மதுரை:
உதவிப் பேராசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் 28.8.2019-இல் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், உயர்கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டை ரமேஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” நான் எம்.எஸ்,சி., (இயற்பியல்), எம்.பில்., மற்றும் பி.எட்., முடித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள் ளேன். உதவிப் பேராசிரியராகப் பணிபுரிவதற்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றுள்ளேன். தமிழ கத்தில் அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் நேரடியாக 2,340 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் 28.8.2019-இல் அறிவிப்பாணை வெளியிட்டது.இந்த அறிவிப்பாணையில் ஆசிரியர் பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண், கல்வித் தகுதிக்கு ஒன்பது மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு பத்து மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மொத்தமுள்ள 34 மதிப்பெண் ணில் நேர்முகத் தேர்வுக்கு 29 சதவீதமதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பணி நியமன முறைகளில் மொத்த மதிப்பெண்ணில் நேர்முகத் தேர்வுக்கு 15 சதவீத த்துக்கு மேல் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றமும், உயர்நீதி மன்றமும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேர்முகத் தேர்வுக்கு 29 சதவீத மதிப்பெண் வழங்குவது சட்டவிரோதம். இந்த மதிப்பெண் நடைமுறையால் ஒருசார்பு நிலையும், பாரபட்சமும் அதி கரிக்கும்.
ஆசிரியர் பணி அனுபவத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மதிப் பெண் விகிதம், பல்கலைக்கழக மானியக்குழு விதிக்கு எதிரானது. எனவே உதவிப் பேராசிரியர் தேர்வு முறை தொடர்பாக உயர் கல்வித்துறை 2013-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை மற்றும் அதனடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் 28.8.2019-இல் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும், பல்கலைக்கழக மானியக்குழு 18.7.2018-இல் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்யவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த மனுவை வியாழனன்று விசாரித்த நீதிபதி வேலுமணி உயர்கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.