்கல், தனி யார்மயமாக்கலின் தாக்கத் தால், உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் வேலைக்கான புரித லில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.   இந்தியாவிலும் என்ன வேலை,  வேலையின் தன்மை, வேலைக்கு தேவையான திறன்களில் மாறு தல் ஏற்பட்டுள்ளது. தீவிரமாக நகர மயமாக்குதல் நடைபெறுவதால் நகர்ப்புறப் பகுதிகளில் சேவைத் துறை யில் பணி பாதுகாப்பற்ற முறைசாரா வேலைகள் உருவாகியுள்ளன. இந்த மாற்றத்திற்கு இணையதள வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி முக்கிய காரணமாக இருக்கிறது. இதுபோன்ற சேவைத் துறையில் உள்ள நிறுவனங்கள் தொழிலாளர் விதிமுறைகளுக்கு எதிராக ஊதிய உத்தரவாதம், தொழிலாளர் உரிமை கள் போன்ற எந்த விதமான ஒப்பந்த மும் கையெழுத்திடப்படாமல் தற்காலிக தொழிலாளர்களை பங்குதாரர்கள் (பாட்னர்கள்) என்ற பெயரில் பணி அமர்த்துகிறார்கள். அப்படிக் குறிப்பி டுவதன் மூலம் தொழிலாளர்களுக்கு உரிய குறைந்தபட்ச அடிப்படை ஊதியம், எட்டு மணி நேர வேலை, பணி பாதுகாப்பு போன்ற அடிப்படை தொழிலாளர் சட்டப்படி தர வேண்டிய உரிமைகளைப் புறக்கணிக்கிறார்கள்.

நிதி ஆயோக் அறிக்கையின்படி, இந்தியாவில் தற்போது 77 லட்சம் “ஜிக்” தொழிலாளர்கள் இருப்பதாக வும், 2029-2030க்குள் 2 கோடியே 35 லட்சம் பேராக இந்த எண்ணி க்கை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப் படுகிறது. “ஜிக்” தொழிலாளர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட வேலையை, குறிப்பிட்ட காலத்துக்கு செய்து தருவது, அதற்கு அவர்கள் தரும் கூலியைப் பெற்றுக் கொள்வது என்ப தாகும். அவர்களுக்கு வேலை நிரந்த ரம், உரிய சட்டப் பாதுகாப்பு, சட்ட உரி மைகள் எதுவும் அமல்படுத்துவ தில்லை. இதில் பெரும் பகுதியினர் 30 வயதிற்கு கீழ் உள்ளவர்களாகவும், மூன்றில் ஒரு சதவீதம் பட்டதாரிகளாக வும் இருக்கிறார்கள். இவர்கள் மன அழுத்தம் நிறைந்த பணிச் சூழலுடன், திறமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இது போன்ற வேலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

பாட்னர்கள் என்ற பெயரில் தொழிலாளர்கள்;

இந்தியாவில் உள்ள டெலிவரி தொழிலாளர்கள் பொதுவாக ஒரு டெலிவரிக்கு இவ்வளவு ஊதியம் என்று பெறுகிறார்கள் மேலும் டெலிவரி செய்யத் தவறும்பட்சத்தில் ஆர்டர் தொகையுடன், அபராதமும் இவர் களுக்கு விதிக்கப்படுகிறது. பெரும்பா லும் குறைந்தபட்ச ஊதியத்தையும் விடக் குறைவான ஊதியம்; நோய்வா ய்ப்பட்டால்கூட ஊதியத்துடன் விடுப்பு கிடைக்காது, வாராந்திர விடுமுறை போன்ற அடிப்படை உரிமைகள், சட்டப் பாதுகாப்பு மற்றும் சமூக பாது காப்பு என எதுவும் இல்லாமல் வேலை க்கு அமர்த்தப்படுகிறார்கள்.

