tamilnadu

img

தமிழகத்தை வகுப்புவாத வன்முறைக் களமாக்க முயற்சி நடக்கிறது பாஜக - அதிமுக கூட்டணியை வீழ்த்துவதே முதல் கடமை!

தமிழகத்தை வகுப்புவாத வன்முறைக் களமாக்க முயற்சி நடக்கிறது பாஜக - அதிமுக கூட்டணியை வீழ்த்துவதே முதல் கடமை!

சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி அறைகூவல்

நாகர்கோவில், ஜூலை 2 - “தமிழகத்தை வகுப்புவாத வன்முறைக் களமாக்க முயற்சிக்கும் அதிமுக - பாஜக கூட்டணியை படுதோல்வி அடையச் செய்வதே முதல் கடமை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி அழைப்பு விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குமரி மாவட்ட வளர்ச்சி மற்றும்  மக்கள் கோரிக்கை மாநாடு, செவ்வாய்க்கிழ மை (ஜூலை 1) அன்று, நாகர்கோவிலில் நடை பெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலா ளர் எம்.ஏ. பேபி கலந்து கொண்டு உரையாற்றி னார். அப்போது அவர் பேசியதாவது:  

நாடாளுமன்ற ஜனநாயக மீறல்

பஞ்சாயத்துராஜ் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் தில்லியில் இன்று (ஜூலை 1) நடந்துள்ளது. இதில் ஏற்பட்ட அனுபவத்தை நமது கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் என்னிடம் தொலைபேசியில் விவரித்தார். அந்த குழுவில் அவர் உட்பட 17 பேர் இடம்பெற்றிருந்தனர். 5 பேர் பாஜகவினர். 12 பேர் எதிர்கட்சியினர். குழுவின் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். நிலம் கையகப்படுத்தலுக்கு இழப்பீடு வழங்குவது போன்றவற்றில் அதிகாரம் பெற்றுள்ளது இந்த குழு. இந்த குழுவின் முன்பு பிரபல திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜூம், சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கரும் கருத்து கூற அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் கருத்துக்கூற வாய்ப்பு அளிக்கக் கூடாது என  பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும் பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில், அவர்களது கருத்தைக் கேட்க  முற்பட்டபோது, பாஜகவின் 5 உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். ஆனாலும், நிகழ்ச்சி தொடரவே, சபாநாயகரிடமிருந்து ஒரு தாக்கீது வந்துள்ளது. அதில் நிகழ்ச்சியை தொடரக்கூடாது எனவும் பெரும்பான்மை இல்லை என ரத்து செய்யுமாறும் கூறப்பட்டுள் ளது. மோடி அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை அப்பட்டமாக மீறுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

சிறுபான்மையினரை  அழிப்பதே திட்டம்

மதுரையில் நடந்த சிபிஎம் அகில இந்திய  மாநாடு, நாட்டின் ஜனநாயகத்தைப் பாது காப்பதற்கு, பாஜகவின் பிடியில் இருந்து இந்த நாட்டை விடுவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்து க்கு எதிரான போராட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்பும், இந்திய ஜனநாயகமும் உருவானது. இந்தியாவில் உள்ள ஜனநாயகம் முழுமையானது என்று நாம் கருதவில்லை. ஆனாலும், இந்த ஜனநாயகத்தைக்கூட சீர்குலைக்கும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் மோடியும், அமித்ஷாவும், மோகன் பகவத்தும் ஈடுபட்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பே ஜனநாய கத்துக்கு புறம்பானது. அதன் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. தலைவராக இருப்பவர் தனது மரணத்துக்கு முன்பாக ஒருவரை சுட்டிக்காட்டுவார், அவர்தான் அதன்  தலைவராக இருப்பார். ஜெர்மனியில் சிறு பான்மையினர் பிரச்சனையை எவ்வாறு கையாண்டார்களோ அதை இந்தியாவில் பின்பற்றுவது என்பதே ஆர்எஸ்எஸ் அமைப் பின் வெளிப்பாடுகளில் ஒன்று. கொத்துக் கொலைகள் மூலம் சிறுபான்மையினரை கொன்று அழித்ததே ஜெர்மனியின் அனுபவம்.  இதுதான் இந்தியாவுக்கான பாதை என கோல் வால்கர் எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இது ஒரு பாசிச அமைப்பாகும்.

