tamilnadu

கேட்க வேண்டிய இடத்தில் கேட்கப்படாத சரியான கேள்வி!

இந்திய ஒன்றிய அரசின் இணை அமைச்சருக்கு சமமான அந்தஸ்து கொண்ட, தேசிய தூய்மைப் பணி யாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் இரண்டு நாள் பயணமாக திருப்பூருக்கு வந்திருந்தார். டிசம்பர் 1ஆம் தேதி புதன்கிழமை மாலை, இங்குள்ள தனியார் சாயஆலையில் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தபோது உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினரை சந்தித்ததுடன், அந்த  சம்பவம் நடைபெற்ற சாயஆலையையும் அவர் பார்வை யிட்டார். உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத் தருவதாக உறுதியளித்துச் சென்றார். இரண்டாவது நாளான வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் குறித்த ஓர் ஆய்வுக் கூட்டத்தை அவர் நடத்தினார்.

திருப்பூர் மாநகராட்சி உள்பட பல்வேறு நகராட்சி கள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.  ஒன்றிய அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முன்னிலையில் தூய்மைப் பணியாளர்களை பங்கேற்கச் செய்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தது உண்மை யிலேயே வரவேற்கத்தக்கது. அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டையாக அழுந்திக் கிடக்கும் சமுதாயத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் பார பட்சம், அநீதியை அங்கே பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது அரி தானது. சம்பள வெட்டு, பணி நிரந்தரமின்மை, பணிச்சுமை, சட்ட உரிமைகள் மறுப்பு, குடியிருப்பு தேவை என தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அவர்கள் எடுத்து வைத்தனர். இவர்களது குறைகளைக் கேட்டறிந்த வெங்கடேசன், தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்தாமல், ஒப்பந்த முறையில் பணிக்கு அமர்த்தியிருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஒப்புக் கொண்டு அதற்கு தீர்வுகளை முன்வைத்து பதில் கூறினார்.

மோடி அரசிடம் முன்வைப்பாரா?

அப்படி பதில் கூறியபோது, முக்கியமான கொள்கைப் பிரச்சனை ஒன்றையும் முன்வைத்தார். அதாவது “தமிழகம் முழுவதும்  தூய்மைப் பணியாளர் ‘ஒப்பந்த முறையை’ ஒழிக்க வேண்டும், ‘லாபம்’ ஈட்டக்கூடிய தூய்மைப் பணியை அரசே நடத்த வேண்டும்” என்று கூறினார். இதுவும் சரியானதுதான். ஆனால் சரியான இடத்தில் இதை அவர் துணிந்து சொல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம். அந்த சரியான இடம் என்பது ஒன்றிய மோடி அரசு தான்! அங்கு அவர் இதைச் சொல்வாரா என்பதுதான் நாம் முன்வைக்கும் கேள்வி. பொதுவாக தூய்மைப் பணி என்பது உள்ளாட்சி நிர்வா கத்தின் கீழ் வருகிறது. உள்ளாட்சி நிர்வாகமும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. எனவே மாநில அரசு இவ்விச யத்தில் மாற்றுக் கொள்கையை அமலாக்க வேண்டும். ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும் என்று கேட்பது நியாய மானதுதான். ஆனால் அந்த நியாயத்தை விட பெரிய நியாயம் ஒன்று உள்ளது. அது மாநில அரசின் அதிகாரங்களை ஆக்கிர மிக்கும், அதிக அதிகாரம் படைத்த ஒன்றிய அரசு இந்த விச யத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான்! ஒப்பந்த தொழிலாளர் முறை என்பது ஏதோ இங்கொன் றும், அங்கொன்றுமாக நடைபெறும் விசயம் அல்ல. அனைத்து தொழில் மற்றும் சேவைத் துறைகளிலும் ஒப்பந்த முறை பரவியிருக்கிறது. தனியார் துறையில் மட்டுமின்றி, அரசுத் துறைகளிலும் இந்த முறை திணிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவை ஆளும் ஆட்சியாளர்களின் அடிப்படைக் கொள்கை திசைவழியில் ஏற்பட்ட மாற்றம்தான் இதற்கு முக்கிய காரணம். தாராளமய கொள்கை அமலாக்கத்தில் பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பை ஒழித்து, சட்ட உரிமை கள் இல்லாத தன்மை ஏற்படுத்தப்படுகிறது. வேலையில் “அமர்த்து, துரத்து” என்ற கொள்கை எல்லா இடங்களிலும் திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் ஒப்பந்த முறை

ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே, பிஎஸ்என்எல், தபால் தந்தி உள்பட பல துறைகளிலும் இது தான் நடைபெறுகிறது. இது தவிர மாநில அரசின் நிதி அதிகாரத்திலும் ஒன்றிய அரசு மூக்கை நுழைக்கிறது. ஜிஎஸ்டி வரிப் பங்கை தராமல் இழுத்தடிப்பது ஒரு பக்கம், நிதி மேலாண்மை ஒழுங்குமுறை சட்டம் என ஒன்றை நிறைவேற்றி வைத்துக் கொண்டு, மாநில அரசின் நிதிப் பற்றாக்குறை 5 சதவிகிதத்திற்கு மிகக்கூடாது என்று, ஒரு தடையையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். அத்தோடு செலவைக் குறைக்க வேண்டும் என கொள்கை வழிகாட்டுதலை உருவாக்கி வைத்து, மாநில அரசுகள் மக்க ளுக்கு சேவையாக செய்ய வேண்டிய கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படையான பல பணிகளையும் கைகழுவச் சொல்கின்ற னர்.  அவற்றை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். இடதுசாரிகள் அல்லாத பல மாநில அரசுகளும் ஒன்றிய அரசின் இந்த நிலைபாட்டை பின்பற்றிச் செயல்படக்கூடிய நிலையே உள்ளது. ஆகவே தமிழகத்தில் தூய்மைப் பணியில் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்க டேசன், முதலில் இதைச் சொல்ல வேண்டிய இடம் தில்லி! மோடி அரசிடம் தான்!! அங்கே சொல்லாமல் இங்கே வந்து சொல்கி றார் என்றால், அவர் அறியாமையில் இருக்க வேண்டும் அல்லது அறிந்தும் அதை மறைத்து உள்நோக்கத்தோடு இங்கிருப்ப வர்களை குற்றம்சாட்டி பலிகடா ஆக்குவதாக இருக்க வேண்டும். 

லாபக்கணக்கு

தேசிய அளவில் ஒன்றிய அமைச்சருக்கு நிகரான அதிகார அந்தஸ்தில் இருக்கும் வெங்கடேசன், அறியாமை யில் இதைச் சொன்னார் என்பது நம்பக்கூடியது இல்லை. அப்படி யானால் அவர் இங்கே மட்டும்  சொல்வது, ஏதோ உள்நோக்கம் கொண்டது என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியானால் அவருக்கு தூய்மைப் பணியாளர்கள் மீது உண்மையான அக்கறை இல்லை, தனது பதவியைப் பயன் படுத்தி அவர்கள் சந்திக்கும் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக குறுகிய அரசியல் செய்கிறார் என்றே முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

இன்னொன்றையும் இங்கே கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். வெங்கடேசன் பேசியபோது தன்னையும் அறி யாமல், “லாபம் ஈட்டும் தூய்மைப் பணியை...” என்று வார்த்தை களை உதிர்த்து இருக்கிறார். அதாவது தூய்மைப் பணி என்பது பொது சுகாதாரம் காக்க வேண்டிய அரசின் அடிப்படை கடமை!  லாப நட்டக் கணக்குப் பார்க்கும் தொழில் அல்ல. ஆனால் வெங்க டேசனுக்கோ இது லாபம் ஈட்டும் தொழிலாகத் தான் தெரிகிறது. என்ன செய்வது, அவர் பாஜக அரசின் அங்கம் அல்லவா? லாபம் தான் அவர்களின் குறிக்கோள்! அதுவும் அரசு லாபத்தை விட தனியார் லாபத்துக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்கள் அல்லவா?! ஆகவே தூய்மைப் பணியாளர்களின் நியாயம் குறித்து அவர் பேசியது கூட அவர்களின் நன்மைக்காக அல்ல, வெங்கடேசன் யாருக்கு சார்பானவரோ, யாரிடம் இருந்து அவர் வந்திருக்கிறாரோ அவர்களுக்கு அரசியல் லாபம் பார்க்கும் கணக்கு தான் இது!!

- வே.தூயவன்