tamilnadu

img

அரவணைத்த அழகிய பூதம் - போஸே கொற்றவை

என் தாயின் யோனி
அழுக்கோடு குருதி கலந்த
பிண்டத்தை கக்கியது
நான் பிறந்தேன்!

தத்தி நடைபழகி
பேச தெரிந்த நாள்தொட்டு
வெளியே ஆண்
உள்ளே பெண்!

பருவம் மடைதிறந்தது
உருவம் சிதிலமடைந்தது
தோற்றம் புதிதாய்
தொடங்கியது மறுபிறவி!

பெத்தெடுத்த வயிறு கருகியதோ
எனை ஈன்றவளும் வெறுத்துவிட்டாள்!
சுற்றம் சுட்டெரிக்க உற்றம் உறவாட மறுக்க
தொட்டாசிணிங்கியாய் சுருண்டு சுருங்கி விழுந்தேன்!

அகதி கூட்டத்தோடு யாசக பொழப்பு
ஆண்டானுக்கெல்லாம் அடிமையான கட்டில் இரவுகள்!
வன்புணர்வுகள் பல கண்ட
சிலம்பற்ற கண்ணகி நான் அதனால் தானோ
எம்மொழியும் எமை பாட மறுத்ததோ!

பாதாள குழிக்குள் பயந்து
பதுங்கிய என்னை தூக்கியது
ஒரு அழகிய பூதம்
என் மன வறட்சிக்கு எழுச்சி நீரை
பருக கொடுத்து கை நீட்டி புரட்சி
பாதையை காட்டியது.

கொட்டத்தை அடக்கும் பூதத்தை பார்த்தேன்
கோபுரங்களும் திடுக்கிடும் அதன் குரல்களை கேட்டேன்.
எண்ணற்ற முகங்கள் ஏறெடுத்த நொடியில்
புன்சிரிப்புடன் சொன்னது அதன் பெயர்
மார்க்ஸியம் என்று!