முசோலினியின் நகல் ஆர்எஸ்எஸ்

இப்போது இந்திய அரசமைப்பு சாசனத்தில் உள்ள ‘சோசலிச, மதச்சார்பற்ற’ என்பதை மாற்ற வேண்டும் என்கிறார்கள். பாசிஸ்ட்  அமைப்பாக ஆர்எஸ்எஸ்-சை கட்டமைப்ப தற்காக டாக்டர் மூஞ்சேயை வெளிநாட்டுக்கு பயிற்சி பெற அனுப்பினார்கள். ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் வெளிப்படுத்தும் இந்த பாசிசம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. ஹிட்லர், முசோலினியிடமிருந்து பெற்றதுதான் இந்த பாசிசம். அவர்கள் எப்படி அமைப்பை உருவாக்கினார்கள், எப்படி செல்வாக்கு பெற்றார்கள், எப்படி பயிற்சி அளித்தார்கள் என்பதைக் கற்றறிந்து, இறக்குமதி செய்தது தான் ஆர்எஸ்எஸ்-சின் பாசிசம். முசோலினியை சந்தித்தது பற்றி புளகாங்கிதத்தோடு தனது நூலில் மூஞ்சே குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற நூலகத்தில் அந்நூல் உள்ளது. அதன் நகல் எனது பையிலும் உள்ளது.

பாசிச எதிர்ப்பு அணிக்கு  முன்மாதிரி தமிழ்நாடு

இத்தகைய பாசிசத் தன்மை கொண்ட ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்கொள்ளத்தக்க அமைப்பை உருவாக்க வேண்டிய பொறுப்பு  நம்முன் உள்ளது. ஆர்எஸ்எஸ் கட்டுப் பாட்டில் உள்ள பாஜகவைத் தோற்கடிக்க பெரிய அளவிலான அமைப்பை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை உள்ளது. மிகவும் பெருமைக்குரிய வகையில்- அத்தகைய ஆர்எஸ்எஸ் - பாஜக எதிர்ப்பு இயக்கத்தை தமிழ்நாட்டு மக்கள் உருவாக்கி இருக் கிறீர்கள். இதற்காக உங்களை பாராட்டு கிறேன். இந்தியாவில் உருவாக வேண்டிய பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு முன்னணியின் விரிவடைந்த பெரிய அளவிலான அமைப்புக் கான முன்மாதிரியாக தமிழ்நாடு உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்து, இவர்களை தேர்தல் மூலமாக அகற்றுவது இந்தியஜனநாயகத்தில் அசாதாரணமான ஒன்றல்ல. அதற்காக நாம் கடுமையாக உழைத்தாக வேண்டும். அதுகுறித்த பார்வை மற்றும் தெளிவை ஒவ் வொரு கட்சியும் வெளிப்படுத்த வேண் டும். அதில் அங்கொன்றும் இங்கொ ன்றுமாக சில குறைபாடுகள் உள்ள தை சுயவிமர்சனமாக சுட்டிக்காட்டு கிறோம். ஒன்றிய அதிகாரத்தில் இருந்தும், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், மாநிலக் கட்சி களுடன் கூட்டணி அமைத்து ஆளும் மாநிலங்களிலும்- அவர்களை தோற் கடித்தாலும்கூட அவர்கள் செலுத்திய விஷம் பரவாத இடம் ஒன்றுமில்லை.

கீழடி நாகரீகத்தை ஏற்காத பாஜக

ராணுவத்தில், நீதித்துறையில், அதிகார வர்க்க தளத்தில், முற்போக்கு இயக்கத்துடன் கரம்கோர்த்து நிற்ப வர்களிடம்கூட வகுப்புவாத திணிப்பு நடக்கிறது. ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் இந்து வகுப்புவாதம் எத்தகைய கொடூரமானது என்பதற்கு, அது  மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற தைவிட கூடுதலான அராஜகத்தை வேறெங்கும் காண முடியாது. ஆர்எஸ்எஸ்-இன் வகுப்புவாத தாக்கு தல்களின் தொடர்ச்சியாக வரலாற்றை வளைத்து ஒடிக்கிறார்கள். கீழடி அகழ்வாராய்ச்சியில் சிந்து நாகரீ கத்துக்கு முந்தைய பொருட்கள் கண்ட றியப்பட்டுள்ளன. வரலாற்று அறி வியல் அடிப்படையிலான சான்றுகள் கிடைத்த உடன் வேறு ஆதாரங்களை கேட்கிறது பாஜக அரசு.

