சென்னை:
திரையரங்குகளை 100 விழுக் காடு இருக்கைகளுடன் இயங்க அனுமதியளித்த தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் திரையரங்குகள் 50 விழுக்காடு இருக்கைகளுடன் இயங்க அனுமதியளித்து, கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தார்.
தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 100 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதியளித்து கடந்த 4ஆம் தேதி தலைமைச்செயலாளர் உத்தரவுப் பிறப்பித்துள் ளார்.இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்து, தனி மனித விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தொடரும்படி உத்தரவிடக்கோரியும் கோபாலபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டித்து 2020 டிசம்பர் 31ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாகவும், காணும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார, விளையாட்டு, மதம் மற்றும் கல்வி சார்ந்த அனைத்து வகையான கூட்டங்களிலும், 50 விழுக்காடு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அதிகபட்சமாக 200 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளில் நூறு விழுக்காடு இடங்களையும் அனுமதித்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.மேலும், இந்தியாவில் தடுப்பூசிகள் போடும் பணிகள் இன்னும் தொடங்காத நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக வியாழனன்று (ஜன.7) பிற்பகல் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய வழக்கு இல்லை என்பதால், வாசிக்க மறுப்புத் தெரிவித்தனர். மேலும், வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் போது விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்