ஸ்விக்கி தொழிலாளர் போராட்டங்கள்:

உணவுப் பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளும் தளமான ஸ்விக்கி தளத்தில் பணிபுரியும் டெலிவரி தொழிலாளர்கள், ஒரு டெலிவரி செய்வதன் மூலம் பெறக்கூடிய தொகை தொடர்ந்து குறைக்கப் படுவதையும், மென்மேலும் வேலை நேரம் அதிகரிக்கப்படுவதையும் எதிர்த்து, சட்டப் பாதுகாப்பை வலி யுறுத்தி இந்த ஆண்டு ஆங்காங்கே  பல போராட்டங்களைநடத்தியுள்ளனர். ஜனவரி 21ஆம் தேதி கொல்கத்தா வில் பல பகுதிகளில் டெலிவரிக்கு போதுமான ஊதியம் கிடைக்கவில்லை என்று போராட்டம் நடத்தினர். ஜூலை 24-ஆம் தேதி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெலிவரி தொழிலாளர்கள் பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூலை 28ஆம் தேதி தில்லியில் இதேபோல் டெலிவரி தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தினர். இந்த சூழலில் சில தினங் களுக்கு முன்பு ஸ்விக்கி நிறுவனம் புதிய ஒழுங்கு முறையை அறிவுறுத்தி யுள்ளது. சென்னையை மண்டல மாகப் பிரித்து, வேலை நேரத்தை 12 மணி நேரத்தில் இருந்து 16 மணி நேரமாக மாற்றியுள்ளது. இந்த புதிய விதிமுறைகளை கண்டித்து சென்னை யில் 300க்கும் மேற்பட்ட ஸ்விக்கி டெலி வரி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து டெலிவரி தொழி லாளர்கள் கூறுகையில், சராசரியாக நான்கு கிலோமீட்டர் வரையிலான ஒவ்வொரு ஆர்டர்களுக்கும் அடிப்படை தொகையாக இருபது ரூபாய் தரப்படும். ஆனால் வாடிக்கை யாளர்களின் வீட்டிலிருந்து திரும்பி வரும்போது ஆர்டர் இல்லாமல் எட்டு கிலோமீட்டருக்கு உரிய தொகை கணக்கிடப்படுவதில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100க்கு மேல் இருக்கும்போது இந்த தொகை போது மானதாக இல்லை என்ற கவலை இருந்தது.  காலை 11 மணி முதல் இரவு  11 மணி வரை 12 மணி நேரம் 20 டெலி வரி செய்தால் நாள் ஒன்றுக்கு ஊக்க தொகையாக ரூ.400 வழங்கப்படும்.  இப்பொழுது புதிய ஒழுங்குமுறையில் டெலிவரி பகுதியின் எல்லை சுருக்கப் பட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு 16 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

வாரம் முழுவதும் ஏழு நாட்கள் வேலை செய்து 130 டெலிவரிகள் செய்திருந்தால் கிடைக்கக்கூடிய ஊக்க த்தொகையையும் நிறுத்தியுள்ளனர். இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் பகுதி நேர தொழிலாளர்களின் வருகை பதிவு நேரத்தையும் மாற்றி யுள்ளனர். காலை 6.30 – 9.00 மணி மற்றும் 7 - 12 மணி வரை இருந்த ஷிப்டை அதிகாலை 5.30 – 11.00,  பகல் 11.00 – 3.00 மணி வரையும், பிற்பகல் 3.00 – 6. 00 மணி வரையும், மாலை 6.00 – 11.00   ஆக மாற்றியுள்ளனர். 30 நிமிடம் நீட்டிப்பு நேரத்தையும் ரத்து செய்து ஊக்கத்தொகையை நிறுத்தி, ஐந்து டெலிவரி செய்தால் 200 என்று நிர்ணயித்துள்ளார்கள். இந்தப் புதிய ஒழுங்குமுறையில் பணிபுரிந்தால் பெட்ரோல் 150 போக மீதி 50 ரூபாய் மட்டுமே ஊதியமாக பெறக்கூடியதாக இருக்கிறது. எனவே இந்த புதிய ஒழுக்கு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்துவதாககூறினர். ஸ்விக்கி விநியோகப் பரப்பு அதி கரிக்க அதிகரிக்க, இதில் விநியோகப் பணியில் ஈடுபடும் ஜிக் தொழிலா ளர்கள் விநியோக எல்லை சுருக்கப்படு கிறது. அதற்கேற்ப அவர்களின் கூலி யும் குறைகிறது. வேலை நேரம் அதி கரிக்கிறது. மென்மேலும் கசக்கிப் பிழி யக் கூடியவர்களாக ஸ்விக்கி விநி யோகத் தொழிலாளர்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்போது தனித்தனியாக பெருநகரங்களில் ஆங்காங்கே போராடும் நிலை உள்ளது. அவர்கள் மீது சுமத்தப்படும் வேலைப் பளுவும், சுரண்டலும் அதிகரிக்க, அதிகரிக்க, அந்த தொழிலாளர்களும் ஒரு விரிவான கூட்டமைப்பாக ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலையை நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

- லிவின்

;