சிதம்பரம், ஆக. 6- மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரை கீழணையில் இருந்து சுமார் 2 லட்சம் கன அடிக்குமேல் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆறு மற்றும் புதிய கொள்ளிடம் ஆறு நடுவே அமைந்துள்ள திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய 4 கிராமங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து ஏராளமானோர் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சத்து 8 ஆயிரத்து 227 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது, இதனால் சிதம்பரம் அருகேயுள்ள பெரியகாரமேடு பகுதியில் கொள்ளிடம் ஆற்று கரையில் உடைப்பு ஏற்பட்டதால் கரையோர பகுதியில் உள்ள வீரன்கோவில்திட்டு, பெரியக்காரமேடு, சின்னக்காரமேடு, கீழப்பெரும்பை, சிந்தாம்ப்பாளையம், இளந்திரமேடு, தெற்கு பிசாவரம், ஆகிய 7க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழும் ஆபத்து உள்ளது. உடைப்பு ஏற்பட்ட இடத்தை தற்காலிகமாக பொதுப்பணித்துறையினர் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை சனிக்கிழமை (ஆக. 8) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள கொள்ளிடக்கரையில் ஓமாம்பூலியூர், எய்யலூர், கீழ்புளியம்பட்டு, ஆதனூர், குச்சிபாளையம் கிராமங்களிலும் வெள்ளநீர் புகுந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் அந்த பகுதியில் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தண்ணீர் சூழ்ந்த கிராமங்களில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டின் பாதுகாப்பு கருதி அங்கேயே உள்ளனர். அவர்களுக்கு இருக்கும் இடத்திலேயே உணவு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வீரன்கோவில்திட்டு, பெரியகாரமேடு பகுதியில் நிரந்த தடுப்பனை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் மற்றும் அதிகாரிகள் சனிக்கிழமை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டனர். திட்டுக்காட்டூர் மற்றும் கீழகுண்டலபாடி கிராமத்திற்கு வந்த அமைச்சர் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அதிகாரிகளிடம் தண்ணீர் சூழ்ந்த 4 கிராமங்களிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து உத்தரவிட்டார். சிபிஎம் கோரிக்கை சிதம்பரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த கிராம மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் ஏற்பாடு செய்ய வேண்டும். வெள்ளநீர் செல்லும் கரைகளில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பலவீனமாக உள்ள கரைகளை பலப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.