tamilnadu

img

அமெரிக்க ஏகாதிபத்தியமே, ஈரான்-லெபனான் மீதான போரை நிறுத்து! தமிழகம் முழுவதும் இடதுசாரிகள் - விசிக ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க ஏகாதிபத்தியமே, ஈரான்-லெபனான் மீதான போரை நிறுத்து! தமிழகம் முழுவதும் இடதுசாரிகள் - விசிக ஆர்ப்பாட்டம்!

சென்னை, மார்ச் 3 - அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் வேட்டைவிலங்கான இஸ்ரேலும் கூட்டாக ஈரான் மீது நடத்தி வரும் போரை நிறுத்த வேண்டும், ஒன்றிய பாஜக அரசு இந்த போரைக் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வா யன்று (மார்ச் 3) தமிழகம் முழுவதும் இடது சாரிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்)  லிபரேசன் ஆகிய கட்சிகள் சார்பில் நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக சென்னையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., சிபிஐ (எம்எல்) லிபரேசன் நிர்வாகி கிருஷ்ணவேணி, சிபிஎம் மாவட்டச் செய லாளர்கள் ஆர். வேல்முருகன், எம். ராம கிருஷ்ணன், ஜி. செல்வா, மாநிலக்குழு உறுப்பி னர் கே. வனஜகுமாரி, விசிக சட்டமன்ற உறுப் பினர்கள் எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஈரான், லெபனான் மீதான தாக்குதலை, அமெரிக்க ஏகாதிபத்தியம் நிறுத்த வேண்டும், பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலை யிடும் அத்துமீறலை கைவிட வேண்டும் என  வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கம் எழுப்பப் பட்டது. இந்தப் போராட்டத்தினிடையே செய்தியா ளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “மாநிலம் முழுவதும் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளன. பொதுமக்களும் குழந்தைகளும், அந்நாட்டின் உச்சதலைவரும் அவரது குடும்பமும் படு கொலை செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமெரிக்கா - இஸ்ரேலின் கொலைவெறிக்கு இந்திய மக்களின் எதிர்ப்பை  தெரிவிக்கவே இந்த போராட்டம் நடை பெறுகிறது”என்றார். “இந்தப் போரில் பல்வேறு நாடுகள் இழுத்து விடப்பட்டுள்ளன. டொனால்டு டிரம்ப்  இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த இந்த 13 மாத காலத்தில் 7 நாடுகள் மீது அமெரிக்கா குண்டு வீசி மக்களை கொன்றுள்ளது. அணிசேரா கொள்கையை கடைபிடிக்கக் கூடிய இந்திய அரசாங்கம் தனது செல்வாக்கை பயன்படுத்தி அமைதியை உருவாக்கவும், போரை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போர் தொடர்ந்தால் அப்பாவிகள் கொல்லப்படுவார்கள். கச்சா எண்ணெய் விலை உயரும். மார்ச் 2 அன்று ஒரே நாளில் பீப்பாய் கச்சா எண்ணெய் 8 டாலர் உயர்ந்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் 100 டாலர் வரை உயர்ந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலையும் உயரும். அதன்பிறகு அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள். ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டியது’ என்பது போல, ஈரான், வெனிசூலா மீதான தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, போரை நிறுத்த வேண்டும். அமைதியை உருவாக்க வேண்டும், வளை குடா நாடுகளில் உள்ள இந்திய மக்களை பாதுகாப்பாக ஒன்றிய அரசு மீட்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.