அழகும், புத்திசாலித்தனமும் நிறைந்த ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு முழுச்சோம்பேறியான ஒரு அப்பன் இருந்தான்.
“ தன்னைவிட சோம்பேறி யாரோ அவன் தான் தன்னுடைய மகளுக்குக் கணவனாக முடியும்...” என்று அப்பன் நிபந்தனை போட்டான். ஏராளமானவர்கள் அந்த அழகியைப் பெண்பார்க்க வந்தார்கள். அவளை எல்லாருக்கும் பிடித்து விட்டது. ஆனால் அப்பன் அவர்கள் யாருக்கும் மகளைத் தருவதற்குத் தயாராக இல்லை.
“ இந்த இளைஞர்கள் யாரும் தன்னைவிட சோம்பேறிகளாக இல்லையே.. என்ன கஷ்டம்? “
அப்பன் மூக்கில் விரலை வைத்தான். சோம்பேறியாக இருந்தாலும் அப்பனின் கருத்தை மகள் எதிர்த்துப் பேசத்தயாராக இல்லை. ஆனால் அவளுக்குப் பொறுமை குறைந்து கொண்டேயிருந்தது.
ஒரு மங்கலநாள் காலைப்பொழுதில் ஒரு இளைஞன் வாசலைத் தாண்டி பின்பக்கமாக நடந்து வந்து கொண்டிருப்பதை அப்பன் பார்த்தான். அவருக்கு சிரிக்காமலிருக்க முடியவில்லை.
“ நீ என்னடா செய்றே? “ என்று அப்பன் கேட்டார்.
“ நான் உங்களுடைய மகளை எனக்குத் தருவீர்களா என்று கேட்பதற்காக வந்தேன்..”
இளைஞன் பதிலளித்தான்.
“ சரி.. ஆனால் நீங்கள் ஏன் பின்னோக்கி நடக்கிறீங்க? “
“ உங்களுடைய மகளுடனான திருமணம் தடைபட்டால் அப்போது பின்னால் திரும்பவேண்டாம் என்று இப்போதே பின்னோக்கி நடந்து வந்தேன்…”
இளைஞனின் பதில் கிழவனுக்குப் பிடித்து விட்டது. இவன் தன்னை விட படுசோம்பேறி தான்.
அவன் மகிழ்ச்சியுடன் தன்னுடைய மகளை அந்த இளைஞனுக்கு மணமுடித்துக் கொடுத்தான்.
மலையாளத்தில்- சி.ஆர்.தாஸ்