நீதிமன்ற செயல்பாட்டையே முடக்கும் மோடி அரசு

உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு  தாக்கல் செய்தால் நரேந்திர மோடியும் அவரது கூட்டாளிகளும் தீர்ப்புகளை செல்லாமல் ஆக்குகின்றனர். தமிழ் நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய 10  தீர்மானங்களை இங்குள்ள ஆளுநர் கையெழுத்திடாமல்- சட்டமாக்க விடாமல் தடுத்து ஆண்டுக்கணக்கில் நிலுவையில் வைத்திருந்தார். உச்சநீதிமன்றம் ‘அஸ் சூன் அஸ் பாசிபிள்’ (எவ்வளவு  விரைவாக சாத்தியமோ அவ்வளவு விரைந்து) என்பதற்கான விளக்க மளித்தும், சட்டங்கள் உடனடியாக அமலுக்கு வரும் எனவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பளித்தது. அதனை அமல்படுத்த முடியாத ஒரு தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் எப்படி  அளித்தது. நீதிமன்ற செயல் பாட்டையே ஒன்றிய அரசு கேள்விக் குறியாக்குகிறது. மற்றொரு உதாரணம் தில்லி மாநில  அரசு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான நட வடிக்கையாகும். நாட்டின் தலைநகர் தில்லி என்பதால், அங்கு காவல் மற்றும் நிலம் தொடர்பான அதிகாரம் ஒன்றிய அரசிடம் இருந்தது. ஆனால், கெஜ்ரி வால் முதல்வராக இருந்தபோது மாநி லத்தின் அனைத்து அதிகாரத்தையும் மோடி அரசு கையில் எடுத்துக் கொண்டது. அதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் கெஜ்ரிவால் முறை யிட்டார். நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் உள்ள 2 அதிகாரங்கள் தவிர மற்றவை மாநில அரசுக்கே என தீர்ப்பளித்தது. ஆனால், அந்த தீர்ப்பை செல்லாமல் ஆக்கும் கையில் அவசர சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றியது.

இடதுசாரிகளின் முன்னேற்றம்

இடதுசாரிகளுக்கு சில பின்னடை வுகள் உலகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்பட்டபோதிலும் இலங்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உலகத்தில் எங்கு முற்போக்கு சக்திகள் வளர்ந்தாலும் அதனை தகர்ப்பது அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் வழக்கம். குண்டு  வீசியும், சிஐஏ மூலம் சதித்திட்டங் களை தீட்டுவதும் வழக்கம். கேர ளத்தில் கம்யூனிஸ்ட் அரசை கவிழ்க்க ‘விமோசன சமரம்’ (விடுதலைப் போராட் டம்) நடத்த ஏற்பாடு செய்தது அமெரிக்கா. அதே அமெரிக்காவின் நியூயார்க் மேயர் தேர்தலில் அங்குள்ள ஜனநாயக கட்சி வேட்பா ளராக இடதுசாரி அணுகுமுறை கொண்ட சோரன் மம்தானி போட்டியிடு கிறார். அவர் தேர்வு செய்யப்படலாம் என தெரிந்த உடன் அவருக்கு எதி ராக மோடி பாணியில் டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.

அதிமுக - பாஜகவை தோற்கடிப்போம்

தமிழ்நாட்டில் வெறுப்பு, வகுப்பு வாத கலவரத்தின்- ரத்தம் தோய்ந்த கரங்களுடன் வரும் ஆர்எஸ்எஸ்-சையும் அவர்களது கட்சியையும், அவர்கள் கூட்டணி அமைத்துள்ள அதிமுகவையும் தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்பது செங்கொடி இயக்கத்தின் முதல் கடமை. நாடாளுமன்றத் தேர்தலில் செய்ததுபோல் அடுத்த ஆண்டு நடக்க விருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் இதே பாதையில் நாம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். அதேபோன்று இந்தியாவில் உள்ள ஒரே ஒரு இடதுசாரி அரசாக உள்ள கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசைப் பாதுகாப்பதில் கேரள எல்லையில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட செங்கொடி இயக்கமும் பங்காற்ற வேண்டும். ஜூலை 9-இல் இந்தியா முழுவதும் நடக்கும் பொதுவேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு எம்.ஏ. பேபி பேசினார்.  முன்னதாக, மாநாட்டுக்கு மாவட்டச் செயலாளர் ஆர். செல்ல சுவாமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் உள்ளிட்டோர் பேசினர்.