tamilnadu

கொடிக்கம்பம் அகற்றுவதற்கு எதிரான வழக்கை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுக!

கொடிக்கம்பம் அகற்றுவதற்கு எதிரான வழக்கை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுக

உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் சிபிஎம் கோரிக்கை

சென்னை, ஜூலை 3 - தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் நிறுவியுள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்த வழக்கை இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. வழக்கின் பின்னணி கடந்த ஜனவரி 27, 2025 அன்று மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி,  WP(MD) No.29035/2024 வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பின் பத்தி 43(i)ல், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்றுமாறு உத்தரவிட்டார்.  இந்த உத்தரவை மார்ச் 6, 2025 அன்று WA(MD)No.485/2025 என்ற மேல்முறையீட்டு வழக்கில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உறுதி செய்தது. சிபிஎம் நடவடிக்கை இந்நிலையில், இந்த உத்தரவிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கட்சியின் சார்பில் WP(MD)No.16766/2025 என்ற மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜூன் 20, 2025 அன்று தனி நீதிபதி இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.  இதை எதிர்த்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சார்பில் WA(MD)No.1738/2025 என்ற மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகளின்  முக்கியமான கருத்துகள் ஜூன் 26, 2025 அன்று நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் கே. ராஜசேகர் அமர்வில் இந்த மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் முக்கியமான கருத்துகளை தெரிவித்தனர்: இயற்கை நீதி மீறல்: அனைத்து அரசியல் கட்சிகளையும் வழக்கில் சேர்க்காமல், கட்சிகளின் கருத்துகளை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இயற்கை நீதிக்கு மீறல் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். அனுமதி பெற்ற கொடிக்கம்பங்கள்: ஏற்கெனவே அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்று வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றக் கோருவது உசிதமல்ல என்றும் தெரிவித்தனர். முந்தைய தீர்ப்புகள்: சிலைகளைக் கூட தனியார் இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கலாம் என்று நீதிமன்றம் முன்னர் தீர்ப்பு வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, கொடிக்கம்பங்களுக்கு மட்டும் ஏன் கடுமையான நடவடிக்கை என்று கேள்வி எழுப்பினர். மேல்முறையீட்டு நீதிபதிகளின் முடிவு எனினும், இந்த வழக்கில் “முன்னரே இரண்டு நீதிபதிகள் அமர்வு ஒரு கருத்தை தெரிவித்துள்ளதால், இந்த மேல்முறையீட்டு வழக்கை அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்வு பரிசீலிக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். “இந்த மேல்முறையீட்டை முடிவு செய்ய பெரிய அமர்வு அமைப்பதைப் பரிசீலிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியின் பார்வைக்கு வழக்கு ஆவணங்களை வைக்க பதிவுத் துறைக்கு உத்தரவிடுகிறோம்” என்று அவர்கள் கூறினர். அவசர நிலையும் கோரிக்கையும் நீதிபதி இளந்திரையன் தீர்ப்பின் அடிப்படையில் ஜூலை 16, 2025க்குள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவதால், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், குறிப்பாக மேல்முறையீட்டு மனுதாரர் சிபிஎம் மாநிலச் செயலாளருக்கும் இது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. சிபிஎம் நேரடி நடவடிக்கை இந்நிலையில், வழக்கறிஞர் ஆர். திருமூர்த்தி ஜூலை 3, 2025 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரை நேரில் சந்தித்து மனு ஒன்றை சமர்ப்பித்தார்.  அந்த மனுவில்: வழக்கு கோப்புகளை உடனடியாக தலைமை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்; இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைக்க உத்தரவிட வேண்டும்; இந்த விஷயத்தில் தலைமை நீதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனுவுடன் ஜூன் 26, 20 25 தேதியிட்ட மேல்முறையீட்டு நீதிபதிகளின் உத்தரவின் நகலும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கக்கூடிய முக்கியமான பொது நல வழக்காக உள்ளது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த விஷயத்தில் எந்த முடிவு எடுப்பார் என்பது எதிர்பார்ப்புடன் கவனிக்கப்படுகிறது.