ரூ. 10 லட்சம் மதிப்புள்ள சொந்த நிலத்தை கோவில் கட்ட தானமாக வழங்கிய சிபிஎம் கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான்
திருவாரூர், செப். 10 - “எங்களிடம் இல்லை மதம், எங்களிடம் இல்லை சாதி, எங்களில் உள்ளது மனிதநேயம் மட்டுமே’’ என்ற கம்யூனிஸ்டுகளின் தத்துவார்த்த கோட்பாடுகளுக்கு உதாரணமாக, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினரும், மாவட்டக் கவுன்சிலருமான ஜெ. முகமது உதுமான் தனது சொந்த இடத்தை கோவில் கட்டுவதற்கு தானமாக வழங்கி உள்ளார். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கடுவங்குடி ஊராட்சி வசந்த் நகரில் சர்வே எண்: 91.43இல் 200 சதுர அடியில் ஜெ. முகமது உதுமானுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். இந்நிலையில், இந்தப் பகுதியில் வசிக்கும் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜெ. முகமது உதுமான், தனது நிலத்தை கோவில் கட்டுவதற்கு தானமாக வழங்கியுள்ளார். வசந்த் நகர் கிராமகோவில் நிர்வாகிகள் பெயரில், திங்கட்கிழமை அன்று (செப். 8) சட்டப்படி பத்திரப்பதி வும் செய்து கொடுத்துள்ளார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெ. முகமது உதுமானின் இந்தச் செயல், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.